எங்கிருந்தோ வந்தாள் - அத்தியாயம் 01
"வணக்கம்! இன்றைய முக்கியச் செய்திகள். சென்னையில் உள்ள அரசு பொது மனநல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், இருவது பேர் உயிழந்தனர். இதுவரை பத்து பேர், கவலைக்கிடமான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இது பற்றிய கூடுதல் விவரங்களுடன், நமது செய்தியாளர் மிதுன் களத்தில் உள்ளார். அவரிடம் இது பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்வோம்.
“வணக்கம் மிதுன்! இந்த சம்பவம் எப்போ நடந்துச்சு?! இதுவரை எத்தனை பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்?”
“வணக்கம்! தமிழ்செல்வி! இந்த சம்பவம் இன்று அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் நடைபெற்றுள்ளதாகச் சொல்லப்படுது. இருவது பேர் சம்பவ இடத்திலையே உடல் கருகி உயிரிழந்துட்டாங்க. இதுவரை பத்து பேர் கவலைக்கிடமான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்காங்க.”
“காவல்துறை தரப்பில் இந்த சம்பவத்தைப் பற்றி என்ன சொல்றாங்க மிதுன்?”
“பெண் நோயாளிகள் தங்கி இருந்த வார்டில் இந்த தீ விபத்து நடைபெற்றுள்ளதாகக் காவல்துறை தரப்பில் சொல்றாங்க தமிழ்செல்வி. இந்த விபத்துக்கு மின்கசிவு காரணமா இருக்கலாம், அப்படின்றது காவல்துறையோட சந்தேகம்.”
“காவல்துறையோட அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன மிதுன்?”
“தீ விபத்து சம்பந்தமாகக் காவல்துறை சார்பா வழக்குப் பதிவு செஞ்சு, விசாரிச்சுட்டு வராங்க. விசாரணை அதிகாரியா, ACP சுதர்ஷன் அவரை நியமிச்சு இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில அவர் இந்த மருத்துவமனைக்கு வரலாம் அப்படின்னு எதிர்பார்க்கப்படுது.”
“தங்களோட விவரங்களுக்கு நன்றி மிதுன்! காவல்துறை அதிகாரி வந்ததும் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.” சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்த செய்தி வாசிப்பாளர், “இனி அடுத்த செய்திகளைப் பார்க்கலாம்.” என்றுவிட்டு வேறு செய்திகளுக்கு சென்றுவிட, இங்கே மருத்துவமனை வளாகத்தில், அந்தப் பத்து மணி வெயிலில் வேர்த்துக்கொட்ட நின்று கொண்டிருந்த மிதுன், கேமராமேனும் தனது நண்பனுமான அஷ்வினிடம், ‘கட்’ என்பது போல செய்கையைக் கொடுத்துவிட்டு, தண்ணீர் குடிப்பதற்காகத் தங்களது வேனை நோக்கிச் சென்றான்.
மிதுன், இருபதுகளில் இறுதியில் இருப்பவன். படித்தது ஜர்னலிசம். பிடித்ததும் ஜர்னலிசம். களத்தில் இறங்கி செய்தி தேகரிப்பது அவனுக்குப் பிடித்த விஷயம் என்பதால், கடந்த பல வருடங்களாக ‘24x7நியுஸ்’ தொலைகாட்சியில் ரிப்போர்டராக வேலை செய்கிறான்.
அன்றைய தினம் விபத்து என்பதால், அவசர ஊர்திகள் வருவதும் போவதுமாக இருக்க, கூடவே அருகில் உள்ள காவல் நிலையத்தின் அதிகாரிகளும் வந்திருக்க, மருத்துவமனை வளாகம் சற்றே கூட்டமாக இருந்தது.
குனிந்தபடி கைபேசியில் எதையோ படித்துக்கொண்டே நடந்து வந்து கொண்டிருத்த மிதுன் மேல் நச்சென்று யாரோ மோத, அவன் கையில் இருந்த கைபேசி கீழே விழுந்தது. உடனே குனிந்து தனது பேசியை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தவன், “ஆள் வர்றது தெரியலையா?! இப்படியா வந்து மோதுவீங்க?!” என்று கோபத்துடன் கத்தப்போனவனுக்கு, எதிரில் நின்றிருந்தவளை பார்த்ததும், முகத்தில் ஒரு கேலி புன்னகை அரும்பியது.
“ஓஹ்! நீயா? என்ன இவ்ளோ லேட்?! எப்போவும் எங்களுக்கு முன்னாடியே ஸ்பாட்டுக்கு வந்துடுவ, இன்னைக்கு என்ன ஆச்சு? ஓஹ்! மேக்கப் போட லேட் ஆகிடுச்சோ!” என்று சிரிப்புடன் சொல்ல,
மிதுனை முறைத்தபடி அவனுக்கு எதிரில் நின்றிருந்தாள், சஞ்சனா!
மிதுன், ‘24x7நியுஸ்’ தொலைகாட்சியின் செய்தி சேகரிப்பாளர் என்றால், சஞ்சனாவோ, அவனின் போட்டி தொலைக்காட்சியான, ‘குடியரசு’ தொலைகாட்சியின் செய்தி சேகரிப்பாளர். இருவருக்குமே எப்பொழுதும் முட்டிக்கொள்ளும். களத்திற்கு யார் முதலில் வருவது, ‘ப்ரேகிங் நியூசை’ யார் முதலில் சேகரிப்பது என இருவருக்குள்ளும் போட்டி நிலவி கொண்டே இருக்க, பார்க்கும் நேரம் எல்லாம் ‘சுடச்சுட நியுஸ்’ போலப் பற்றிக்கொள்ளும்.
எப்பொழுதும் களத்திற்கு முன்பே வந்துவிடும் சஞ்சனா, தாமதமாக வரும் மிதுனை வம்பிழுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்க, இன்று அவளுக்குப் பதில் கொடுக்கச் சந்தர்ப்பம் கிடைத்த மகிழ்ச்சியில் சற்று அதிகமாகவே கிண்டலடித்தான் மிதுன்.
பதிலுக்கு சஞ்சனாவோ, “என்ன டா? கிண்டலா? நான் என்னைக்கு மேக்கப் போட்டு நீ பார்த்த? சும்மா சொல்ற!” என்று ஆக்ரோஷமாகக் கத்தியவள், “பொம்பளைங்களுக்கு இருக்கிற பிரச்சனை எல்லாம் உனக்கு என்ன தெரியப்போகுது.” என்று வாய்க்குள் முனங்க,
“ஷப்பா! கோபத்தைப் பாரு! இதே மாதிரி தான எங்களுக்கும் இருக்கும்.” மிதுனோ மேலும் அவளைக் கோபமாக்க, சட்டென்று அவனை நோக்கி எகிறிக் கொண்டு வந்தாள் சஞ்சனா.
அங்கே சண்டை வருவது போல இருக்கவும், “சஞ்சு! வா! நமக்கு வேலை இருக்கு.” என்றபடி அங்கிருந்து அவளை இழுத்துக்கொண்டு சென்றான் அவளின் கேமராமேன், தினேஷ்.
போகும் அவளைப் பார்த்தபடி, “போடி! போ!” என்று சிரிப்புடன் சொன்ன மிதுன், அவளின் முகத்தில் தெரிந்த சோர்வை கவனிக்கவும் மறக்கவில்லை.
தண்ணீர் குடித்துவிட்டு திரும்பி வந்தவனின் கையில் சில்லென்று இடம் பிடித்திருந்தது மாம்பழச்சாறு குளிர்பானம். சஞ்சனாவின் ஃபேவரிட்!
சுற்றும் முற்றும் பார்வையை ஓட விட்டவனின் கண்களில், தூரத்தில் தினேஷுடன் பேசிக் கொண்டிருந்த சஞ்சனா தென்பட்டாள். சோர்வாக முகத்தை வைத்துக்கொண்டு அவள் ஏதோ சொல்ல, ‘இங்கேயே இரு!’ என்பது போல சைகை செய்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் தினேஷ். வயிற்றைப் பிடித்துக்கொண்டு சோர்வாக அங்கு இருந்த திண்டில் அமர்ந்தாள் அவள்.
விறுவிறுவென்று சஞ்சனா அருகில் சென்றவன், குளிர்பான பாட்டிலை அவள் முன் நீட்ட, நிமிர்ந்து பார்த்தாள் அவள். ஆனால் பதில் சொல்லாமல் முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக்கொள்ள, பாட்டிலின் மூடியை திறந்துவிட்டு, குனிந்து அவள் கையைப் பிடித்து அதில் பாட்டிலை வைத்த மிதுன், “குடி! ஸ்டமக் பெயின் கொஞ்சம் குறையும்.” என்று அழுத்தமாகச் சொல்ல, ஏனோ அந்த நேரம் அந்தக் கரிசனத்தில், சட்டென்று கண்களில் நீர் தேங்கியது அவளுக்கு.
சஞ்சனா தன்னையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் தலையைப் பிடித்துச் சற்றே பின்பக்கம் சாய்த்து, பாட்டிலை அவள் வாயில் கவிழ்த்தான் மிதுன். மறுப்பேதும் தெரிவிக்காமல், கடகவெனக் குடிக்க ஆரம்பித்தாள். சில்லென்று உள்ளே போன குளிர்பானம், முள்ளாய் குடைந்து கொண்டிருந்த வயிற்று வலிக்கு இதமாக இருந்தது. வலியும் சற்றே மட்டுப்பட்டது.
சஞ்சனா குடித்து முடித்ததும், “ரொம்ப முடியலனா, சொல்லிட்டு வீட்டுக்குப் போ! இல்லனா இங்க ஹாஸ்பிட்டல்ல டேப்லட் எதுவும் வாங்கிட்டு வரட்டுமா?!” கரிசனமாகக் கேட்டான் மிதுன்.
“இல்ல வேண்டாம். டேப்லட் பேக்ல வச்சுருக்கேன். கொஞ்சம் டயர்டா இருக்கு, அவ்ளோதான்.” குனிந்தபடி அவள் சொல்ல, சில நொடிகள் நின்று அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த மிதுன், பின் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து சென்றான்.
போகும் அவனைப் பின்தொடர்ந்தது, சஞ்சனாவின் கண்கள்.
அதற்குள் அவள் அருகில் வந்திருந்த தினேஷ், சஞ்சனாவின் கையில் இருந்த குளிர்பான பாட்டிலை பார்த்துவிட்டு, “வந்துட்டு போயிட்டானா! வரும்போதே இது தான் நடக்கும்ன்னு நினைச்சேன். அதே மாதிரியே நடந்துடுச்சு. ஒவ்வொரு தடவையும் இதே வேலையா போச்சு, புருஷனுக்கும், பொண்டாட்டிக்கும்.” என்றபடி அலுத்துக்கொள்ள, லேசான புன்னகை அரும்பியது சஞ்சனாவின் முகத்தில்.
அவள் முன் மண்டியிட்டு அமர்ந்த தினேஷ், “அவன் சொல்றதை தான் கேக்ககூடாதா டி?!” என்று நூறாவது முறையாகக் கெஞ்ச,
“வீட்டில டாக்டருக்குப் படிக்கச் சொன்னப்போ, எனக்கு இது தான் பிடிக்கும்ன்னு அடம்பிடிச்சு அவர் மட்டும் ஜர்னலிசம் படிச்சு ரிப்போர்டரா வேலை பார்க்கலாம். நான் எனக்குப் பிடிச்சதை செய்யக் கூடாதா தினேஷ்?! எனக்கும் பேஷன் இருக்காதா டா?!”
“இப்போ இல்லைன்னு யார் சொன்னா? உனக்குன்னு எந்த ஆசையும் பேஷனும் இருக்கக் கூடாது அப்படின்னு என்னைக்காவது அவன் உன்கிட்ட நடந்திருக்கானா சொல்லு?! ட்ரெஸ்ல இருந்து, இதோ இந்த வேலை வரை, எல்லாமே உன் இஷ்டப்படி தானே விட்டிருக்கான். என்னைக்காச்சும் ‘நான் ஆம்பள, என் இஷ்டப்படி தான் நீ நடக்கணும்’ அப்படின்னு உன்கிட்ட பிஹேவ் செஞ்சிருக்கானா? அந்த உரிமையைக் கூட அவன் எடுத்துக்கிட்டது இல்லையே சஞ்சு. என்னைக்காச்சும் உன்னை அவனுக்குக் கீழன்னு நினைச்சு இருக்கானா?”
பதில் சொல்லாமல், அமைதியாக இருந்தாள் சஞ்சனா.
“பொம்பளைங்கள எப்போவும் புரிஞ்சிக்கவே மாட்டேங்குறீங்கன்னு குத்தம் மட்டும் சொல்றீங்களே! நீங்க மட்டும் என்னைக்காச்சும், ஆம்பளைங்க பயத்தைப் புரிஞ்சிக்குறீங்களா டி? சொல்ல சொல்ல கேட்காம இஷ்டத்துக்கு நடந்துகிறது. ஆரம்பத்தில உன்னைப் போக வேண்டாம்ன்னு சொன்னானா? இல்லைல. அன்னைக்கு கடத்தல்காரங்கள பிடிக்கப்போறேன்னு போய், அவனுங்க கையில மாட்டிக்கிட்டு.....ஷப்பா! அன்னைக்கு நீ பிழைச்சு வந்ததே பெரிய விஷயம்னு ஆகிடுச்சு. அதுக்கு அப்புறம் தானே இந்த வேலை வேண்டாம்ன்னு சொல்றான். அதை ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குற?”
இப்பொழுதும் அவளிடம் மவுனம்!
“போதும் டா சாமி! இத்தோட என்னை விடுங்க. உன்கிட்ட சொல்லி சொல்லி, எனக்குப் பைத்தியம் பிடிச்சிடும் போல! இப்போ கூடப் பாரு, தூரத்தில இருந்து நம்மளை தான் பார்த்துட்டு இருக்கான் உன் புருஷன். உனக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுக்கச் சொல்லி, அங்க இருந்தே கண்ணாலையே மிரட்டுறான் பாரு.”
தினேஷ் சொன்னதும் நிமிர்ந்து பார்த்தாள் சஞ்சனா. ஆம்! அவன் சொன்னது போலவே, தினேஷை முறைத்துக்கொண்டு நின்றிருந்தான், அவளின் கணவன் மிதுன்.
‘முக்கூம்! இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை!’ என்று மனதுக்குள் நினைத்தவள், கணவனைப் பார்த்து வாயை சுளித்துவிட்டு தினேஷுடன் உணவருந்த சென்றாள்.
மிதுன், சஞ்சனா இருவரும் ஒரே கல்லூரியில் தான் இதழியல் படித்தனர். படிக்கும்பொழுதே அவர்களுக்குள் நெருக்கமான நட்பு மலர, படிப்பை முடிக்கும்பொழுது அது காதலாக மலர்ந்திருந்தது.
கல்லூரி இரண்டாம் ஆண்டு முடியும் தருவாயில், நண்பர்களுடன் சேர்ந்து இருவரும் சின்ன அளவில் பத்திரிகை ஒன்றை நடத்தினர். அது சம்பந்தமாகச் சின்னச் சின்னச் செய்தி சேகரிப்பிலும் அவ்வப்பொழுது ஈடுபட்டு வந்தனர்.
படிப்பை முடித்ததும், வீட்டில் பெரியவர்களின் சம்மதத்துடன் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள, அதன் பின்பே, தொலைக்காட்சியில் செய்தி சேகரிப்பாளர் வேலை கிடைத்தது மிதுனுக்கு.
திருமணத்திற்குப் பின்பு சில மாதங்கள் வீட்டில் இருந்த சஞ்சனா, தன் படிப்பை வீணாக்க விரும்பாமல், தானும் தொலைகாட்சிக்கு வேலைக்குச் செல்வதாக மிதுனிடம் கேட்க, உடனே சம்மதம் சொல்லிவிட்டான் அவன்.
ஆனால் அவர்களின் துரதிஷ்டம், சஞ்சனாவுக்கு மிதுனின் தொலைகாட்சியின் பிஸினஸ் விரோதியான ‘குடியரசு’ தொலைகாட்சியில் வேலை கிடைத்தது. சஞ்சனா தான் யோசித்தாளே தவிர, மிதுன் தடையேதும் சொல்லவில்லை. கணவனின் சம்மதம் கிடைத்ததும் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டாள்.
ஆரம்பத்தில் இருவருக்கும் பிரச்சனை இல்லாமல் தான் சென்று கொண்டு இருந்தது அவர்களின் வேலை. இருவருமே வெறும் நியுஸ் ரிபோர்டராக இல்லாமல், சில சமயம் செய்திக்குத் தேவையெனில் ஆபத்தான புலனாய்வையும் மேற்கொள்ள வேண்டி வரும்.
அப்படித் தான் ஒரு தடவை, போதை பொருள் கடத்தல்காரர்கள் பதுங்கி இருக்கும் இடம் தெரியவரவும், அவர்களைப் பற்றிய ஃபூட்டேஜ் தங்களது தொலைகாட்சியில் தான் முதலில் வரவேண்டும் என்று நினைத்த சஞ்சனாவின் குழு, அவளுடன் அங்கே செல்ல, இவர்களின் வருகை தெரிந்து கடத்தல்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த, அதில் பலத்த காயம் அடைந்தாள் சஞ்சனா.
செய்தி கேள்விப்பட்டுத் துடித்துப் போனான் மிதுன். பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் முதலில் சொல்லிவிட, மனதால் இறந்து போனான். ஆயினும் எல்லோரின் வேண்டுதலின் பலனாக, உயிர் பிழைத்தாள் சஞ்சனா. கிட்டத்தட்ட இரண்டு மாதம், மனைவியின் அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டான் மிதுன்.
அதன் பின்பே ஆரம்பித்தது அவர்களுக்குள் பிரச்சனை. மருத்துவமனையில் இருந்து வந்த சில மாதங்களிலேயே வேலைக்குப் போவதாக சஞ்சனா சொல்ல, இனி வேலைக்குப் போக வேண்டாம் என்று திடமாக மறுத்தான் மிதுன்.
ஆனால் சஞ்சனாவோ, “ஆபத்துனா எல்லா வேலையிலும் தான் ஆபத்து இருக்கும். இதுக்கு எல்லாம் பார்த்துட்டு இருக்க முடியுமா? ஏன் நீங்க தினமும் வேலைக்குப் போயிட்டு வர்றதில்லையா? நான் போனா என்ன? ஒன்னும் செத்துகித்துப் போய்ட மாட்டேன்!” என்று வார்த்தையை விட, தன்னையும் மீறி அவளை அறைந்திருந்தான் மிதுன்.
அதன்பின் அவர்களுக்குள் ஒவ்வொரு நொடியும் சண்டை தான். மிதுன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்காத சஞ்சனா, ஒரு கட்டத்தில், மிதுனை பிரிந்து அவளின் பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டாள்.
தற்பொழுது இது நடந்து, சில மாதங்கள் ஆகிறது.
வீட்டில் நேருக்கு நேர் பார்க்க முடியாவிட்டாலும், வேலையின் பொருட்டு, தினமும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபின்பே அவர்களுக்கு அன்றைய பொழுது நகரும். அவர்களின் வேலை அப்படி!
மனநல மருத்துவமனை காப்பக வளாகம்! ஏக்கர் கணக்கில் பறந்து விரிந்து இருக்கும் மிகப் பெரிய காப்பகம் அது. அண்ணா பல்கலைகழக வளாகம் போல, அடர்ந்து வளர்ந்திருக்கும் புற்களும், ஆளுயுர மரங்களும், சருகுகள் நிறைந்த சிமென்ட் பாதையும் என, பார்ப்பதற்கு கிட்டத்தட்ட அடர்ந்த வணப்பகுதி போலக் காட்சியளிக்கும், அந்தப் பகுதி.
பெண் நோயாளிகள், ஆண் நோயாளிகள், மனநலம் முற்றிய நிலையில் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் நோயாளிகள், சிறைக் கைதிகள் என தனித்தனி பகுதிகளாகக் கிட்டத்தட்ட பத்து வார்ட்கள் உள்ளது. வார்டு என்பது தனிக் கட்டிடத்தைக் குறிக்கும். ஒவ்வொரு கட்டிடமும் கூரையாக ஓடுகள் கொண்ட, பெரிய ஹால் போன்ற அமைப்பு.
ஒவ்வொரு வார்டும் தனித்தனி சுற்றுச்சுவருடன், கேட் போட்டு மூடப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட தனித்தனி தீவு போல!
குறிப்பிட்ட அந்தப் பெண் நோயாளிகள் வார்ட்! தீ விபத்து நடைபெற்றிருந்த காரணத்தால், அதைச் சுற்றிலும், திரும்பும் திசை எங்கும் கருப்பு நிறத்தில் காட்சி அளித்தது. கட்டிடத்தைச் சுற்றி உடைந்த ஓடுகள் சிதறிக் கிடக்க, புற்கள் எல்லாம் கருகி போயிருந்தது. மரங்களோ, பாதி உயரத்திற்குக் கருப்பாகக் காட்சி அளித்தது.
வெளியே அப்படி என்றால், ஹாலின் உள்ளே, கரிகட்டையைப் போலக் கருகிய நிலையில் உடல்கள் விரைத்துக்கொண்டு படுத்திருந்தது.
இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டே மூக்கை கர்சீப்பால் மூடியபடி, சுற்றும் முற்றும் பார்வையைச் சுழல விட்டான், சுதர்ஷன்.
சுதர்ஷன், முப்பதுகளின் ஆரம்பத்தில் இருப்பவன், முதுகலை படிப்பை முடித்ததும், இரண்டு முயற்சிக்கு பிறகு, இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வெற்றி பெற்று, ஐ.பி.எஸ் பயிற்சி முடித்து, உதவி போலிஸ் கமிஷ்னராக வேலையில் அமர்ந்தவன், கடந்த ஏழெட்டு வருடங்களாக அப்பணியில் இருக்கிறான். கூடிய விரைவில் பதவி உயர்வு கிடைக்கும் என்று பேச்சுக்கள் அடிபடுகிறது.
பகவான் கிருஷ்ணரின் விரல் சொடுக்கை ஆணையாக ஏற்று, அடுத்த நொடி அவரின் எதிரிகளைப் பஸ்பமாக்கும் சுதர்ஷன சக்கிரத்தை போல, தன் உயர் அதிகரிகள் இடும் உத்தரவை கடமையாக ஏற்று, சமூக விரோதிகளைத் துவம்சம் செய்வதில் வல்லவன், இந்த சுதர்ஷன்!
போலீஸ் என்றால் பார்ப்பதற்கு இப்படித் தான் இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் இருக்கும் கற்பனையைப் போலவே, கோதுமை நிறத்தில், உயரமாக, கம்பீரமாக இருப்பான். அவனின் உயரம் தான் அவனுக்கு இப்பணி கிடைப்பதற்குக் கூடுதல் மதிப்பெண்ணை பெற்றுத் தந்தது.
அன்று அதிகாலை தீ விபத்து பற்றிய செய்தி கிடைத்ததும், உயர் அதிகாரியிடம் விவரத்தை தெரியப்படுத்திவிட்டு, உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்தவன், இறந்தவர்களைத் தவிர, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டு, இடத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.
அப்பொழுது அவனின் கைபேசி ஒலிக்கவும், எடுத்துப் பேசினான்.
“...”
“குட் மார்னிங் சர்!”
“...”
“எஸ் சார்! ஸ்பாட்ல தான் இருக்கேன்.”
“...”
“மொத்தம் இருவது பேர் இறந்து போயிருக்காங்க சர். பத்து பேர் சீரியஸ் கண்டிஷன்ல இருந்ததால, ஜி.எச்க்கு அனுப்பி இருக்கேன். இன்னும் நாலு பேருக்குக் கொஞ்சம் லேசான காயம், அதனால டாக்டரை வரவழைச்சு ட்ரீட்மென்ட் கொடுத்து இருக்கேன் சர்.”
“...”
“டீடைல்ஸ் கேட்டு இருக்கேன் சர். இன்னும் கொஞ்ச நேரத்தில கிடைச்சிடும்.”
“...”
“ஓகே சர்!” பேசிவிட்டு அவன் போனை வைக்கவும், அவன் அருகில் வந்தார், மருத்துவர்.
“நான் கேட்ட விவரம் கிடைச்சுதா டாக்டர்?”
“கிடைச்சுது சர். எங்க ரிகார்ட்ஸ் படி அந்த வார்டுல நேத்து நைட் மொத்தம் முப்பத்தஞ்சு பேர் இருந்திருக்காங்க.”
“வாட்?! முப்பத்தஞ்சு பேரா?! ஆனா இது வரை முப்பத்தி நாலு பேரைத் தான மீட்டிருக்கோம். அப்போ அந்த மிஸ்ஸிங் பெர்சன் எங்க? ஆர் யு ஷுயூர் டாக்டர், மொத்தம் முப்பத்தஞ்சு பேர் தானா?!”
“ஐயம் ஷுயூர் சர். மொத்தம் முப்பத்தஞ்சு பேர் இந்த வார்டுல அட்மிட் ஆகி இருக்காங்க. நேத்து நைட் தூங்க போகும்பொழுது கூட, முப்பத்தஞ்சு பேர் இருந்தாங்க. நைட் டியூட்டி பார்த்த நர்ஸ் கூட இதையே தான் சொன்னாங்க.”
“அந்த நர்ஸ கொஞ்சம் கூப்பிடுங்க டாக்டர்.”
“ஒன் செகண்ட் சர்.” என்று சொல்லிவிட்டு அந்த மருத்துவர் நகர்ந்துவிட, சுதர்ஷனுக்கு யோசனையாக இருந்தது.
‘முப்பத்தஞ்சு பேர்ன்னு டாக்டர் சொல்றார். இறந்தவங்க இருபது பேர், பத்து பேர் ஜி.எச்ல இருக்காங்க, இங்க நாலு பேர். மொத்தம் முப்பத்தி நாலு பேர் தானே வராங்க. அப்போ அந்த முப்பதஞ்சாவது ஆள் எங்க?’ வேகமாக அவனின் மூளை கணக்கிட்டது.
அவன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, மருத்துவர் அந்தச் செவிலியருடன் அங்கே வர, சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான்.
“சர், இவங்க தான் நேத்து நைட் டியூட்டில இருந்த நர்ஸ்.”
அந்தப் பெண், சுதர்ஷனை பார்த்து வணக்கம் சொல்ல, தலை அசைப்பில் அதை ஏற்றுக் கொண்டவன் அப்பொழுதுதான் கவனித்தான், அப்பெண்ணின் முகத்தில் ஒருவித பயமும், பதற்றமும் சூழ்ந்திருந்ததை.
“என்ன ஆச்சு சிஸ்டர்? ஏன் உங்க முகமெல்லாம் வேர்த்து இருக்கு?” முகத்தை ஆராய்ந்தபடி இவன் கேட்க,
“ஒ..ஒண்ணுமில்லை சர். இதுதான் முதல் தடவை இவ்வளவு பெரிய அளவில தீ விபத்த பார்த்தது. நிறைய பேர் இறந்து போய்ட்டாங்க. அதான் ஒருமாதிரி மனசுக்கு கஷ்டமா இருக்கு சர்.” திக்கித்திணறி பதில் சொன்னாள்.
அவளை கூர்மையாக ஒரு பார்வை பார்த்த சுதர்ஷன் பின் தன் கேள்விகளை கேட்க ஆரம்பித்தான்.
“மொத்தம் முப்பத்தஞ்சு பேர் இந்த வார்ட்ல இருந்தாங்கன்னு உங்களுக்கு நிச்சயமா தெரியுமா?”
“தெரியும் சர். இந்த வார்ட்ல மொத்தம் முப்பத்தஞ்சு பேர் இருந்தாங்க. தினமும் வழக்கமாகத் தூங்க போறதுக்கு முன்னாடியும் கணக்கெடுத்துட்டு தான் கேட்டை லாக் பண்ணுவோம். நேத்து நைட் தூங்கும்போது கூட கௌன்ட் பண்ணேன் சர். எல்லாரும் இருந்தாங்க. மிட்னைட் ஒரு மணிக்கு ரௌண்ட்ஸ் போகும்போது கூடப் பார்த்தேன் சர். முப்பத்தஞ்சு பேர் இருந்தாங்க....” மேற்கொண்டு ஏதோ சொல்ல வந்தவள், பேச்சை அத்தோடு நிறுத்திக் கொண்டாள்.
“வேற ஏதாவது சொல்லனுமா சிஸ்டர்?”
“இல்லை சர். ஒண்ணுமில்லை.”
“ம்ம். முப்பத்தஞ்சு பேர்ன்னு சொல்றீங்க, ஆனா இப்போ மொத்தம் முப்பத்தி நாலு பேர் தானே இருக்காங்க?! அப்போ மிஸ்ஸான அந்த ஒருத்தர் எங்க?”
“தெரியல சர். பாடிஸ் வேற கருகி போயிருக்கிறதால யாரு மிஸ்ஸிங்ன்னு கண்டுபிடிக்கிறது கஷ்டம்.” சற்றே பயத்துடன் அவள் சொல்ல, அவளை அங்கிருந்து அனுப்பிய சுதர்ஷன், தன்னுடன் வந்திருந்த கான்ஸ்டபிள் இருவரை அழைத்து, அந்த இடம் முழுவதும் தேடச் சொல்லிவிட்டு, தானும் தேடுதலில் ஈடுபட்டான்.
முதலில் அவர்கள் நினைத்தது, அந்த விடுபட்ட நபர் இறந்தவர் என்று தான். அப்படி நினைத்துக்கொண்டு தான் தேட ஆரம்பித்தனர்.
வார்டை சுற்றி தேடிக் கொண்டே வந்த சுதர்ஷன், கட்டிடத்தின் பின்பக்கம் வர, அவன் கண்களில் தென்பட்டது அது.
ஓடுகள், மரக்கிளைகள் எல்லாம் விழுந்து கிடக்க, அந்தக் குவியலின் நடுவில் ஏதோ வெள்ளையாகத் தெரிந்தது. உடனே அதன் அருகில் சென்று பார்த்தான். பெண்ணின் பாதம் போலத் தெரிந்தது. அடுத்த நொடி, மறைத்திருந்த மரக்கிளைகள், ஓடுகள் எல்லாவற்றையும் மடமடவென எடுத்துப் போட்டுவிட்டு பார்க்க, பார்த்தவன் அதிர்ந்து போனான்.
பச்சை நிற கௌனில், கண்களை மூடி மயங்கி கிடந்தாள் அவள்!
அவளின் ஆடையைப் பார்த்ததுமே புரிந்தது, அவளும் அந்த முப்பத்தி ஐந்து பேரில் ஒருவள் என்று.
உடனே சுதாரித்தவன், உயிர் இருக்கிறதா என தெரிந்துகொள்ள, அவள் நாசியில் விரல் வைத்துப் பார்த்தான். சுவாசம் இருந்தது.
அவளை ஒரு முறை, தலை முதல் பாதம் வரை ஆராய்ந்து பார்த்தான். கணுக்கால் வரை நீளம் இருந்த அந்த கௌன், முட்டிக்கு மேல் ஏறி இருந்தது. தோள் பட்டை பக்கம் ஆடை சரிந்து, அவளின் உள்ளாடையின் பட்டை தெரிந்தது. உடல் முழுவதும் கருப்பு புகையும், அழுக்கும் படிந்திருந்தது. நெற்றியில் காயம் இருக்க, நெற்றிப் பொட்டு வழியே தாடை வரை ரத்தம் வழிந்திருந்தது.
அவளின் இந்தக் கோலத்தைப் பார்த்ததும் அவளுக்கு ஏதாவது அசம்பாவீதம் நடந்திருக்குமோ என்று பயம் வந்தது சுதர்ஷனுக்கு. ஒருவேளை, யாரேனும் அவளை அறையை விட்டு கடத்தி சென்றிருப்பாரோ? அதன் காரணமாகத் தான் வெளியே கிடக்கிறாளோ? என பல கேள்விகள் அவனைக் குடைந்தது.
அதற்கு எல்லாம் இப்பொழுது நேரம் இல்லை என்பதால், அப்போதைக்கு அந்த நினைப்பை தள்ளி வைத்துவிட்டு, அவளின் ஆடைகளைச் சரி செய்தான். பின், கான்ஸ்டபிள் ஒருவருக்கு ஃபோன் செய்து விவரத்தை கூறியவன், ஆம்புலன்ஸ் எதுவும் நிற்கிறதா என்று கேட்க, இல்லை என்று பதில் வந்தது.
சரி என்றுவிட்டு ஃபோனை வைத்தவன், தனது கார் டிரைவருக்கு அழைத்துக் காரை தயார் நிலையில் வைத்திருக்கும்படி சொல்லிவிட்டு, அவளை நோக்கி குனிந்தவன், அவளின் தலைக்கு அடியில் கைகொடுத்து தூக்க முயற்சிக்க, கையில் எதுவோ பிசுபிசுவெனப் பட்டது. உடனே அவளைப் படுக்க வைத்துவிட்டு, உள்ளங்கையைப் பார்த்தான். உறைந்தும் உறையாத ரத்தம், கருஞ்சிவப்பு நிறத்தில் படர்ந்திருந்தது. அதைப் பார்த்ததும் அதிர்ந்து போனான்.
அவளுக்கு எதுவோ ஆகி இருக்கிறது என்ற அவனின் எண்ணம் வலுத்தது. யாரோ அவளைப் பின் மண்டையில் தாக்கி இருக்கின்றனர், இல்லையேல் எது மீதோ அவள் மோதி இருக்கிறாள்.
ரத்தத்தின் திடத்தைப் பார்த்தால் காயம் ஏற்பட்டு வெகு நேரம் ஆகி இருக்காது. மிஞ்சி மிஞ்சி போனால், சில மணி நேரங்கள் தான் ஆகி இருக்கும். அப்படி என்றால், இந்தத் தீ விபத்திற்கும் இவளுக்கும் ஏதாவது சம்பந்தம்?
ஒரு பக்கம் அவனின் போலிஸ் மூளை, அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொக்கி நிற்கும் புள்ளிகளை இணைக்க முயற்சிக்க, அவனோ நிலைமையின் வீரியத்தைப் புரிந்து, தன் பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த கர்சீப்பை எடுத்து, அவளின் தலையைச் சுற்றி கட்டிவிட்டு, மெல்ல அவளைத் தூக்கிக் கொண்டு, விறுவிறுவென்று வாசலை நோக்கி ஓடினான்.
வரும் வழி முழுவதும் அவளின் முகத்தைத் தான் பார்த்துக் கொண்டே வந்தான். நோய்வாய்ப்பட்டு மெலிந்து போயிருந்தாலும், அவளின் முகம் பார்ப்பதற்குக் கலையாக இருந்தது. அந்தக் கலையில் ஒரு கவலையும் குடி கொண்டிருந்தது.
‘யாரடி நீ?! உனக்குப் பின்னாடி ஏதோ மர்மம் இருக்கிற மாதிரி என் மனசுக்கு தோணுதே! ஏன்?!’
மயங்கத்தில் இருக்கும் அவளிடம் கேள்வி கேட்டால், என்ன பதில் கிடைக்கப் போகிறது?
**********
கைபேசி அடிக்கவும் எடுத்துப் பேசினான் அவன்.
“என்ன டா? காரியம் முடிஞ்சுதா? அவ செத்து போயிட்டாளா?” கைபேசியின் அந்தப் பக்கம் வேகவேகமாகக் கேள்விகள் வந்து விழ,
“சாரி சர்! காரியம் சொதப்பிடுச்சு...” என்று பதில் சொன்னவன், நேற்று இரவு நடந்ததைச் சொல்ல, கோபம் கொண்டான் அவன்.
“என்ன டா நீ? வார்ட்ல அவ இருக்காளா இல்லையான்னு பார்க்க மாட்டியா? இப்படிச் சொதப்பி வச்சுருக்க! சரி இப்போ அவ எப்படி இருக்கா? பிழைக்கச் சேன்ஸ் இருக்கா?”
“தெரியல சர்...போலிஸ் இப்போ தான் அவளை ஜி.எச்க்கு கூட்டிட்டு போயிருக்காங்க.”
“எவ்ளோ நாள் ப்ளேன்! இப்படிச் சொதப்பிட்டியே டா!” – கோபத்தில் அவன் கர்ஜிக்க,
“சாரி சர்!” குரலில் சற்றே நடுக்கம்.
“சாரி சொல்ற அளவுக்கு ஈசியான காரியமா இது?! அவ மட்டும் உயிர் பிழைச்சு எல்லா உண்மையையும் சொல்லிட்டா, அப்புறம் என்னோட கதி அவ்ளோதான்.” கோபத்தில் அவன் பற்கள் நரநரத்தது.
பட்டென்று அழைப்பை துண்டித்து, கைபேசியைத் தூக்கி வீசியவன், “நீ உயிரோட இருக்கிறது எனக்கு ஆபத்தாச்சே! இப்போ என்ன பண்ணலாம்?!” என்றான் கண்கள் மின்ன.

0 comments
Post a Comment