உன் கரம் பற்றி - அத்தியாயம் 01
வேட்டிச் சட்டையில் கையில் பையுடன் ஹாலுக்குள் நுழைந்த கல்யாணத் தரகரை முகம் மலர வரவேற்றார் சக்கரவர்த்தி.
பல கோடிகளைத் தனக்குள் விழுங்கிக் கொண்டு மிகப் பிரமாண்டமாய் நிற்கும் அந்தப் பங்களாவின் விஸ்தாரமான வரவேற்பறையின் அழகை ரசித்தபடி வந்த தரகர், சக்கரவர்த்தி முன் வந்து நின்று பவ்வியமாய் ஒரு வணக்கத்தை வைத்தார்.
"வணக்கங்க ஐயா!"
"வணக்கம். உட்காருங்க."
சக்கரவர்த்திச் சொல்லவும் சோபாவின் நுனியில் அமர்ந்தார் தரகர்.
"நீங்க கூப்பிட்டுவிட்டதா பையன் சொன்னான்."
"எல்லாம் நல்ல விஷயமா தான் தரகரே. பொண்ணு கல்யாணத்துக்குச் சரின்னு சொல்லிட்டா. அதுக்குத்தான் உங்களை வரச் சொன்னேன். இந்த ஊர்லையே நீங்க தானே ராசியான தரகர்."
சக்கரவர்த்திச் சொல்லவும், கூச்சத்தில் நெளிந்தார் தரகர்.
"எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம் ஐயா."
"மரகதம், ஜாதகத்தைக் கொண்டு வா." மனைவி பக்கம் திரும்பி குரல் கொடுத்தார் சக்கரவர்த்தி. அடுத்த நிமிடம் கையில் ஒரு சிறு நோட்டுடன் அங்கு வந்து சேர்ந்தார் அவரின் மனைவி மரகதம்.
"இந்தாங்க தரகரே. பொண்ணோட ஜாதகம். நம்ம அந்தஸ்துக்கு ஏற்ற மாதிரி நல்ல பையனா பார்த்துச் சொல்லுங்க."
"நிச்சயமா ஐயா. தமிழ்நாட்டுலையே முக்கியமான பணக்காரர் நீங்க. உங்க வீட்டுல சம்பந்தம் பண்ண போட்டி போட்டுக்கிட்டு வர மாட்டாங்களா."
தரகர் சொல்லவும், வெடி சிரிப்பு சிரித்தார் சக்கரவர்த்தி.
"நல்லா பேசுறீர்யா."
பதிலுக்குப் புன்னகைத்தார் தரகர்.
"அப்போ நான் கிளம்புறேன்யா."
"அட! இருந்து, டி குடிச்சிட்டு போங்க."
"மன்னிக்கணும் ஐயா. இன்னும் ரெண்டு வீட்டுக்கு போகணும், ஜாதகம் வாங்க. நல்ல நேரம் முடியிறதுக்குள்ள கிளம்பனும்யா."
"அப்போ சரி. நீங்க கிளம்புங்க தரகரே." என்றவர் சட்டைப்பையில் கை விட்டு இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்து நீட்டினார்.
"ஐயா! வேண்டாம்யா. கல்யாணத்தப்போ மொத்தமா வாங்கிக்கிறேன்." அவசரமாக மறுத்தார் கல்யாண தரகர்.
"ஆட்டோ செலவுக்கு வச்சுக்கோங்க. மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்." சக்கரவர்த்தி அழுத்திச் சொல்லவும், மரியாதை காரணமாகப் பணத்தை வாங்கிக் கொண்டார்.
தரகர் நகர்ந்ததும் கணவன் அருகில் வந்து அமர்ந்தார் மரகதம்,
"என்னங்க!"
"சொல்லு மரகதம்."
"கல்யாணத்தை முடிச்ச கையோட நம்ம குல தெய்வ கோவிலை புதுபிச்சு, கும்பாவிஷேகம் நடத்தனும்."
"அதுக்கென்ன மரகதம். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, அதையும் செய்துடலாம்."
முகம் மலர்ந்தது மரகதத்துக்கு. மனதுக்குள் குல தெய்வத்தை நினைத்துக் கொண்டார்.
* * * * *
காலிங் பெல் அடிக்க, எழுந்து சென்று கதவைத் திறந்தார் காஞ்சனா.
"வணக்கம்மா." கை கூப்பியபடி நின்றிருந்தார் கல்யாண தரகர்.
"வாங்க தரகரே." அவசரமாகச் சொன்ன காஞ்சனா, இரும்பு கதவின் பூட்டை திறந்து அவருக்கு வழி விட்டார்.
"என்னங்க! தரகர் வந்து இருக்கார்." உள் அறை நோக்கி குரல் கொடுத்துவிட்டு, தரகரை உட்கார சொன்னவர் அவருக்குக் காபி எடுத்து வர சமையலறைக்குச் சென்றார்.
"வாங்க தரகரே." மகனின் ஜாதக நோட்டை கையில் சுமந்தபடி ஹாலுக்கு வந்த காஞ்சனாவின் கணவர் சிவகுமார், தரகர் அமர்ந்ததும் அவருக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தார்.
"போன மாசம் செங்கல்பட்டுல ஒரு கல்யாணத்தை முடிச்சு வச்சீங்களே.."
"ஆமாம்.."
"அந்தப் பொண்ணோட அப்பா கிருஷ்ணன் என்னோட நண்பன். அவன் தான் உங்க போன் நம்பர் தந்தான்."
"அப்படிங்களா, ரொம்பச் சந்தோசம் சர்."
"நம்ம மூத்த பையனுக்குப் பொண்ணு பார்க்கணும். அதுக்குதான் உங்களை வர சொன்னேன்."
"தாராளமா பார்த்திடலாம் சர். பையன் ஜாதகம்?"
"இந்தாங்க."
சிவகுமார் கொடுத்த ஜாதக நோட்டை வாங்கி திறந்துப் பார்த்தவர் புருவத்தை உயர்த்தினார்.
"தம்பி பேர் மாதவனா? இப்போ தான் இதே பேர்ல் ஒரு ஜாதகத்தை வாங்கிட்டு வரேன்." சொல்லிவிட்டு புன்னகைத்தார் தரகர்.
அதன் பின் சில பக்கங்களைப் புரட்டியவர், இராசி கட்டத்தைப் பார்த்துவிட்டு மனதுக்குள்ளேயே சில பல கணக்குகளைப் போட்டார். அவரின் முகம் ஆச்சரியத்தைக் காட்டியது.
"அதிர்ஷ்ட ஜாதகம் சர் உங்க பையனோடது. பெரிய இடத்துல இருந்து உங்க பையனுக்கு மனைவி வருவான்னு கட்டம் சொல்லுது."
தரகர் சொன்னதைக் கேட்டபடி காபி கோப்பைகளுடன் அங்கு வந்த காஞ்சனா, பெருமிதத்துடன் கணவனின் முகத்தைப் பார்த்தார். 'நான் சொன்னேன் பார்த்தீங்களா?' என்றது அவர் பார்வை.
பதிலுக்குப் புன்னகைத்தார் சிவகுமார்.
"நல்ல குணமான பொண்ணா பாருங்க தரகரே." சொல்லியபடி காப்பிக் கோப்பையைத் தரகர் முன் நீட்டினார் காஞ்சனா.
"இப்போதான்மா குடிச்சிட்டு வந்தேன்." என்று மறுத்தவர், "கவலைப்படாதீங்க. நீங்க நினைக்கிற மாதிரியே பொண்ணைப் பார்த்திடலாம்." என்றார்.
"இந்தாங்க தரகரே, பையன் போட்டோவும் பயோடேட்டாவும் இந்தக் கவர்ல இருக்கு." சிவகுமார் நீட்டிய கவரை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார் தரகர்.
அவர் நகர்ந்ததும், "நம்ம ஊர் ஜோசியர் கூட இதையே தான் சொன்னார். நம்ம பையன் அதிர்ஷ்டகாரன்ங்க." என மகிழ்ச்சி பொங்க சொன்னார் காஞ்சனா.
"நம்ம பையன் மட்டுமா அதிர்ஷ்டம் செஞ்சவன், வர போற பொண்ணுக்கூட அதிர்ஷ்டம் செஞ்சு இருக்கணும், நம்ம பையன் மாதிரி ஒரு பையன் புருஷனா கிடைக்க." பதிலுக்குச் சிவகுமார் சொல்ல,
"அதுல என்ன சந்தேகம்." என்று பெருமைப்பட்டுக்கொண்டார் காஞ்சனா.
* * * * *
"குட் மார்னிங் மேம்! குட் மார்னிங் மேம்!"
ஊழியர்களின் வணக்கத்தைச் சிறு தலை அசைப்புடன் ஏற்றபடி, அந்தத் தளத்தின் கடைகோடியில் இருந்த CEO அறைக்குள் நுழைந்தாள் கீர்த்தனா. அவள் பின்னோடு சென்றார் அவளின் உதவியாளர்.
"நான் கேட்ட ஃபைல் எங்க சரவணன்?"
"டேபிள் மேல இருக்கு மேடம்."
சரவணன் சொல்ல, தன் முன்னிருந்த அந்தக் கோப்பையை எடுத்து புரட்ட ஆரம்பித்தாள் கீர்த்தனா. அவளின் கண்கள் கூர்மையாக அந்தக் கோப்பையின் எழுத்துக்களைத் தனக்குள் பதித்துக் கொண்டது.
"பாம்பே ப்ராஜெக்ட் எந்த ஸ்டேஜ்ல இருக்கு?" கோப்பையில் கையெழுத்து போட்டுவிட்டு நிமிர்ந்தபடி கேட்டாள்.
"இனிஷியல் ஸ்டேஜஸ் ஓவர் மேம். கவர்மெண்ட் அப்ரூவள்காக வெயிட்டிங்."
"சீக்கிரம் அப்ரூவள் வாங்கணும் சரவணன். கன்ஸ்ட்ரக்ஷன் ஸ்டார்ட் பண்ணணும்."
"முடிச்சிடலாம் மேம்."
உறுதியளித்த சரவணன் சற்று முன் கீர்த்தனா கையெழுத்திட்ட கோப்பையை வாங்கிக்கொண்டு அறையிலிருந்து வெளியேறினார்.
சரவணன் வெளியேறியதும் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த தந்தையின் புகைப்படத்தைப் பார்த்தாள்.
அது ஒரு பழைய புகைப்படம். எளிமையான உடையில் ஓடு போட்ட ஒரு வீட்டின் முன் நின்றிருந்தார் கீர்த்தனாவின் தந்தை சக்கரவர்த்தி. அந்த வீடு அவரின் பிறந்த வீடு.
அப்படி ஒரு வீட்டில் பிறந்து இன்று தமிழகத்தின் முதல் பத்து பணக்காரர்களுக்குள் ஒருவராக அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் தந்தையின் உழைப்பு அவள் கண்முன் படமாக ஓடியது.
'தாய்மடி' என்ற பெயரில் தங்கும் விடுதியை தன் இளைக்காலத்தில் உருவாக்கிய சக்கரவர்த்தியின் வளர்ச்சி அவரின் மனைவியின் வரவுக்குப் பிறகு வேகமெடுத்தது.
அதற்கு முக்கியக் காரணம் 'தாய்மடி' விடுதியின் தோற்றம். தமிழ் மன்னர்களின் கோட்டைகள் இப்படி இருக்கும் என்று நமக்கு இருக்கும் கற்பனையைப் போன்ற தோற்றத்தில் கட்டப்பட்டிருந்தது அந்தத் தங்கும் விடுதி. அதன் அழகை பார்ப்பதற்காகவே கூட்டம் அலைமோத ஆரம்பித்தது.
இன்று தமிழகம் முழுவதும் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உள்ள முக்கியமான நகரங்களில் எல்லாம் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை நடத்திக்கொண்டு இருக்கிறது சக்கரவர்த்தியின் எஸ்.கே குழுமம்.
அப்படிப்பட்ட 'தாய்மடி' என்ற இந்த 'ஹோட்டல் செயின்களின் தலைமை நிர்வாகியாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பொறுப்பில் இருக்கிறாள் சக்கரவர்த்தியின் மூத்த மகள், கீர்த்தனா.
தந்தை எப்படியோ அதே போல் தொழிலில் புலி. பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக இரண்டு கிளைகளைத் திறந்து விட்டாள். எப்படிக் காய்களை நகர்த்தினால் வேலையை முடிக்கலாம் என்பது அவளுக்கு அத்துப்படி.
சக்கரவர்த்தியின் மூத்த மகள் ஹோட்டல்களைப் பார்த்துக்கொள்ள, அவரின் இளைய மகள் மஞ்சுளா 'பொடிக்' என்று சொல்லப்படும் துணிக்கடைகளையும், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் கார்மென்ட் தொழிலையும் நிர்வகித்து வருகிறாள்.
இருவரின் தம்பியும் அந்த வீட்டின் கடைகுட்டியுமான பிரபு, இறுதி ஆண்டு எம்.பி.ஏ படித்துக்கொண்டு இருக்கிறான்.
தந்தையைப் போல மூவருமே பொறுப்பானவர்கள். அதனால்தானோ என்னவோ தொழிலை பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக ஓய்வெடுக்கிறார் சக்கரவர்த்தி.
* * * * *
"அம்மா! அண்ணன் வந்தாச்சு." கூச்சலிட்டபடி எழுந்து வாசலுக்கு ஓடினாள் அந்த வீட்டின் கடைக்குட்டி அர்ச்சனா.
வேகவேகமாகக் கதவின் பூட்டை திறந்தவள், அண்ணனிடமிருந்து பையை வாங்கிக்கொண்டு, "நான் கேட்ட புக் வாங்கிட்டு வந்தியா அண்ணா?" என்றாள் ஆர்வமாய்.
"அய்யய்யோ! மறந்துட்டேனே!" பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான் மாதவன்.
அண்ணனின் பதிலில் அவனை அடிக்கப் பாய்ந்தாள் அர்ச்சனா. அவனைக் கடித்துக் குதறாத குறைதான். அந்த அளவுக்கு மூர்க்கமாக இருந்தது அர்ச்சனாவின் தாக்குதல்.
"அம்மா, நம்ம வீட்டுக்கு நாய்குட்டி வாங்கனும்னு சொல்லிட்டு இருந்தியே. அதெல்லாம் தேவையே இல்லை. இதோ இவளை பிடிச்சு வாசல்ல கட்டி வச்சுடு. ஒருத்தனும் நம்ம வீட்டுப் பக்கம் வர மாட்டான்." தங்கையின் அடிகளை லாவகமாகத் தடுத்தப்படி சிரிப்புடன் சொன்னான் மாதவன்.
விளைவு, கூடுதலாக இரண்டு அடிகள் விழுந்தது அவனுக்கு.
"அடியே! கூடிய சீக்கிரம் மணமேடையில உட்கார போறவனைப் போட்டு இப்படி அடிக்கிற. எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு உன் அண்ணிக்காரி உன்னைப் புளக்க போறா பாரு." சிரிப்புடன் சொன்னார் காஞ்சனா.
சண்டையை நிறுத்திவிட்டு உடன்பிறப்புகள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.
'உனக்குத் தெரியும்?' கண்களால் அர்ச்சனா சைகை செய்ய,
'இல்லையே! உனக்கு?' பதிலுக்குச் சைகை செய்தான் மாதவன்.
அவளோ உதட்டை பிதுக்கினாள்.
பிள்ளைகள் இருவரும் பேந்த பேந்த முழித்தபடி தாயின் முகத்தைப் பார்த்தனர்.
"என்னம்மா சொல்ற?" அர்ச்சனா கேட்க,
"உன் அண்ணனுக்குப் பொண்ணுப் பார்க்கச் சொல்லி தரகர் கிட்ட சொல்லியாச்சு." மகிழ்ச்சியுடன் சொன்னார் பெரியவர்.
உடனே அண்ணன் பக்கம் திரும்பிய அர்ச்சனா, "மாப்பிள்ளை சார்! வாழ்த்துக்கள்." என்றாள் 'மாப்பிள்ளை' என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து.
"கழுதை, ஓடு! போய்ப் படி போ!" வெட்கத்தை மறைத்தபடி சொன்ன மாதவன், தங்கையை விரட்டினான்.
அவளோ நகராமல் போக்கு காட்டினாள்.
"கூட்டுக் குடும்பத்துக்குச் சம்மதம் சொல்ற பொண்ணா பார்க்கச் சொன்னீங்களா அம்மா. தனிக் குடுத்தனம் எல்லாம் எனக்கு விருப்பமில்லை." சற்று முன்பு இருந்த சிரிப்பை உதறிவிட்டுக் கொஞ்சம் சீரியசாகச் சொன்னான் மாதவன்.
"எல்லாம் சொல்லியாச்சு. சொல்லியாச்சு." பொய் சொன்னார் காஞ்சனா. ஏனெனில் அவரைப் பொறுத்தவரை மகனின் முடிவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பாரோ, அதே அளவுக்கு வர போகும் மருமகளின் விருப்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர். என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அதைக் கணவன் மனைவி இருவரும் பேசி முடிவெடுத்துக்கொள்ளட்டும் என்பது அவரின் எண்ணம்.
அந்த நேரம் "என்ன சொல்லியாச்சு?" என்றபடி வீட்டிற்குள் நுழைந்தான் அந்த வீட்டின் இளைய மகன், பார்த்திபன்.
"கூடிய சீக்கிரம் நம்ம வீட்டில கல்யாணம் நடக்கப் போகுது அண்ணா. பெரிய அண்ணனுக்குப் பொண்ணுப் பார்க்கச் சொல்லியாச்சு. அது சம்பந்தமா தான் பேசிட்டு இருக்காங்க." துள்ளி குதித்தபடி சொன்னாள் அர்ச்சனா.
"சூப்பர் அண்ணா! கல்யாணப் பரிசா எனக்கு ஒரு பைக்." சந்தோஷத்துடனே தன் தேவையை மறைமுகமா காதில் போட்டான் பார்த்திபன்.
பதிலுக்குப் புன்னகைத்தான் மாதவன். அவன் மனம், வீட்டுக் கடனை நினைத்துப் பார்த்தது. இந்த நிலைமையில் திருமணமா? மகிழ்ச்சியுடன் சேர்ந்து கவலையும் வந்து ஒட்டிக் கொண்டது மாதவனின் முகத்தில்.
தந்தை சிவகுமார் தனியார் கம்பனி ஒன்றில் உயரிய பொறுப்பில் இருந்ததால், கஷ்ட ஜீவனம் என்று இல்லாமல், அப்பர் மிடில் கிளாஸ் என்று சொல்லும் அளவுக்கு, கொஞ்சம் வசதி தான் அவனின் வீட்டில்.
ஆண் பிள்ளைகள் இருவரும் பொறியியல் படித்துவிட்டு தற்பொழுது பிரபல கம்பனிகளில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்க, ஒரே மகளான அர்ச்சனா பி.பி.ஏ இறுதியாண்டு படித்துக்கொண்டு இருக்கிறாள்.
முன்பு வாடகை வீட்டில் குடியிருந்த சிவகுமாரின் குடும்பம், பிள்ளைகளின் லோன் தொகை மூலம் வாங்கப்பட்ட இந்த இரண்டு படுக்கையறை கொண்ட பெரிய வீட்டில் தற்பொழுது குடியிருக்கிறது.
வீட்டுக்கடனுடன், கார் லோனும் கட்டிக்கொண்டு இருக்கின்றனர் சகோதர்கள். அவசர தேவைக்கு என்று போன வருடம் தான் கார் வாங்க வேண்டிய சூழ்நிலை.
அடுத்து இப்பொழுது கல்யாண செலவா? என்ன செய்ய? யோசிக்க ஆரம்பித்தான்.
* * * * *
தரகரின் வீடு.
வாங்கி வந்த ஜாதகங்களின் குறிப்புகளை அந்தந்த புகைப்படங்களுக்குப் பின் எழுதுவதற்காக உட்கார்ந்தார் தரகர்.
"அண்ணே!" வெளியே குரல் கேட்க, அனைத்தையும் மேசை மீது வைத்துவிட்டு வாசலுக்குச் சென்றார். அங்கே முகத்தில் பதற்றத்துடன் நின்றிருந்தார் பக்கத்து வீட்டுக்காரர்.
"என்ன தம்பி? என்ன விஷயம்?"
"பொண்டாட்டிக்கு பிரசவ வலி. உடனே ஹாஸ்பிடல் போகணும். கொஞ்சம் பணம் கடனா....." தயக்கத்துடன் அவர் கேட்க,
"ஒரு நிமிஷம் தம்பி." என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் ஓடினார்.
பீரோவை திறந்து தனது ஏ.டி.எம் கார்டை எடுத்துக்கொண்டவர், சட்டையைப் போட்டபடி பத்தாம் வகுப்பு படிக்கும் தன் மகளை அழைத்தார்.
"பாப்பா!"
"என்னப்பா?"
"டேபிள் மேல போட்டோஸ், பயோடேட்டா வச்சிருக்கேன். வழக்கம் போல எழுதி வச்சுடு. நான் வெளிய போயிட்டு வரேன். அம்மா வந்து கேட்டா அங்கிள் கூட ஹாஸ்பிடல் போயிருக்கேன்னு சொல்லிடு."
"சரிப்பா."
சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட, தந்தை சொன்ன வேலையை முடிப்பதற்காக, படுக்கையறையில் இருந்தவற்றை அள்ளிக்கொண்டு ஹாலுக்கு வந்த சிறுமி, அங்கிருந்த மேசை மீது வைப்பதற்காகக் குனிய, கால் தடுக்கி கையிலிருந்தவற்றை எல்லாம் கீழே சிதற விட்டாள்.
அதில் ஜாதங்களும், புகைப்படங்களும் கவர்களில் இருந்து வெளியே சிதறி ஒன்றோடு ஒன்று கலந்தது.
இது தெரியாமல், கீழே கிடந்தவற்றை எல்லாம் எடுத்து மேசை மீது வைத்த சிறுமி, தந்தை வருவதற்குள் வேலையை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் எதையும் சரி பார்க்காமல், கையில் கிடைத்த குறிப்பிலிருந்த விவரங்ககளைத் தவறான புகைப்படத்துக்குப் பின் எழுத ஆரம்பித்தாள்.
விளைவு கோடீஸ்வர வீட்டு மாதவனின் விவரங்கள், மிடில்கிளாஸ் மாதவனின் புகைப்படத்தின் பின் எழுதப்பட, இவனின் விவரங்கள் கோடீஸ்வர மாதவனின் புகைப்படத்துக்குப் பின் எழுதப்பட்டது.
இருவரின் புகைப்படத்தையும் தரகர் பார்க்காதது வேறு, பிற்காலத்தில் வரப்போகும் குழப்பத்துக்குக் கூடுதல் சிக்கலை கொடுக்கக் காத்திருந்தது.

0 comments
Post a Comment