வரமாய் வந்தவளே - அத்தியாயம் 01
திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு மட்டுமில்லாமல், இந்தியாவின் வரலாற்றில் முக்கியப் பங்காற்றிய பகுதி. மன்னர் காலம் தொட்டு இன்று வரை பல வரலாற்றைத் தனக்குள் உள்ளடயக்கியது. மன்னர்கள், விடுதலை போராட்ட வீரர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என்று பலரை உருவாக்கி நாட்டிற்குக் கொடுத்த மண்.
அப்படிப்பட்ட திருநேல்வேலியின் தலைநகரமான தென்காசியில், வெள்ளைக்காரர்கள் காலத்தில் இருந்தே பரம்பரை பணக்கார குடும்பம் வேல்முருகன் குடும்பம். ஆயிரத்து தொல்லாயிரத்து அறுவதிகளிலேயே அந்தச் சுற்றுவட்டாரத்தில், பல ரைஸ் மில், கோயம்பதூரில் பஞ்சு ஆலை, தூத்துக்குடியில் உப்பு தொழிற்சாலை என்று பல தொழில்களை நிர்வகித்துச் செல்வ செழிப்புடன் வாழ்ந்தவர். அந்த ஊரில் ‘ரைஸ் மில்’ குடும்பம் என்று கேட்டாலே அனைவருக்கும் தெரியும். அப்பேற்பட்ட வேல்முருகனின் ஒரே மகன் தான், ஆறுமுகம். அவரின் மனைவி லட்சியம்மாள்.
காலங்கள் உருண்டோடிவிட, தன் தந்தை காலத்தின் இறுதியில் ஆரம்பித்து, பல இழப்புகளைச் சந்தித்து, கைவசம் இருந்த சில தொழில்களை இழந்து, இன்று ரைஸ் மில், சொந்தமாகப் பஸ் மற்றும் லாரி என்று சிறிய ரகத் தொழில்களை நிர்வகித்து வந்த ஆறுமுகம், இன்று உயிரோடு இல்லை. அதற்குக் காரணம், அன்று நடந்த அந்த விரும்பத்தகாத சம்பவம்.
பொய்யையே பிழைப்பாக வைத்துக் கொண்டு, ஆட்களுக்குத் தக்கபடி இங்கொன்றும், அங்கொன்றும் பேசி, உயிர்வாழும் பலருக்கு மத்தியில், ஒருவன் தன்னைப் பேசிய ஒற்றை இழி சொல்லால், தாழ்ந்திருந்த தராசை, தன் உயிரையே ஈடாகக் கொடுத்து, உயர செய்தவர்.
அப்பேற்பட்ட குடும்பத்தின் ஒரே வாரிசு, மதிவெண்பா. ஆண்கள் மட்டும் தான் குடும்பத்தை நிர்வகித்து, தொழில்களையும் திறம்பபட நிர்வகிக்க முடியுமா? இல்லை பெண்களாலும் முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பவள்.
வீட்டில், குழந்தையாக இருப்பவள், தொழிலில் சீரும் புலி. எல்லோரும் வாயால் உத்தரவு இடுவார்கள். அனால் இவளது கண் பார்வையே, “இதை நீ செஞ்சு முடிக்கல, அடுத்தச் செகண்ட் நீ என் கண் முன்னாடி இருக்க மாட்ட!!” என்ற உத்தரவையிடும். அதிகபட்சமாகச் சில சமயங்களில், அவளது கையும் பேசும். அவளது கை நீள்கிறது என்றால், அவள் உச்சபட்ச கோபத்தில் இருக்கிறாள் என்று அர்த்தம்.
அவள் பெயர் மட்டுமே மதிவெண்பா, செயலில், ருத்ரா. தோற்றத்தில் வேலு நாச்சியார். ஆண்களுக்கு இணையாக ஆறு அடி உயரத்தில், பெரிய நெற்றி, அடர்த்தியான புருவம், கூர்மையான பெரிய கண்கள், நேர் நாசி, சின்ன இதழ்கள் என்று, கருப்பு நிறத்தில் களையான முகம் கொண்டவள்.
தாய் லட்சுமி, தந்தை வழி பெற்றோரான அவளது ஆத்தா, மற்றும் தாத்தா மற்றும் தாயின் தாய், அவளின் ஆச்சி, ஆகியோருடன் தங்கள் பூர்வீக வீட்டில் வசித்து வருகிறாள் மதிவெண்பா.
மதிவெண்பாவின் தாய் லட்சுமி, வெளியே கிளம்பி கொண்டிருந்த மகளுக்கு உணவை தயாரித்து மேஜை மேல் வைத்துக் கொண்டிருக்க, எளிமையான காட்டன் புடவையில், இடுப்புக்குக் கீழ் வரை நீண்டிருந்த தலைமுடியை, ஜடை பின்னி, முகத்தில் ஒற்றைக் கல் மூக்குத்தியும், நெற்றியில் வெள்ளை கல் வைத்த பொட்டும், வகுட்டில் கொஞ்சம் குங்குமம், தவிர எந்த வித செயற்கை பூச்சும் இல்லாமலேயே, அழகாகக் கிளம்பி வந்தாள் மதிவெண்பா. அவளின் அந்தக் கலையான முகத்திற்குத் திருஷ்டி வைத்தார் போல, அழகாக டால் அடித்தது அந்த ஒற்றைக் கல் மூக்குத்தி. ஆனால் அவளின் முகமோ, இறுகி போயிருக்க, கோபத்தைத் தனக்குள் புதைத்திருந்த முகத்தில் ஒற்றைப் புருவம் மட்டும் எதோ யோசனையில் மேலே ஏறி இருந்தது.
கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்த வெண்பா, வேகமாக உணவு மேஜைக்கு வந்தவள், மூடி இருந்த தட்டை எடுத்து ஓரம் வைத்துவிட்டு, பஞ்சு போல இருந்த இட்லியை, சிறு சிறு துண்டாகப் பிட்டு, சாம்பாரில் முக்கி வேக வேகமாக உள்ளே தள்ளி கொண்டிருந்தாள். மகள் சாப்பிடுவதைச் சமையல்கட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் லட்சுமி.
இட்லி என்றால் வெண்பாவிற்கு மிகவும் இஷ்டம். அதிலும், இட்லியை அவள் சாப்பிடும் விதமே தனியாக இருக்கும். முதலில் ஒரு கிண்ணத்தில் சாம்பாரையும், தேங்காய் சட்டினியையும் ஒன்றாகச் சேர்த்து கலக்கி கொள்பவள், அதை இட்லியில் ஊற்றி, பிசைந்து சாதம் போல் சாப்பிடுவாள். ஆனால் இன்றோ?
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மகளையும், ஆறு மாத கருவை சுமந்து கொண்டு, சற்றே மேடிட்டிருந்த அவளது வயிற்றையும் பார்த்தவருக்கு, வெட்கம் கலந்த பூரிப்பை முகம் முழுவதும் பூசிக்கொண்டு சுற்றும் மற்ற பெண்களைப் போல இல்லாமல், தன் மகள் இருக்கும் நிலையை நினைக்கையில், கண்கள் கலங்கிவிட, சத்தமில்லாமல் முந்தானையில் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
முகத்தில் தான் அந்தப் பூரிப்பு இல்லை, ஆனால் தோற்றத்திலாவது அதைக் காட்டலாமே என்பது அவருடைய ஆதங்கம். வழக்கம் போல, தங்கள் தோட்டத்தில் பறித்து, நான்கு முழத்திற்கு, நெருக்கமாகத் தன் கையாலே கட்டி இருந்த, மல்லிகை சரத்தையும், வெண்பாவிற்கு மிகவும் பிடித்த வெள்ளை ரோஜா பூவையும் கையில் வைத்திருந்தவர், தயக்கத்துடன் உணவு மேஜைக்குச் சென்று, “மாசமா இருக்கிற பொண்ணு, இப்படிக் கையில, காதுல நகை போடாம இருக்கக் கூடாது மா. இந்தப் பூவையாவது வச்சுக்கோ மதி.” என்று மெல்ல தயங்கி தயங்கி சொல்ல,
வாய் வரை கொண்டு வந்திருந்த இட்லி துண்டை அப்படியே தட்டில் போட்ட வெண்பா, பட்டென்று இருக்கையில் இருந்து எழுந்தவள், நேரே அடுபடிக்குப் பின்பக்கம் சென்று, தண்ணீரை மொண்டு கை கழுவிவிட்டு, வீட்டிற்கு வந்தவளுக்குச் சட்டென்று புரையேறி இருமல் வந்தது. மேஜையில் இருந்த தண்ணீர் க்ளாசை எடுக்க அவள் வர,
லட்சுமியோ, மகளின் இருமல் தாங்காமல், உடனே தன் கையில் இருந்த பூவை மேஜையில் வைத்துவிட்டு, தண்ணீர் இருந்த டம்ப்ளரை எடுத்து வந்து வெண்பாவிடம் கொடுக்க, அவளோ அதை வாங்காமல் அவரைத் தாண்டி வந்து, மேஜையில் இருந்து மற்றொரு க்ளாசை எடுத்து, பக்கத்தில் இருந்த செம்பில் இருந்து தண்ணீரை ஊற்றியவள், கடகடவென்று குடித்துவிட்டு வேக நடையுடன் வெளியேறினாள். அவள் செயலில் அடிபட்ட வலியுடன் நின்றிருந்தார் லட்சுமி.
வாசலில் அமர்ந்து பேசி கொண்டிருந்த, தந்தை மற்றும் தாயின் பெற்றோர்களிடம் வந்தவள், லேசாகக் குனிந்து அவர்கள் காலை தொட்டு, “போயிட்டு வரேன் தாத்தா! போயிட்டு வரேன் ஆத்தா! போயிட்டு வரேன் ஆச்சி!!” என்று புன்னகையைப் பூசிக்கொண்ட முகத்துடன் ஆசி வாங்கிக் கொண்டு, “மணி!!” என்று குரல் கொடுத்துக் கொண்டே போட்டிக்கோ வர, கார் டிரைவர் மணிகண்டன், கார் கதவை திறந்து வைத்திருக்க, இவள் உள்ளே ஏறியதும், அவளது தந்தையின் ஒன்றுவிட்ட தம்பியும், இவளது சித்தப்பாவுமான கணேசன், முன்பக்கம் ஏறிக்கொள்ள, காரை கிளப்பினான் மணி.
கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருக்க, கணேசன் பக்கம் திரும்பிய மதி, “எல்லாரும் வந்தாச்சா சித்தப்பா??!” என்று கேட்க, “வந்தாச்சு மா. நீ வந்ததும் மீட்டிங்கை ஆரம்பிக்க வேண்டியது தான்.” என்றார். “ம்ம்!” என்று பதில் சொன்னவள், அங்குச் சென்று தான் பேச வேண்டியதை பற்றிய யோசனையில் மூழ்கினாள்.
எதிர்கட்சி சார்பாக, வரவிருக்கும் சட்டமன்ற உருபினர்களுக்கான தேர்தலில் மதிவெண்பா களம் இறங்க போவதை பற்றியும், அவளின் அறிமுக நிகழ்ச்சியும் அன்றைய மீட்டிங்கில் நடக்க விருக்கிறது. எதிர்க்கட்சி சார்பில், தென்காசி பகுதியில் போட்டியிட போகிறாள் மதிவெண்பா.
அடுத்த அரை மணிநேரத்தில் மீட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்தவள் வரவேர்க்கபட்டு மேடையில் உர்கார வைக்கபட, மீட்டிங் ஆரம்பிக்கப்பட்டு முன்னுரை ஆரம்பானது.
நண்பகல் வேலை, காற்று சிலுசிலுவென வீசி கொண்டிருக்க, வேலையாட்களுடன் தங்களது வெற்றிலை தோப்பில் வெற்றிலையைப் பறித்துக் கொண்டிருந்தாள் மதிவெண்பா.
பக்கத்தில் பேசி கொண்டிருந்த பெண்மணிகளில் ஒருவர், “ஏட்டி, மதி புள்ளை, கட்டிக்க, உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும்??“ என்று வெண்பாவை பார்த்து கேட்க, “எனக்கு எதுக்கு எவனோ ஒருத்தன். என் அத்தான் இருக்காங்கல.” என்று இவள் பெருமையாகச் சொல்ல, பக்கத்தில் இருந்த வேறொரு பெண்மணி, “அவ கதைதான் தெரிஞ்சது தான மைனி, அவளைப் போய்க் கேட்டுகிட்டு.” என்று சொல்லிச் சிரிக்க,
அப்பொழுது, “மதி!! ஏட்டி!! மதி!!” என்று கத்தி கொண்டே வெத்தலை தோப்புக்குள் ஓடி வந்து கொண்டிருந்த, தன் தோழியைப் பார்த்ததும், கையில் பறித்து வைத்திருந்த வெற்றிலைகளைக் கூடையில் போட்ட, வெண்பா, “என்னட்டி, ஏன் இப்படி ஓடியார, என்ன விஷயம்??” என்று கேட்க, அவள் முன், மூச்சுவாங்க நின்ற தோழி, ‘ஒரு நிமிஷம்’ என்பது போலக் கையைக் காட்ட, ‘வேலை செஞ்சுட்டு இருந்தவளை கூப்டிட்டு, பதில் சொல்லாம இருக்கிறதை பாரு’ என்பது போல இடுப்பில் கை வைத்துக் கொண்டு முறைத்தாள் மதிவெண்பா.
தன்னை ஆசுவாசபடுத்திக் கொண்டு நிமிர்ந்த தோழி, “மெட்ராஸ்ல இருந்து உன்னோட அத்தான் வந்துருக்கு. நம்ம வீட்டில தான் பெரியப்பா கூடப் பேசிட்டு இருக்கு.” என்று சொல்ல, “அடியே!! இதை மொதல்ல சொல்ல வேண்டியது தானட்டி.” என்று அவளை முறைத்துவிட்டு, அடுத்தநொடி அங்கிருந்து சிட்டாகப் பறந்திருந்தாள் மதிவெண்பா. பாவாடையை, இரண்டு பக்கமும் தூக்கி பிடித்துக் கொண்டு, துள்ளி குதித்தபடி அவள் ஓடுவதைச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த தோழி, “இனி சின்ராசை கையிலேயே பிடிக்க முடியாது.” என்று சொல்லிவிட்டு சிரிக்க,
“அம்மாடி மதிமா!!” என்றபடி யாரோ தன்னை உலுக்கவும், பழைய நினைவுகளில் இருந்து மீண்ட வெண்பா, நிமிர்ந்து பார்க்க, அவளின் சித்தப்பா, “என்ன மா யோசனை, பேசு மா!!” என்று அழைக்க, கண்களை இறுகமூடி ஒரு பெருமூச்சை வெளியிட்டவள் மெல்ல எழுந்து சென்று, மைக் முன் நின்று பேச ஆரம்பித்தாள்.
மதிவெண்பாவின் குடும்பம் இருக்கும் இதே தென்காசியில், மற்றொரு பணக்கார குடும்பம், மகாலிங்கத்துடையது. அரசியலில் பழுத்துக் கொட்டை போட்டவர். ஆளும்கட்சியின் தென்காசி எம்.எல்.ஏ. ஆரம்பத்தில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருந்தவர், அரசியலில் களம் இறங்கி நான்கு முறை எம்.எல்.ஏ. ஆன பிறகு, செல்வத்தின் உச்சிக்கே சென்று விட்டார். அதை அவர் எப்படி அடைந்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகியம்.
மதிவெண்பாவின் குடும்பச் சொத்தின் மதிப்பு, சில நூறு கோடிகள் என்றால், மகாலிங்கத்தின் சொத்து மதிப்பு பல நூறு கோடிகள். அந்த அளவுக்குச் செல்வ நிலையில் உயரத்தில் இருந்தார் மகாலிங்கம்.
மகாலிங்கத்தின் மனைவி வேலம்மாள். இவர்களின் ஒரே மகன் மதிமாறன். 6.2 அடி உயரத்தில், கருப்பு ஐயனார் போலத் தோற்றத்திலேயே எதிரிகளைத் தூர விரட்டுபவன். அதற்குக் கூடுதல் பலம் சேர்ப்பவை, உடற்பயிற்சியும், வேலையும் செய்து முறுக்கேறிய தோள்களும், இயற்கையாகவே முறைக்கும் பார்வையைக் கொண்ட கண்களும். இப்படிப்பட்ட கண்கள் கனிவாகப் பார்ப்பது ஒருத்தியை மட்டும் தான்.
தந்தை அரசியலில் மூழ்கி இருக்க, குடும்பத் தொழில்கள் அனைத்தையும் ஒற்றை ஆளாக, கடும் போட்டிகளுக்கு நடுவில், திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறான்.
அன்றைய தினம் காலையிலேயே எழுந்து கிளம்பி, தொழில் விஷயமாகக் காரை எடுத்துக் கொண்டு, தென்காசி ரோட்டில் வேகமாகச் சென்று கொண்டிருந்த மதிமாறனின் மொபைல் விடாமல், ஒலித்துக் கொண்டிருக்க, காரை ஓரமாக நிறுத்தியவன், டேஷ்போர்டில் இருந்து மொபைலை எடுத்து ஆன் செய்து காதில் வைக்க. “அண்ணே! மைனி பேசுற கூட்டத்தில் யாரோ வெடி வச்சு இருக்காணுவ. இப்போதான் என்னோட கூட்டாளி ஒருத்தன் சொன்னான்.” என்று அந்தப் பக்கம் இவனின் சித்தப்பா மகன் பாலமுருகன், சொல்ல,
செய்தியை கேட்டு அதிர்ந்த மாறன், காரை ஸ்டார்ட் செய்து ஓட்டி கொண்டே, “என்னல சொல்ற!!” என்று கேட்க, தனக்குக் கிடைத்த தகவல் முழுவதையும் சொன்ன முருகன், “நான் வேணா, நம்ம ஆளுங்களை விட்டு, மைனிக்கு தெரியாம, வெடி எங்க இருக்குன்னு தேட சொல்லட்டா ண்ணே.” என்று சொல்ல, பதிலுக்கு இவனோ, “இதென்ன சினிமாவாலே, வெடிக்கிறதுகுள்ள தேடி கண்டுபிடிக்க, நான் பார்த்துகிடுதேன். நீ மொதல்ல எவன் இந்த வேலையைப் பண்ணதுன்னு கண்டுபிடி.” என்று கட்டளையிட்ட மாறன், மொபைலை பக்கத்துக்கு இருக்கையில் போட்டுவிட்டு, காரின் வேகத்தை அதிகபடுத்தினான்.
மதிவெண்பாவின் மீட்டிங் நடந்து கொண்டிருந்த அதே ரோட்டில் தான், காரில் சென்று கொண்டிருந்தான் மதிமாறன். சிறிது தூரம் சென்றால், மீட்டிங் நடக்கும் இடம் வந்துவிடும். அதானலையே, தான் பார்த்துக் கொள்வதாகப் பாலமுருகனிடம் கூறினான். ஏனெனில் அவர்கள் வருவதற்குள் வெகு நேரம் ஆகிவிடும் என்று இவனுக்கு நன்றாகத் தெரியும்.
அடுத்த இரண்டு நிமிடத்தில் மீட்டிங் நடக்கும் இடத்தில் காரை பார்க் செய்த மாறன், மீட்டிங்கில் கலந்து கொண்டிருந்த ஆளுங்கட்சியின் உறுப்பினரும் தனது நண்பனுமான தமிழரசுவை ஃபோனில் தொடர்பு கொண்டவன், ஒற்றை வரியில் விஷயத்தைச் சொல்லி போனை ஆஃப செய்துவிட்டு, வேகமாக மேடை நோக்கி வந்தான்.
“எல்லோருக்கும் வணக்கம். என் பேரு மதிவெண்பா. தென்காசி, வேல்முருகன் முதலியாரோட பேத்தி. அப்பாவை உங்க எல்லோருக்கும் தெரிஞ்சு இருக்கும். பேரு ஆறுமுகம். கட்சியில பல வருஷமா அவர் உறுப்பினர். ஆனா எந்தத் தேர்தல்லையும் போட்டி போடாம, கட்சி பணி பார்த்துட்டு இருந்தாங்க. அவங்க பொண்ணு, இப்போ வர போற எம்.எல்.ஏ. எலெக்க்ஷன்ல போட்டியிட போறேன். அதுக்கு எனக்கு வாய்ப்புக் கொடுத்த கட்சி தலைவர் அவருக்கும், செயற்குழுவுக்கும் எனது நன்றிகள்....” என்று தன் பேச்சில் மூழ்கி போய் மதிவெண்பா பேசி கொண்டிருக்க,
திடீரென்று சலசலக்கும் சத்தத்துடன் பதட்டமாக எல்லோரும் எழுந்து கொள்ளும் நேரம், மேடை ஏறிய மதிமாறனை திரும்பி பார்த்தவள், கோபமாக அவனை முறைக்க, அவனோ இவளது கையைப் பிடித்து, கிட்டத்தட்ட இழுத்து செல்லாத குறையாக மேடையை விட்டு கீழே அழைத்துச் செல்ல, அதற்குள் இவர்களை நோக்கி வந்த கணேசனிடம், “மீட்டிங்ல யாரோ வெடி வச்சு இருக்காங்க. நீங்க உடனே காரை எடுத்துகிட்டு வீட்டுக்கு போங்க மாமா. வெண்பாவை நான் வந்து வீட்டில விடுதேன்.” என்று இவன் சொல்ல, “சரிப்பா” என்றவர் அவசர அவசரமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினார். அவன்மேல் இருந்த கோபத்தில், மாறன் சொன்னதை வெண்பா கவனிக்கவில்லை.
கார் அருகில் வந்துவிட்ட மாறன், வெண்பாவை காரில் ஏற சொல்ல, அவளோ முடியாது என்ற ரீதியில் அடம் பிடித்துக் கொண்டிருக்க, சூழ்நிலை சரி இல்லாதததால், வேறு வழியில்லாமல் அவளை அப்படியே கைகளில் தூக்கியவன், குனிந்து உள்ளே சீட்டில் உட்கார வைத்துவிட்டு, கதவை அடைத்தவன், லாக் செய்துவிட்டு, அவள் மேற்கொண்டு எதுவும் செய்வதற்குள், வேகமாக ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்து அந்த இடத்தை விட்டு கிளம்பி சென்றான்.
இவர்கள் வெளியேறிய அடுத்தச் சில நொடிகளில் எல்லோரும் அந்த இடத்தைக் காலி செய்திருக்க, உடனே போலிசுக்கு போன் செய்தான் தமிழரசு. அடுத்தப் பத்து நிமிடத்தில், வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கே விரைந்த போலீசார், அந்த இடத்தைச் சல்லடை போட்டு தேட, பல நிமிட போராட்டத்திற்குப் பிறகு, வெண்பா பேசி கொண்டிருந்த மைக்கில் வெடிகுண்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. விஷயம் தெரிந்ததும் உடனே மதிமாறனுக்கு ஃபோன் செய்து சொன்னான் தமிழரசு.
மதிமாறன் வேகமாகக் காரை ஒட்டி கொண்டிருக்க, பின் இருக்கையில் அமர்ந்திருந்த வெண்பா, இவனுடன் விடாது வாக்குவாதம் செய்து கொண்டிருக்க, அதைக் கண்டுகொள்ளாமல் தென்காசி ஊரை விட்டு வெளியே வந்தவன், ஓர் இடத்தில காரை நிறுத்த, கிடைத்த இடைவெளியில் கதவை திறந்த வெண்பா இறங்க முயற்சிக்க, ‘இவள் அடங்க மாட்டாள், மீறி பேச சென்றாலும், தன்னிடம் இருந்து திமிறி விலக முயற்சிப்பாள். அதில் அவள் வயிற்றில் கார் சீட் மோதி அடிபடும்.’ என்று யோசித்த மாறன்,
காரில் இருந்து வேகமாக இறங்கி, “என்றபடி திமிரி கொண்டிருந்த வெண்பாவை, கையைப் பிடித்து இழுத்துச் சென்றான். சிறிது தூரம் தள்ளி சென்று, ஒரு மரத்தின் நிழலில் அவளை நிறுத்த, “இப்போ எதுக்கு என்னை இப்படி எல்லார் முன்னாடியும் இழுத்துட்டு வந்திய??” என்று கோபமாக வெண்பா கேட்க, அவளிடம் விஷயத்தைக் கூறினான் மதிமாறன்.
கேட்டதும் ஒரு நொடி திக்கென்று இருந்தாலும், அடுத்த நொடி ஒரு வறண்ட சிரிப்புடன், “எனக்கு என்னமோ ஆகிட்டு போகுது. உங்களுக்கு எதுக்கு இவ்ளோ அக்கறை.” என்று அலட்சியத்துடன் அவள் பதில் சொல்ல, வெண்பாவின் பதிலில், அவளை அறையும் வெறி வந்தும், பற்களைக் கடித்துத் தனது கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு, தலை முடியை அழுத்த கோதி ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், சற்றே மேடிட்டு இருந்த வெண்பாவின் வயிற்றில் ஒரு நிமிடம் பார்வையைப் பதித்து, “என் பொண்டாட்டியும், என் புள்ளையும் எனக்கு வேனும்ன்றதுக்காக.” என்று கரகரப்பான குரலில் கூற, வெண்பாவிற்குச் சட்டென்று தொண்டை அடைத்தது. அப்படியே தலை குனிந்து அவள் அமைதியாகிட,
இவனுக்கோ போன கோபம் மீண்டும் வர, “உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன். இந்த அரசியல், மீட்டிங், இதெல்லாம் வேண்டாம்ன்னு. சொன்னா கேக்கமாட்டியா!!” என்று எரிந்துவிழ, அடுத்த நொடி, பட்டென்று மாறனின் கையை உதறியபடி, தன் கையை விடுவித்துக் கொண்டவள் அவனை எரித்துவிடும் பார்வை பார்த்து, “ஓஹோ! அப்போ என்னை அரசியல்ல இருந்து பின்வாங்க வைக்கத் தான் என்னைக் காப்பதுற வேலை செஞ்சியலோ?? ஏன் உங்க அப்பா மட்டும் தான் இந்த அரசியல்ல இருக்கனுமா?? நாங்க எல்லாம் இருக்கக் கூடாதா??” என்று நக்கல் குரலில் கேட்க, ‘இவ இதை விடவே மாட்டாளா!!’ என்றிருந்தது மதிமாறனுக்கு.
“ஏன்ட்டி எப்போ பாரு என் அப்பனையே இழுக்குற. எதுவா இருந்தாலும் அது நாம ரெண்டு பேருக்குள்ள மட்டும் தான். புரியுதா வெண்பா.” என்று கனிவாகவே அவன் சொல்ல,
“என் பேரு வெண்பா இல்லை, மதிவெண்பா.” என்று பட்டென்று இடை புகுந்தாள் வெண்பா.
அதைக் கேட்டு சட்டென்று சிரித்த மாறன், “எனக்கு நீ வெண்பா தான். எனக்கு மட்டும் தான்.” என்று உரிமை உணர்வு கலந்த குரலில் அழுத்தமாகக் கூறினான். ஆம்! இவன் ஒருவன் தான் அவளை வெண்பா என்று அழைப்பான். மற்ற அனைவரும் ‘மதி’ என்றே அவளை அழைப்பார்கள்.
மாறன் பேசியதில் கடுப்பானவள், “வெண்பான்னு கூப்பிட நீங்க யாரு??” என்று சுள்ளென்று கூற,
மாறனோ, புன்னகையுடன் “நான் யாரா??” என்றபடி அவளை நோக்கி அடியெடுத்து வைக்க, அவளோ அதிர்ச்சியுடன் பின்னோக்கி நகர்ந்தவள், கல் தடுக்கி விழ போக, “வெண்பா பார்த்து!!” என்ற மாறன், பதற்றத்துடன் தன் மனைவியை இடையோடு சேர்த்து அணைத்தவாறு தன்னை நோக்கி இழுக்க, அவளோ, ஒற்றைக் கையால் தன் வயிற்றைத் தாங்கியபடி, மறு கையால் தன் கணவனின் சட்டை காலரை இறுக பிடித்துக் கொண்டு, பயத்தில் கண்களை மூடிக் கொண்டு வேக மூச்சுகள் விட,
பல மாதங்கள் கழித்து அருகில் தெரியும் மனைவியின் முகத்தை ரசித்த மாறன், “இதோ இது தான் நானு.” என்று கிசுகிசுப்பக சொல்ல, பட்டென்று கண் திறந்து பார்த்த வெண்பா, அவன் என்ன சொல்கிறான் என்று தெரியாமல் முழிக்க, அவனோ, கண்களால் தன் சட்டை காலரை பிடித்திருக்கும் அவளது கையைக் காட்ட, பட்டென்று அவனை விட்டு சற்று விலகி நின்றாள் மதிவெண்பா.
“வேற ஒரு ஆம்பிளையை நீ இந்த மாதிரி பிடிக்கவும் மாட்ட, இதோ உன் இடுப்பை பிடிக்கவும் விட மாட்டட்டி. உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்.” என்று ஒருவித கர்வத்துடன் மாறன் சொல்ல, நிமிர்ந்து பார்த்த வெண்பா அப்பொழுதான் கவனித்தால், விலகி நின்றிருந்தாலும், மாறனின் கை, தன் இடையில் இருப்பதை. கோபத்தோடு அவனது கையை எடுத்து விட்டவள் வேகமாக அங்கு இருந்து நகர, “நீ கேட்ட கேள்விக்குப் பதில் கிடைச்சிடுச்சா, பொண்டாட்டி!” என்ற மாறனின் குரல் அவள் செவிகளைத் தீண்டிச் சென்றது

0 comments
Post a Comment