காதல் கலாட்டா - அத்தியாயம் 01

 


    அமெரிக்காவின் நியுயார்க் நகரித்தில் உள்ள கேளிக்கை விடுதி அது. நேரம் நள்ளிரவை நெருங்கி கொண்டிருந்தது. ஒலிப்பெருக்கியின் மூலம் ஒலித்த இசையில் அந்த இடமே அதிர்ந்து கொண்டிருந்தது. ஆண்கள், பெண்கள் என, இளசுகள் கூட்டம் விதவிதமான மது வகைகளை ருசிப்பார்த்துக் கொண்டும், நடனமாடியபடியும் இருந்தனர்.
    
    ஒலிப்பெருக்கியில் ஒலித்த இசையையே மிஞ்சிவிடும் அளவுக்கு, ஓர் இடத்தில் கூச்சலும் கரகோஷமும் காதைக் கிழித்தது.
    
    “மாதங்கி! மாதங்கி!” ஆண்கள் கூட்டம் ஒரு பக்கம் கரகோஷம் எழுப்ப, “கமான்! மாதங்கி யு கேன் டூ இட்!” மறுப்பக்கம் பெண்கள் கூட்டம் உற்சாகப்படுத்த, அனைவருக்கும் மத்தியில் நின்றிருந்தாள், அவள்.

    அவள் பெயர் மாதங்கி!

    சதைப்பற்று இல்லாத தேகத்தின் வளைவுகளை எடுத்துக்காட்டும் வகையில் உடலை இறுக்கமாகத் தழுவியிருந்த அந்தக் கருப்பு நிற ஆஃப் ஷோல்டர் பார்ட்டி உடை, முழங்காலுக்குச் சற்று மேல் வரை நீண்டு இருந்தது. இயற்கையிலேயே பிங்க் நிறத்தில் இருந்த உதடுகளின் மேல் பூசப்பட்டிருந்த சிவப்பு நிற உதட்டுச் சாயம் ஆளை மயக்கியது. அடர்த்தியான செயற்கை கண்ணிமை முடிகள் பொருத்தப்பட்ட கண்கள், பார்ப்போரை வசீகரித்தது. நீள்வட்ட முகம், நெற்றியில் புரளும் கற்றை முடியுடன் தோள் வரை நீண்டிருந்த கூந்தல் எனப் பார்ப்பதற்கு நடிகை ஸ்ருதி ஹாசனை நினைவுப்படுத்தினாள்.

    அவள் முன் டேபிளில் விஸ்கி கிளாஸ் இருக்க, பல விதமான மது வகைகளை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து தயாரிக்கப்பட்ட ‘காக்ட்டையில்’ அந்த க்ளாஸை நிரப்பியிருந்தது.

    ஆர்ப்பரிக்கும் நண்பர் கூட்டத்தைச் சுற்றி பார்வையைப் படரவிட்டவளின் கண்கள், இறுதியாக எதிரில் நின்றிருந்த அவனிடம் வந்து நிலைத்து. ‘உன்னால முடியும் கோ ahead!’ பார்வையால் தைரியம் சொன்னான். அவன் கையோ, ‘எடுத்து குடி’ எனச் சைகை செய்தது. ஒரு புன்னகையை அவனுக்குப் பதிலாகக் கொடுத்துவிட்டு, மேஜையின் மேல் இருந்த க்ளாஸை கையில் எடுத்தவள், அதில் இருந்த திரவத்தைக் கடகடவெனக் குடிக்க ஆர்மபித்தாள். கூட்டத்தின் ஆர்ப்பாட்டம் அதிகரித்தது.

    “மாதங்கி.....மாதங்கி..” சத்தம் அதிகரித்து ஒரு கட்டத்தில் ஹே!!!” என முடிய, காலி க்ளாஸை நச்சென்று மேஜையில் வைத்தாள். என்னமோ நாட்டிற்காகக் கோல்ட் மெடல் வாங்கியது போல, உடம்பெல்லாம் ஒரு சிலிர்ப்பு. எதையோ சாதித்துவிட்ட உணர்வுடன் கூட்டத்தினரை பெருமை பொங்க பார்த்தாள்.

    “சூப்பர் மாதங்கி!” ஆளாளுக்குத் தங்கள் வாழ்த்துக்களைக் கூறவும், அங்கு ஒலித்துக் கொண்டிருந்த இசை மாறியது. சுற்றி இருந்த அனைவரும் தத்தம் ஜோடிகளுடன் ஆட சென்றுவிட, மாதங்கியை சுற்றியிருந்த கூட்டம் கலைந்தது.

    “Shall we dance?!” மயக்கும் பார்வையுடன் மாதங்கியின் முன் தன் கையை நீட்டினான் அவன். புன்னகையுடன் அவன் கையைப் பற்றிக்கொண்ட மாதங்கி, நடன மேடைக்குச் சென்றாள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆட்டத்தில் கரையை, அதன்பின் இருவரும் இருக்கையில் வந்து அமர்ந்தனர்.

    “Barrer, 2 shot.” மாதங்கிக்கும் சேர்த்து தானே ஆர்டர் சொல்லிவிட்டுத் திரும்பினான். மாதங்கியின் முகத்தில் சற்று முன்பிருந்த உற்சாகம் முழுவதும் வடிந்திருக்க, அவள் முகத்தில் ஒரு கலக்கம்.

    அவள் கைகளை மென்மையாகப் பற்றினான். “இதெல்லாம் இங்க காமன் மது. நாட் எப் பிக் டீல். சியர் அப்!” அவளின் கலக்கத்தைப் போக்கும் விதத்தில் கூறினான். அவளிடம் பதில் இல்லை. தான் அமர்ந்திருந்த ஸ்டூலை அவள் அருகில் இழுத்துப்போட்டு, அவள் முகத்தை நிமிர்த்தி, களைந்திருந்த அவள் கேசத்தைச் சரி செய்தவன், “நான் சொல்றேன்ல அப்புறம் என்ன? மொடா குடிகாரி மாதிரி வருத்தப்படுற. தேவைப்படும்போது அப்பப்போ சின்னதா குடிக்கலாம். தப்பில்லை." நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினான். மதுவின் முகம் இப்பொழுது சற்றே நிம்மதியை காட்டியது.

    அதற்குள் பேரர் வர, மீண்டும் தயங்கிய அவளை, கட்டாயப்படுத்திக் குடிக்க வைத்தான். ஷாட்டில் ஆரம்பித்து, ஒரு முழுப் பாட்டிலை அவர்கள் இருவரும் முடிக்கும் தருவாயில் நேரம் நள்ளிரவைத் தாண்டி இருந்தது. சுற்றி இருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் காலியாக ஆரம்பித்தது.

    “சர்! க்ளோசிங் டைம்!” பேரர் சொல்லவும், எழுந்து கொண்டனர் மதுவின் அவனும்.

    சற்றே தலை சுற்றியது. தள்ளாடிய உடலை மேஜையைப் பிடித்து நிலைநிறுத்த முயற்சித்தாள். ஆனால் முடியவில்லை. அதற்குள் அவளைத் தாங்கிப் பிடித்துக்கொண்டான் அவன். மெதுவாக இருவரும் பப்பை விட்டு வெளியே வந்து, காரில் ஏறி அமர, அடுத்தச் சில நிமிடங்களில் ஸ்பீட் லிமிட்டை தாண்டி சீறி பாய்ந்து அவர்களின் கார்.

    ஐம்பது.....எழுவது.....நூறு.....நூற்றி இருவது....காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்து கொண்டிருந்தது அந்த விலையுர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்.

    “மெதுவா போ...” மங்கலான பார்வையைச் சரி செய்ய முயன்றபடி குழறினாள் மாதங்கி.

    “ச்சில் மாதங்கி! திஸ் இஸ் சோ ஃபன்!!” ஸ்டியரிங் வீலை சுழற்றியபடி பதிலுக்குச் சொன்னவன், “ஹூ!!” எனச் சத்தம் போட்டுக் கத்தினான். கத்தியபடி ஸ்டியரிங்கை அவன் ஒடித்துத் திருப்ப, எதிரில் ஒரு கார் இவர்களை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.

    கண்களைக் கூச செய்த காரின் ஹெட்லைட்டின் வெளிச்சத்தில், கஷ்டப்பட்டு முழித்துப் பார்த்த மாதங்கி அப்பொழுதுதான் எதிரில் வந்து கொண்டிருந்த காரைப் பார்த்தாள். ஏதோ அசம்பாவீதம் நடக்கபோகிறது என்பதை உணர்ந்து அவள் கத்துவதற்குள் அந்தச் சம்பவம் நடந்தது.

* * * * *

    ‘ட்ரீங்ங்ங்ங்ங்......’ திடீரென விழித்துக்கொண்ட கைகுழந்தையைப் போல வீறிட்டது அலாரம். தூக்கிவாரிப்போட எழுந்து அமர்ந்தாள் மாதங்கி. “ஆஹ்ஹ!! ஆஹ்ஹ!!” நெஞ்சுக்கூடு வேகமாக ஏறி இறங்கியது. வேக மூச்சுகளை எடுத்துத் தன்னைச் சமன் செய்ய முயன்றாள். முடியவில்ல. அவளின் இதயத்துடிப்பு அவள் காதுகளுக்கே கேட்டது. அந்த ஏசியிலும் முகம் முழுவதும் முத்து முத்தாக வேர்த்திருக்க, உடலோ அப்பட்டமாக நடுங்கி கொண்டிருந்தது.

    அடிக்கடி வரும் அதே கனவு!

    சைட் டேபிளில் இருந்த அந்த அரை லிட்டர் வாட்டர் பாட்டிலை எடுத்தவள், ஒரே மடக்கில் அதைக் காலி செய்தாள். இன்னும் பதற்றம் குறையைவில்லை.

    எந்த நாளை தன் வாழ்நாளில் மறக்க வேண்டும் என்று நினைக்கிறாளோ, அந்த நாள் மீண்டும், மீண்டும் கனவாக வந்து அவளைப் பலமிழக்கச் செய்கிறது. அவள் மனமோ, விட்ட இடத்திலிருந்து கனவைத் தொடர, அன்றைய நாள் நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தில், கண்களை மூடிக்கொண்டு தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள். நினைவலையில் இருந்த காட்சிகள், படமாக ஓடியது.

    எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ தெரியாது, மீண்டும் அலாரம் அடிக்கவும் தான் நடப்புக்கு வந்தாள். அலாரத்தை அணைப்பதற்காக மொபைலை எடுத்தவள் அப்பொழுதுதான் கவனித்தாள், ஐந்து மணிக்கு வைக்க வேண்டிய அலாரத்தை, தவறாக ஏழு மணிக்கு வைத்திருப்பதை. அன்றைக்கு முக்கியமான செய்தியாளர் சந்திப்பு இருப்பதால் பரபரப்பு அவளைத் தொற்றிக்கொண்டது. கனவின் தாக்கம் அப்போதைக்குப் பின்னுக்குப் போயிருந்தது.

    “செத்தேன் நான்! முக்கியமான வேலை இருக்கும்பொழுது தான் இப்படிச் சொதப்பி வைப்பேனா நான், ச்சேய்!!” என்று கத்திக்கொண்டே, குளியல் அறைக்குள் புகுந்தாள்.

    அரக்கப்பறக்க மாதங்கி குளித்துக் கொண்டிருக்க, அவளது கார்ட்லெஸ் ஃபோன், அலறியது.

    “சுத்தம்! அவளா தான் இருக்கும். வண்டவண்டையா திட்டப்போறா !!” என்று புலம்பிக்கொண்டே, ஷாம்பூ நுரையுடன், கார்ட்லெஸ் ஃபோனை எடுத்துக் காதில் வைத்தாள். இவள் பேச வாயெடுப்பதற்குள், அந்தப்பக்கம் அர்ச்சனை ஆரம்பித்தது.

    “இன்னைக்கு முக்கியமான ப்ரெஸ் கான்ஃபெரன்ஸ் இருக்குன்னு நேத்தே அத்தனை தடவை சொல்லி தானே அனுப்பினேன். இவ்ளோ நேரம் என்ன பண்ற வீட்டில?? எங்க இருக்க இப்போ நீ??” மாதங்கியின் அலுவகத் தோழி, ஜெசிக்கா ஆங்கிலத்தில் படபடவெனப் பொரிய,

    நுரை வழியும் முகத்தைத் துடைத்துக்கொண்டே, “சாரி ஹனி! ஜஸ்ட் டென் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்.” என்று பதிலுக்கு மாதங்கி, இஷ்டத்துக்குப் பொய்யை அவிழ்த்து விட, பத்து நிமிடமா, அரை மணி நேரமா என்று தான் அவள் தோழிக்கு தெரியுமே, “இன்னும் அரை மணிநேரத்தில நீ இங்க இருக்கணும். அவ்ளோதான்.” என்றவள், ஃபோனை வைத்துவிட, ‘ஆஹா!! ஹனி ரொம்ப ஹாட்டா இருக்கும் போலையே!!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்ட மாதங்கி, தண்ணீரின் வேகத்தைக் கூட்டினாள்.

    அடுத்தப் பத்து நிமிடத்தில், குளித்து வெளியே வந்தவள், மடமடவென உடை மாற்றினாள். கருப்பு நிற பென்சில் ஸ்கர்ட், வெள்ளை நிற பார்மல் ஷர்ட் அதன் மேலே கருப்புக் கோட், என உடை அணிந்தவள், நடுமுதுகு வரை வளர்ந்திருந்த தலை முடியின், கீழ் பகுதியை மட்டும் கர்ல் செய்து, அப்படியே விரித்துவிட்டு, காதில் கடுக்கன் அளவிலான ஒற்றை வைரக்கல் கம்மலை போட்டுக்கொண்டு, கண்ணாடியில் பார்க்க, அழகாகத் தெரிந்தாள். அதிலும், நெற்றியின் பக்கவாட்டில் வெட்டப்பட்டுள்ள கற்றை முடி, அவளது முகத்திற்குக் கூடுதல் வசீகரத்தை கொடுத்தது. அவளது உயரத்திற்கும், ஸ்லிம் உடல்வாகுக்கும், ஃபேஷன் இதழ்களில் வரும் மாடல் அழகி போல இருந்தாள்.

    “பக்கா!!” எனக்குத் தனக்குள் சொல்லிக் கொண்டவள், தயாராகி அறையை விட்டு வெளியே வர, மேலும் பதினைந்து நிமிடம் ஓடியிருந்தது. முஹூம்!! இதற்கு மேல் சாப்பிட்டு கிளம்ப நேரம் ஆகிவிடும் என்பதால், பிரிட்ஜில் இருந்த ஆரஞ் ஜூசை எடுத்துக்கொண்டு, அந்த வானுயர்ந்த கட்டிடத்தில் இருந்த தன் லக்சரி அபார்ட்மெண்டை பூட்டிவிட்டு, பார்க்கிங் வந்தவள், அடுத்த ஐந்து நிமிடத்தில் கே புக் செய்து, தான் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைந்தாள்.

    மாதங்கி, முப்பத்திரண்டு வயதை கடந்த பெண். ஆனால் பார்ப்பதற்கு இருப்பத்தைந்து வயது போலக் காட்சியளிப்பாள். வேலையின் பொருட்டு, உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பதும், அவளின் இளமையான தோற்றத்திற்கு ஒரு காரணம்.

    மாதங்கி, அமெரிக்காவின் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில், செய்தி சேகரிப்பாளராகப் பணிபுரிந்து வருகிறாள். அவள் அமெரிக்கா வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகிறது.

    எதையோ மறப்பதற்காக, வேலையைக் காரணமாக வைத்துக்கொண்டு, அமெரிக்கா வந்தவள், சில வருடங்கள் கழித்து, தோழிகளின் வற்புறுத்தலின் பேரில், இந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தில் இன்டர்வியூக்குச் சென்றாள்.

    அபாரமான ஆங்கிலப் புலமையும், மாடல் அழகிய போன்ற வசீகர முகமும், பல மொழிகளில் பேசக்கூடிய திறமையும், மாதங்கியைத் தனித்துக் காட்ட, அவளை மறுக்க முடியவில்லை, அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தால். உடனே அவளை வேலைக்குச் சேர்த்துக் கொண்டனர்.

    ஆரம்பத்தில், அத்தொலைகாட்சியில், காலை ஏழு மணிக்கு ஒளிபரப்பாகும், ‘குட் மார்னிங் அமெரிக்கா’ என்ற நிகழ்ச்சியில், ஷோ ஹோஸ்ட்டாகப் பணியாற்றிக் கொண்டிருந்தாள்.

    பின், அவளது சேனல் ஹெட்டின் பரிந்துரையின் பெயரில், செய்தி சேகரிப்பாளராக மாற்றப்பட்டாள். அங்கு, இங்கு அலைந்து திரியும் வேலையாக இருந்தாலும், அது அவளுக்கு ஒருவித ஈர்ப்பை உண்டாக்கியது.

    வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு ஊர்கள், நாட்டு நடப்புகள், சமுதாயப் பிரச்சனைகள், விளையாட்டு, எனப் பல விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள அவளுக்குப் பிடித்திருந்தது. மறுப்புத் தெரிவிக்காமல், அந்த வேலையை ஏற்றுக்கொண்டாள். அப்படியே காலம் ஓடிக் கொண்டிருக்கிறது அவளுக்கு.

    இதோ, இன்று மதியம் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபரின் பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கவிருக்கிறது. அதற்காகத் தனது அலுவலகம் இருக்கும் நியூயார்க் நகரில் இருந்து, வெள்ளைமாளிகை இருக்கும் வாஷிங்டன் டிசி நகருக்கு மாதங்கி, அவளின் தோழி மற்றும் கேமராமேன் மூவரும் விமானத்தில் பயணிக்கின்றனர்.

    விமானம் புறப்பட இன்னும் ஒரு மணிநேரம் தான் இருந்தது. அங்குப் போனால் வீடு திரும்ப நேரம் ஆகும் என்பதால், வரும்பொழுது வாங்கி வந்த சேண்ட்விச்சை மடமடவெனச் சாப்பிட்டவள், அதே வேகத்தில் ஆரஞ் ஜூசையும் ஒரே மடக்கில் குடித்து முடித்தாள்.

    அந்தக் காலை நேர வாகன நெரிசலையும் மீறி, ஒரு வழியாக விமான நிலையம் வந்து சேர்ந்தவளை, வெட்டாத குறையாக முறைத்த ஜெசிக்கா, அவளை இழுத்துக்கொண்டு சென்றாள்.

    ஜெசிக்கா, மாதங்கியை விட ஒரு சில வயது மூத்தவள். பார்பதற்கும் அப்படித்தான் இருப்பாள். மாதங்கி அளவுக்கு அழகு என்று சொல்ல முடியாவிட்டாலும், அவளும் அழகி தான். நல்ல உயரம், சற்றே பூசிய மாதிரியான உடல்வாகு கொண்டவள். முக்கியமாகப் பொன்னிற தலைமுடி அவளுக்கு இருப்பதால், அவளை அலுவகத்தில் ‘ப்ளாண்டி’ என்று செல்லமாக அழைப்பர்.

    “சாரி பேபி!! அலாரம் சொதப்பிடுச்சு. அதான் லேட் ஆகிடுச்சு.” என்று புலம்பியவாறு ஜெசிக்காவின் இழுப்புக்கு பின்தொடர்ந்தாள் மாதங்கி. ஆனால் ஜெசிக்கா இதையெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை. விமானத்தில் ஏறி அமர்ந்த பின்னரே, வாயை திறந்தாள். ‘ஐயோ!! இதுக்கு இவ பேசாமலே இருந்திருக்கலாம்.’ என்று மாதங்கி புலம்பி தீர்க்கும் அளவுக்கு ஜெசிக்கா, இவளை வறுத்து எடுத்து விட்டாள்.

    அடுத்த இரண்டு மணிநேரத்தில், வெள்ளை மாளிகையின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அரங்கில் அமர்ந்திருந்தாள் மாதங்கி. மற்ற நேரங்களில் சிறு பிள்ளை போலச் செல்லம் கொஞ்சி கொண்டும், சேட்டை செய்து கொண்டும் இருப்பவள், வேலை என்று வந்துவிட்டால், அப்படியே தலைகீழாக மாறிவிடுவாள். அவள் கேட்கும் கேள்விகளின் கூர்மையில் அனல் பறக்கும். அதனாலாயே பத்திரிக்கையாளர்கள் மத்தியில், மாதங்கிக்கு நன்மதிப்பும், மரியாதையும் உண்டு.

    அமெரிக்காவின் பொருளாதார நிலையைப் பற்றியை பத்திரிக்கையாளர் சந்திப்பு அது. அரை மணிநேரத்தில், தன் பேச்சை முடித்துக்கொண்ட அமெரிக்க அதிபரிடம், பத்திரிகையாளர்கள் அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர்.

    மாதங்கியும் தன் பங்கிற்குக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தாள். அமெரிக்காவின் பொருளாதார எதிர்காலம், அரசின் தரப்பில் இருந்து மக்களுக்குச் சொல்லப்படும் செய்தி, மத்திய கிழக்கு நாடுகளுடானா அமெரிக்காவின் உறவு சிக்கல்கள், இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் இருக்கும் உரசல்களில், அமெரிக்காவின் நிலைப்பாடு, என அடுக்கடுக்காகக் கேள்விகளை அவள் அடுக்க, அதிபரே அவளின் தைரியத்தை அதிசயமாகத் தான் பார்த்தார்.

    மற்ற பத்திரிக்கையாளர்களோ, வழக்கம் போல அவளைக் கேள்வி கேட்க விட்டுவிட்டு, திறந்த வாய் மூடாமல் பார்த்திருந்தனர், சிலரோ அவளின் கேள்விகளுக்கு வழங்கப்படும் பதில்களைக் குறிப்பெடுத்துக் கொண்டனர்.

    அரை மணிநேரத்தில், கூட்டம் முடிந்து, அனைவரும் வெளியேற,

    “ஹே!! மதங்கி!! தட் வாஸ் க்ரேசி !! யு ஜஸ்ட் ராக்ட் இட் கேர்ள்!!” – என்றபடி, மாதங்கியை நோக்கி வந்தான், மைக்.

    “தேங்க்ஸ் மைக். ஆனா, மறுபடியும் என் பெயரை சொதப்பிட்ட. என் பேரு மதங்கி இல்லை மாதங்கி.” பதிலுக்கு உதடு பிதுக்கினாள் மாதங்கி.

    “ஹா!! ஹா!! சாரி பேபி!!”, அவன் முகம் மன்னிப்பை யாசிக்க, மாதங்கியோ சிரிப்புடன் அவனிடமிருந்து விடைபெற்றாள்.

    வேலையை முடித்துக்கொண்டு, அங்கிருந்து திரும்பிய மாதங்கியும் அவள் குழுவும், தொலைக்காட்சி நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். பின் அன்றைய வேலைகளை முடித்துக்கொண்டு, இரவு தன் வீட்டிற்குக் காரில் திரும்பிக் கொண்டிருந்தாள்.

    கார் முன்னோக்கி சென்று கொண்டிருக்க, அவளது நினைவுகளோ, நேற்று இரவு தாயுடன் பேசியதை நினைத்துப் பார்த்தது.

    நேற்று இரவு பார்ட்டியை முடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தவளை, ஃபோனில் அழைத்தார், மாதங்கியின் தாய் வத்சலா.

    “மதுமா, எப்படி இருக்க?!”

    “நான் நல்லா இருக்கேன் மா. நீங்க எப்படி இருக்கீங்க?! ஜானவி எப்படி இருக்கா?! பாப்பா நல்லா இருக்காளா?!”

    “ம்ம், ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க.”

    “ஹரி, சந்தியா, பசங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா மா?!”

    “எல்லாரும் நல்லா இருக்காங்க டி. அங்க வேலை எப்படிப் போகுது?!”

    “ம்ம், நல்லா போகுது மா. மாப்பிள்ளை வீட்டில வந்து பார்த்துட்டு போனாங்களா?!”

    “குழந்தை பிறந்தப்போ வந்து பார்த்துட்டு போனாங்க. மாப்பிள்ளை மட்டும், நேரம் கிடைக்கும்போது, கொஞ்ச நேரம் இருந்துட்டு போறார். அது இருக்கட்டும், நீ எப்போ இங்க வர்ற மது?!”

    “அது....லீவ் அவ்வளவு சீக்கிரத்தில கிடைக்காது மா. அந்தப்பக்கம் வர்ற சந்தர்ப்பம் கிடைச்சா, கேட்டுப் பார்க்கிறேன் மா.”

    “ஒரு மாசத்துக்கு முன்னாடி குழந்தை பிறந்தப்போவும் இதே தான் சொன்ன மது. இன்னும் ரெண்டு மாசத்தில அவ பிறந்த வீட்டுக்கு போய்டுவா. அதுக்குள்ள உன் கூட இருக்கணும்னு ஆசைபடுறா. நீ கொஞ்சம் ட்ரை பண்ணு மது.”

    “ம்ம், சரி மா.”

    அதன்பின் அங்கே சில நொடிகள் மவுனம் நிலவ, பின் மெல்ல பேச்சை ஆரம்பித்தார் வத்சலா.

    “உன்னை நினைச்சா ரொம்பக் கவலையா இருக்கு மது.”

    மது எதுவும் சொல்லவில்லை. மவுனமாக இருந்தாள். வத்சலாவே, பேச்சை தொடர்ந்தார்.

    “உனக்குப் பின்னாடி பிறந்த தங்கச்சிக்கும், தம்பிக்கும் கல்யாணம் முடிஞ்சு, ஆளுக்கு ரெண்டு பிள்ளையும் பிறந்தாச்சு. நீ இன்னும் இப்படி இருக்கிறது, கஷ்டமா இருக்கு டா. நீ இப்படியே தனியா இருந்துடுவியோன்னு அம்மாக்கு பயமா இருக்கு, மது.”

    மது இப்பொழுதும் பதிலேதும் பேசாமல் இருக்க, மகளின் மவுனம் தாயை கவலைக் கொள்ளச் செய்தது.

    “மது, நான் சொல்றதை கேட்குறியா? இல்லையா?!” என்றார் ஆதங்கத்துடன்.

    “ம்ம்....கேட்கிறேன்.” – முன்பிருந்த உற்சாகம் குறைந்திருந்தது அவளின் குரலில்.

    “இப்படியே எத்தனை நாளுக்கு நான் சொல்றதை மட்டும் கேட்டுட்டு இருக்கப் போற மது?! எப்போ தான் கல்யாணம் செய்துக்கப் போற?! எப்போ கேட்டாலும், இதோ அதோன்னு தட்டிக் கழிச்சிட்டு தான் இருக்க. எனக்கு இப்போ பதிலை சொல்லு மது. உன்னைத்தான் டி கேட்கிறேன். எப்போதான் கல்யாணம் செய்துகிறதா உத்தேசம்?!”

    “கொஞ்ச நாள் போகட்டும் மா. வேலை இருக்கு.”

    “இதையே தான் டி, அங்க போனதில இருந்து சொல்லிட்டு இருக்க. என்ன காரணம்னு தெரியல, திடீர்ன்னு ஆஃபிஸ்ல அனுப்புறாங்கன்னு, அமெரிக்கா கிளம்பி போன, போனவ போனவ தான். வேலை வேலைன்னு, கண்ணை மூடி திறக்கிறதுக்குள்ள, பத்து வருஷம் ஓடிடுச்சு. அதுக்குள்ள நான் சொல்லச் சொல்ல கேட்காம, எதை எதையோ பேசி, ஹரிக்கும், ஜானவிக்கும் கல்யாணத்தை முடிச்சிட்ட. நீ செய்றது ஏதும் சரி இல்லை மது.” படபடவெனக் கோபமாகச் சொன்னவர், “உன்னைத் தனி மரமா விட்டுட்டு நான் போய்ச் சேர்ந்திடுவேனோன்னு ரொம்பப் பயமா இருக்கு டி.” என்று சொல்லிவிட்டு விசும்பினார்.

    தாயின் பேச்சைக் கேட்டுப் பதறிய மாதங்கி, “ஏன்மா, இப்படி எல்லாம் பேசுற. அதெல்லாம் ஒன்னும் ஆகாது. இனி இப்படிப் பேசாதமா. எனக்குக் கஷ்டமா இருக்கு.” என்றாள், கலங்கிய குரலில்.

    “எனக்கும் தான்டி கஷ்டமா இருக்கு, என் பொண்ணை நினைச்சு. உன் வயசுல இருகிறவ எல்லாம், புருஷன் பிள்ளைங்கன்னு தெருவுல போறதை பார்க்கும்பொழுது, எனக்கு எவ்வளவு வேதனையா இருக்கும்னு உனக்குத் தெரியுமா டி!! உங்க பொண்ணுக்கு எதுவும் பிரச்சனையா, ஏன் இன்னும் கல்யாணம் செய்யலன்னு ஒவ்வொருத்தியும் கேட்கும்போது, மனசு ரணமாகுது டி. அவளுங்க கிட்ட எல்லாம் போய், என் பொண்ணுக்கு ஒரு குறைச்சலும் இல்லை, அவ மகாராணி, அப்படின்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லணும் போலக் கோபம் வருது. சொன்னாலும், ஊர் வாயை மூட முடியுமா!! இப்போ எல்லாம் ராத்திரில தூக்கமே வர மாட்டேங்குது மது. உங்க அப்பா இருந்தார்னா, உன்னை இப்படித் தனியா விட்டு இருப்பாரான்னு அடிக்கடி தோணுது. கடவுள் அவருக்குப் பதிலா, என்னையைக் கூட்டிட்டு போயிருக்கலாம்.” சொல்லி முடித்துவிட்டு, அவர் அழ ஆரம்பிக்க,

    “அம்மா!!!!!” என்று கத்திவிட்டாள் மாதங்கி.

    அடுத்த நொடி, அழைப்பை துண்டித்துவிட்டு மொபைலை கட்டிலில் விசிறி அடித்தவள், அப்படியே தலையைப் பிடித்துக்கொண்டு, அமர்ந்துவிட்டாள்.

    சற்று முன்பு பார்டி சென்று வந்த உற்சாகம் முழுவதும் வடிந்திருந்தது. தாயின் வார்த்தைகளும், அவரின் அழுகையும் மூளைக்குள் மீண்டும் மீண்டும் ஓடி, அவளைக் கஷ்டப்படுத்தியது. மெல்ல கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

    கண்ணீர் வழிய வெகு நேரம் அமர்ந்திருந்தவளுக்கு, அவளுடைய இந்தப் பலகீனம் எரிச்சலை வரவைக்க, கோபத்துடன் எழுந்தவள், பக்கத்தில் இருந்த பூச்சாடியை எடுத்து சுவற்றில் விசிறியடித்தாள்.

    “கல்யாணம்.....கல்யாணம்.....கல்யாணம்.....ஏன் மா இப்படி என்னைச் சாகடிக்கிற?! எனக்குக் கல்யாணம் செய்துக்கப் பிடிக்கல. அதைச் சொன்னா ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கிற?! உன்னையும் கஷ்டபடுத்திகிட்டு, என்னையும் கஷ்டபடுத்துற......என்னால முடியல மா...” என்று ஆக்ரோஷமாகக் கத்தியவள், கோபத்துடம் கண்களை அழுத்தி துடைத்துக்கொண்டு, பால்கனியில் சென்று சோபாவில் அமர்ந்து, தூரத்தில் தெரிந்த வாகன நெரிசலை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.

    வெகு நேரம் அப்படியே அமர்ந்திருந்தவளுக்கு, மெல்ல மெல்ல ‘அவன்’ நியாபகம் வந்தது.

கதைச்சுருக்கம் படிக்க

0 comments

Post a Comment

Message

Share your thoughts!

Address

Contact Info

Please share your feedback about the stories to the following email address.

Email:

Facebook