உன் பாதியும் என் மீதியும் - அத்தியாயம் 01

 


    சென்னை!

    ஒற்றைப் படுக்கையறைக் கொண்ட வீடுகள் நிறைந்த குவாட்டர்ஸ் பகுதி அது. மாலை நெருங்கி கொண்டிருந்த வேளை.
அக்கம்பக்கத்தில் இருக்கும் பெண்களின் பேச்சுக்குரல் ஒரு பக்கம் கேட்டுக்கொண்டு இருக்க, உடம்பு சரி இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி செல்லாமல் தெருவில் கிரிகெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் குரல்கள் மறுபுறம் கேட்டுக்கொண்டு இருந்தது.

    இதைத் தவிர எங்கும் நிசப்தம்.

    “டிங்! டாங்!” கடிகார ஓசை நான்கு முறை அடித்து, நேரம் மாலை நான்கு என்று சொல்லியது.

    ரவிக்கையில் எம்ப்ராய்டரி போட்டுக் கொண்டிருந்த மைதிலி, நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தாள். பதற்றம் அவளைத் தொற்றிக்கொண்டது. ஊசியை ரவிக்கையில் பின் செய்துவிட்டு, துணியை அப்படியே மடித்து அலமாரியில் வைத்தவள், எழுந்து சென்று சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடி முன் இருந்த சீப்பை எடுத்து மடமடவெனத் தலை வாரினாள். பின் துப்பட்டாவைத் தேடி எடுத்து, நேர்த்தியாகப் பின் செய்தவள், குளியலறை சென்று துண்டை தண்ணீரில் நனைத்து எடுத்து வந்தாள். துண்டோடு கண்ணாடி முன் நின்றவளின் பார்வை அவளின் முகத்தை அணுஅணுவாக ஆராய்ந்தது.

    ஒரு பக்க முகத்தில் சதை சுருங்கி கருத்திருந்தது. புருவம் இருந்த பகுதி, முழுமையாக வழித்து எடுத்ததுப்போலக் காட்சி அளித்தது. கண்ணின் மேல் இமை, ஓரங்களில் சற்றே கீழிறங்கி, பாதிக் கண்ணை மூடி இருந்தது.

    வலது கை விரலால் மெல்ல கன்னத்தைத் தடவினாள். மேடு பள்ளமாக இருந்த சதையில் பயணிக்கும்போது அவளையும் அறியாமல் கை விரல்கள் நடுங்கியது.

    நடந்தவை எல்லாம் படமாகக் கண் முன் ஓடியது. கடந்த சில மாதங்களில் என்னவெல்லாம் நடந்து முடிந்துவிட்டது. நினைக்க நினைக்க நெஞ்சம் எரிந்தது. ஒவ்வொரு நொடியும் தோன்றும் எண்ணம் தான். இருந்தும் நினைக்காமல் இருக்க முடியவில்லை, மறக்காமல் இருக்கவும் முடியவில்லை.

    நினைவுகளில் இருந்து மீண்டவள், நேரமாவதை உணர்ந்து, ஈர துண்டால், முகம் முழுவதும் ஒற்றி எடுத்துவிட்டு, முகத்தை மறைக்கும் விதத்தில் துப்பட்டாவை நேர்த்தியாகக் கட்டிக்கொண்டாள். கண்கள் மட்டுமே வெளியே தெரிந்தது.

    எப்பொழுதும் புடவை கட்டுபவள், இப்பொழுதெல்லாம் சுடிதார் தான் போடுகிறாள். அதுவும் துப்பட்டாவை முகத்தை மறைப்பது போலத் தான் கட்டுவாள். கேட்டால், அடுத்தவர்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை என்பாள்.

    “தோலு கருத்திருமாம்! துப்பட்டாவை கட்டி இருக்கிறதைப் பாரு!” அவளைக் கடந்து செல்லும் சிலரின் கமென்ட் இது.

    அழகை பேணி காப்பதற்காக இப்படிக் கட்டி இருக்கிறாள் என்பது அவர்களின் எண்ணம். ஆனால் அழகில்லாத முகத்தை அடுத்தவரின் பார்வைக்கு விருந்தாக்க வேண்டாம் என்பது இவளின் எண்ணம்.

    பர்சையும் மொபைலையும் எடுத்துக் கொண்டவள், வீட்டை பூட்டிவிட்டு மடமடவெனத் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். தெருவின் முனையை நெருங்கும்போதே, அவள் போக வேண்டிய பேருந்து அவளைக் கடந்து செல்ல, ஓட்டமும் நடையுமாக ஓடினாள். பஸ் கிளம்பும் நேரம் எப்படியோ படிகளில் தாவி ஏறிவிட்டாள்.

    “உள்ள போ! உள்ள போ! உள்ள அவ்வளவு இடம் இருக்குல்ல, நகருமா உள்ள! போன ஸ்டாப்ல ஏறுனவங்க எல்லாம் டிக்கெட் எடு!” காட்டுக்கத்தாய்க் கத்திக்கொண்டு இருந்தார் நடத்துனர்.

    “ஒரு சென் ஜான்ஸ்!” பணத்தை நடத்துனரிடம் நீட்டினாள் மைதிலி. பக்கத்தில் இருந்தவருக்கு டிக்கெட்டை கிழித்துக் கொடுத்துவிட்டு, மைதிலியின் கையில் இருந்த பணத்தை வாங்கிய நடத்துனர், பயணச் சீட்டை கிழித்து நீட்டும்பொழுது தற்செயலாக நிமிர, சட்டென்று அவரின் முகம் ஒரு நொடி சுருங்கியது.

    நடத்துனரின் முகபாவனையைப் பார்த்ததும் தான், ஓடி வந்த வேகத்தில் முகத்தை மூடியிருந்த துப்பட்டா விலகி இருப்பது மைதிலிக்குப் புரிந்தது. அவசரஅவசரமாகக் கீழே தொங்கி கொண்டிருந்த துப்பட்டாவை எடுத்து முகத்தை மூடிக் கொண்டவள், நடத்துனர் கையில் இருந்த டிக்கெட்டை வாங்கிகொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து உள்ளே சென்றாள்.

    நடத்துனர் மட்டும் மைதிலியின் முகத்தைப் பார்க்கவில்லை, அருகில் நின்றிருந்தவர்களும் பார்த்திருப்பார்கள் போல! தங்களை நோக்கி நகர்ந்து வரும் அவளிடம் இருந்து வேகவேகமாக விலகினர்.

    திடீரென ஒரு குழந்தை வீறீட்டு அழ, “அந்தப்பக்கம் போய் நில்லுமா! குழந்தை பயப்படுதுல.” மைதிலியைப் பார்த்து கத்தினார் குழந்தையின் தாய்.

    “சாரி!” சங்கடமாகச் சொன்ன மைதிலி, வேறு திசையில் நகர்ந்து யாருக்கும் தொந்தரவு தராத வகையில் ஒரு ஓராமாகச் சென்று நின்று கொண்டாள்.

    “இந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு இதுங்க எல்லாம் எதுக்கு வெளிய வருதுங்க. வீட்டுக்குள்ள கிடக்க வேண்டியது தான.”
பின்பக்கம் யாரோ பேசியது, மைதிலியின் காதில் விழ, ஆயிரம் டன் எடையைச் சுமந்தது போல மனம் வலித்தது. கண்களில் தேங்கிவிட்ட நீரை யாருக்கும் காட்ட விரும்பாமல் குனிந்து கொண்டாள்.

    சுற்றி இருந்தவர்களின் பலவிதமான பேச்சுக் குரல்கள் அவள் காதில் விழுந்து, மேலும் மேலும் அவளின் மனதை ரணமாக்கியது.

    “டேய்! அங்க பாரு மான்ஸ்டர்!” மைதிலியை சுட்டிக்காட்டி நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன்.

    “பாவம்! இந்த முகத்தை வச்சுக்கிட்டு இந்தப் பொண்ணு எப்படித் தான் வாழுதோ?” பரிதாபப்பட்டார் ஒரு வயதான பெண்மணி.

    “இப்படி இருக்கிறதுக்கு, பேசாம சர்ஜெரி செஞ்சுக்கலாமே!” மைதிலியிடம் பணம் கொட்டிக்கிடப்பதாக நினைத்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தாள் ஓர் இளம்பெண்.

    இப்படித் தினமும் பலவிதமான விமர்சனங்கள்!

    இவை எல்லாவற்றையும் கேட்கையில்,

    “நான் ஒண்ணும் வேற்றுகிரக வாசி இல்லையே! உங்க எல்லாரையும் மாதிரி கை, கால் இருக்கிற மனுஷி தானே!” என்று அவர்களைப் பார்த்து கேட்க வேண்டும் போலத் தோன்றும், ஆனால்?

    “ஃபீபீபீபீ! சென் ஜான்ஸ் எல்லாம் இறங்கு!”

    நடத்துனரின் விசில் சத்தத்தில் நடப்புக்கு வந்த மைதிலி, வேகவேகமாக நகர்ந்து படிகளில் இறங்கினாள். பேருந்தின் ஜன்னல் வழியே, அனைவரும் இவளை வேடிக்கைப் பார்ப்பது, பக்கவாட்டில் தெரிந்தது. அதைப் பொருட்படுத்தாமல் பேருந்து நிலையத்தை விட்டு நகர்ந்தாள். இம்முறை கவனமாகத் துப்பட்டாவை நன்றாகக் கட்டிக்கொண்டாள்.

    ‘இந்நேரம் பஸ்ஸில் இருந்த அனைவரும் தன்னைப் பற்றித் தான் பேசிக்கொண்டு இருப்பார்கள்.’ மனதில் எண்ணம் தோன்றினாலும், அதைத் தவிர்த்துவிட்டு, அருகில் இருந்த சந்திற்குள் நுழைந்தவள் நடையை எட்டிப் போட்டாள்.

    சற்றுத் தூரத்தில் இருந்த அந்த மூன்று மாடி பள்ளிக் கட்டிடத்தை அவள் நெருங்கவும், வகுப்புகள் முடிந்ததற்கான அறிகுறியாக மணி அடிக்க ஆரம்பித்தது. ‘நல்லவேளை, சீக்கிரம் வந்துட்டோம். நேத்து மாதிரி லேட் ஆகல.’ நினைத்தபடி பள்ளியின் வாசல் அருகில் ஓரமாக நின்று கொண்டாள்.

    பட்டாம்பூச்சியெனப் பிள்ளைகள் வெளியே வந்துகொண்டு இருக்க, மைதிலியின் கண்கள் தன் மகனைத் தேடியது. திடீரென அவள் கண்கள் பிரகாசமாக, அவளை நோக்கி ஓடி வந்தான், மைதிலியின் ஐந்து வயது மகன், ரோஹித்.

    “மம்மி!” கத்திக்கொண்டே தன் மேல் தாவிய மகனை ஆசையுடன் தூக்கிக் கொண்டவள், மகனின் கன்னத்தில் முத்தமிட, அவனோ “மம்மி! இனிமே நோ கிஸ்ஸிங்.” என்று சொல்லிவிட்டு, தன் கன்னத்தைத் துடைத்துக் கொண்டான்.

    “ஏன் தம்பு? அம்மா தானே கிஸ் பண்ணேன். எதுக்குக் கிஸ் பண்ண வேண்டாம்ன்னு சொல்ற?” புரியாமல் கேட்டாள்.

    “ஏன்னா, நீங்க ஒரு பொண்ணு. நான் ஒரு பையன். ஒரு பொண்ணும் பையனும் கிஸ் பண்ணக் கூடாதாம். மிஸ் சொன்னாங்க.” வெகு ஸ்ரத்தையாகப் பதில் சொன்னான் மகன்.

    “அவங்களா சொன்னாங்களா? இல்லை, நீயா கேட்டியா?”

    “அவங்களா தான் சொன்னாங்க மம்மி. நான் எதுவும் கேக்கல.”

    “திடீர்னு மிஸ் அப்படிச் சொல்ல மாட்டாங்களே! அவங்க சொல்ற அளவுக்கு நீ என்னடா பண்ண?” சிரிப்பும், கண்டிப்பும் கலந்து கேட்டாள்.

    “அது வந்து மம்மி, என் ஃப்ரெண்ட் இருக்காள்ள, நிஷா....”

    “ஆமாம். அவளுக்கு என்ன?”

    “அவ எனக்குச் சாக்கலேட் கொடுத்தா. பதிலுக்கு நான் அவளைக் கிஸ் பண்ணேன். அதுக்குத் தான், மிஸ் அப்படிச் சொன்னாங்க.”

    “கன்னத்தில கிஸ் பண்ணதுக்கு எதுக்குத் தம்பு, மிஸ் அப்படிச் சொல்லணும்?”

    “ஐயோ! மம்மி! நான் கன்னத்தில கிஸ் பண்ணல.”

    “பின்ன?!” கண்கள் விரிந்தது மைதிலிக்கு.

    “லிப்ஸ்ல கிஸ் பண்ணேன். இப்படி.” என்றுவிட்டு தாயின் உதட்டில் முத்தமிட்டான் மகன்.

    நடு ரோட்டில் வைத்து மகன் செய்த செயலில் கோபம் வந்தாலும், அவனின் அறியாமையை நினைத்துச் சிரிப்பு வந்தது அவளுக்கு.

    வந்த சிரிப்பை அடக்கியபடி மகனின் புத்தகப் பையையும், மதிய உணவு டப்பாவையும் வாங்கித் தன் தோளில் மாட்டிக் கொண்டவள் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தபடி மகனிடம் பேசினாள்.

    “சாக்கலேட் கொடுத்தா லிப்ஸ்ல கிஸ் பண்ணனும்னு உனக்கு யாரு சொல்லித் தந்தது தம்பு?”

    “நேத்து டிவில பார்த்தேன்.” ஏதோ சீரியலில் வந்த காட்சியைப் பார்த்துவிட்டுச் சொன்னான்.

    “மம்மி, மிஸ் சொன்ன மாதிரி, லிப்ஸ்ல கிஸ் பண்ணக்கூடாதா? அது தப்பா?”

    “மம்மி உன்னை ஒண்ணு கேட்கட்டுமா தம்பு?”

    “கேளுங்க மம்மி.”

    “தினமும் எதுக்குக் காலையில பிரஷ் பண்ற?”

    “சாக்கலேட் சாப்பிட்டா வாயில பூச்சி வந்துடும். அதுக்குத் தான் பிரஷ் பண்றோம்.”

    “அப்போ வாயில பூச்சி இருக்கும். அப்படித் தானே?”

    “ஆமாம் மம்மி!”

    “இதோ இப்போ நீ செஞ்சியே, இது மாதிரி இன்னொருத்தர் லிப்ஸ்ல கிஸ் பண்ணா, அவங்க வாயில இருக்கிற பூச்சி உன் வாய்க்குள்ள வந்துடும். அப்புறம் பல்லு வலிக்கும். ஜுரம் வரும். ஊசி போடணும். அதுக்குத் தான் லிப்ஸ்ல கிஸ் பண்ணக்கூடாதுன்னு சொல்றாங்க. உனக்கு ஊசி போடணுமா தம்பு?”

    “நோ! மம்மி. எனக்கு ஊசி வேணாம். வலிக்கும். இனி யாரையும் கிஸ் பண்ண மாட்டேன்.” பயத்துடன் பதில் சொன்னான் ரோஹித்.

    வந்த சிரிப்பை அடக்கியபடி சாலையைக் கடந்து பேருந்து நிலையம் நோக்கி சென்றாள்.

    அடுத்த இருபது நிமிடத்தில் வீடு வந்து சேர்ந்ததும், மகனை குளியலறை அனுப்பிவிட்டு, அவனின் உடமைகளை ஃஷெல்பில் அடுக்கிக்கொண்டு இருந்தாள் மைதிலி.

    அந்த நேரம் ஃபோன் அடிக்கும் சத்தம் கேட்டது. வக்கீலாக இருக்கும் என்று நினைத்தவள் வேகமாக வந்து மொபைலை எடுத்துப்பார்க்க, தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வந்திருந்தது. எடுக்கலாமா, வேண்டாமா என்று ஒரு நொடி தயங்கியவள், பின் ஒரு முடிவுடன் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.

    “என்னடி?! பெரிய இவளா நீ?” அழைப்பை ஏற்றதும் கோபமாக வந்து விழுந்தது வார்த்தைகள்.

    குரலைக் கேட்டதுமே அவன் தான் என்பது புரிய, அவனின் மரியாதை இல்லாத பேச்சு மைதிலிக்கு கோபத்தை உண்டாக்கியது.

    “வாடி, போடின்னு பேசுன, மரியாதை கெட்டுடும்.” சூடாகப் பதில் சொன்னாள்.

    “அப்படித் தாண்டி பேசுவேன். என்ன தைரியம் இருந்தா, வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்ப! ஏற்கனவே ஆசிட் அடிச்சது பத்தாதா உனக்கு? உன்னை எல்லாம் விட்டு வச்சதே தப்பு. அன்னைக்கே, போட்டுத் தள்ளி இருக்கணும்.”

    “ஆம்பள தான டா, நீ? தில்லு இருந்தா, ஃபேஸ் டூ ஃபேஸ் மோது டா. அதைவிட்டுட்டு ஆளை ஏவி கொல்லுவேன்னு சொல்ற.” அழுத்தமாகப் பதில் கொடுத்தாள்.

    “ஆம்பளை துணை இல்லாதப்போவே, உனக்கு இவ்வளவு கொழுப்பு. இதுல ஆம்பள துணை மட்டும் கிடைச்சுது....ப்ப்பா, தெறிக்க விடுவ போலவே!”

    “உன்னை மாதிரி ஆளுங்களுக்குத் தான் டா, பத்துப் பேர் துணைக்கு வேணும். எனக்கு எவனும் தேவை இல்லை.” நக்கலாகப் பதில் சொன்னாள்.

    “ஏய்! என்னடி பெரிய பத்தினி மாதிரி பேசுற?!”

    “நான் பத்தினியா இல்லையான்னு ரோட்டில போற கண்ட கண்ட நாய்க்கு எல்லாம் நிருபிக்கனும்னு அவசியம் இல்லை. வை டா ஃபோனை.” ஆக்ரோஷமாக கர்ஜித்தவள், அதே வேகத்தோடு அழைப்பைத் துண்டித்தாள்.

    கோபத்தில் மூச்சு வாங்கியது. “பொறுக்கி ராஸ்கல்! பண்றதைப் பண்ணிட்டுப் பேச்சைப் பாரு!” சொன்னவளின் கை முஷ்டி இறுகியது.

    அந்த நேரம் மகனின் குரல் கேட்க, சட்டென்று தன்னைச் சரிப்படுத்திக் கொண்டவள், அவனிடம் தன் கவனத்தைத் திருப்பினாள். மகனுக்கு வேண்டிய டிஃபனை செய்து கொடுத்தவள், அவனை வீட்டுப்பாடம் செய்ய சொல்லிவிட்டு, வக்கீலுக்கு ஃபோன் போட்டாள்.

    “சொல்லுங்க மேடம்!’

    “இப்போ அவன் பேசினான் வக்கீல் சர்.”

    “படவா ராஸ்கல்! என்ன பேசினான்.”

    “வேற என்ன, கொலை மிரட்டல் தான்.”

    “அப்படியா?! அவன் பேசினதை ரெகார்ட் செஞ்சு வச்சுருக்கீங்க தானே?!”

    “என்னோட மொபைல்ல எல்லாமே ஆட்டோ ரெகார்ட் தான் வக்கீல் சர்.”

    “உடனே எனக்கு அந்த வாய்ஸ் ரெகார்ட்டை அனுப்பி வைங்க மேடம்.”

    “எதுக்குச் சர்?”

    “அவன் பேர்ல ஸ்டேஷன்ல ஒரு எஃப்.ஐ.ஆர் போட்டு வைப்போம். நாள பின்ன உதவும்.”

    “வேண்டாம் சர். நாய்னா குலைச்சிட்டு தான் இருக்கும். அது அதோட பிறவி புத்தி.”

    “சரி, எஃப்.ஐ.ஆர் வேண்டாம். ஆனா நீங்க அந்த ஆடியோவை எனக்கு அனுப்பி வைங்க மேடம். கேஸுக்கு உதவும்.”

    “ஓகே சர். அடுத்து என்ன பண்ணனும்?”

    “இப்போ தானே வக்கீல் நோட்டிஸ் அனுப்பி இருக்கோம். அவங்க பதிலை பார்த்துட்டு நாம அடுத்த மூவ் பண்ணுவோம்.”

    “ஓகே சர்.” சொல்லிவிட்டு ஃபோனை வைத்தவளின் கண்களில் ஃஷெல்பில் இருந்த தன் திருமணப் புகைப்படம் பட்டது. மெல்ல நடந்து அருகில் சென்றவள், புகைப்படத்தைக் கைகளில் எடுத்தாள்.

    புகைப்படத்தை வெறித்தவாறு நின்றவளின் கண்களில் கண்ணீர் தேங்கியது.

    “என் பப்பு, யாருக்காகவும் பயப்படக்கூடாது. எப்போவும், எதுக்காகவும் அழவே கூடாது. எவனா இருந்தாலும் சரி, வாடா ஒத்தைக்கு ஒத்தை பார்க்கலாம்னு தில்லா ஃபேஸ் பண்ணனும். அப்போ தான் எனக்குப் பிடிக்கும்.”

    இதோ இந்தப் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருப்பவன் எப்பொழுதும் சொல்லும் வார்த்தைகள், இப்பொழுதும் காதில் ஒலித்தது.

    தேங்கியிருந்த கண்ணீரை அழுத்த துடைத்துக் கொண்டாள் மைதிலி.

    “நான் அழ மாட்டேன். எப்போவும் அழ மாட்டேன். நீங்க சொன்ன மாதிரி எந்தச் சூழ்நிலையையும் தைரியமா ஃபேஸ் பண்ணுவேன். உங்க துணை போதும் எனக்கு.” வேகமாகச் சொன்னவள், புகைப்படத்தை அழுத்தமாக முத்தமிட்டாள்.

    * * *

    “திலீலீலீப்!!” ஆக்ரோஷமாகக் கர்ஜித்தான் அவன்.
அடுத்தச் சில நொடிகளில் அவன் முன் மூச்சு வாங்க வந்து நின்றான் திலீப் என்பவன்.

    “எஸ் சர்!”

    அவன் முன் அந்த வக்கீல் நோட்டிசை விசிறி அடித்தவன், “இந்த ஆளை என்னை வந்து பார்க்கச் சொல்லு. நாளைக்கே!” என்றான் கட்டளையாக.

    “ஒகே சர்!” பதில் சொன்னவன், கீழே கிடந்த காகிதத்தை எடுத்துக்கொண்டு சத்தமில்லாமல் அந்த அறையை விட்டு வெளியேறினான்.

    “எனக்கா தண்ணி காட்டுற! இரு டி உன்னை வச்சுக்கிறேன்.” பல்லை கடித்தவன், கையில் வைத்திருந்த டேபிள் வெயிட்டை உருட்ட ஆரம்பித்தான்.

* * *

    “டேய்! மச்சான். நாளைக்கு மறக்காம நாம மீட் பண்ற இடத்துக்கு வந்துடு. புதுப் படம் ஒண்ணு ரிலீஸ் ஆகி இருக்கு. போயிட்டு வந்துடுவோம்.”

    “சரி டா! எத்தனை மணி ஷோக்கு டிக்கெட் எடுத்து இருக்க?”

    “நூன் ஷோக்கு தான்.”

    பைக்கில் பயணித்தபடி பேசிக்கொண்டு வந்தனர் இரண்டு இளைஞர்கள். சிறிது தூரம் வந்ததும்,

    “டேய்! பைக்கை நிறுத்து டா.” என்று கத்தினான் பின்னால் அமர்ந்திருந்தவன்.

    “எதுக்கு டா? என்ன ஆச்சு?”

    “அதோப் பாரு, நம்ம ஜிம் மாஸ்டர் குடிச்சிட்டு கீழ விழுந்து கிடக்குறாரு.”

    நண்பன் சொன்னதும், அவசரமாக வண்டியை நிறுத்தினான், பைக்கை ஓட்டி வந்தவன். இருவரும் இறங்கி, செடிகளுக்கு நடுவில் கிடந்த அவனை நோக்கிச் வேகமாகச் சென்றனர்.

    “மாஸ்டர்! மாஸ்டர்!” பல நாள் தாடியும், கலைந்த தலை முடியுமாகக் காட்சியளித்த அவனை எழுப்ப முயற்சித்தனர். முடியவில்லை. லேசாக அசைந்தானே தவிர, முழுவதும் நினைவு வர வில்லை.

    “இப்போ என்ன டா பண்றது?” இரண்டு இளைஞர்களில் ஒருவன் கேட்க,

    “பக்கத்து தெருல தான் மாஸ்டர் வீடு இருக்கு. அவரை வீட்டில விட்டுட்டு போவோம்.” மற்றொருவன் பதில் சொல்ல, மடமடவெனச் செயல்பட ஆரம்பித்தனர்.

    கீழே கிடந்தவனை இரண்டு பேரும் சேர்ந்து கஷ்டப்பட்டுத் தூக்கினர். ஜிம் மாஸ்டர் என்பதால், ஆள் ஆஜானுபாகுவாக இருந்தான். எப்படியோ தூக்கி தாங்கள் வந்த பைக்கின் பின்னிருக்கையில் உட்கார வைத்தனர். ஒரு இளைஞன் பைக்கின் முன் இருக்கையில் ஏறிக்கொள்ள, மற்றொருவனோ,

    “பார்த்து, பத்திரமா போ டா. அவர் கீழ விழுந்துடாம, பேலன்ஸ் பண்ணிட்டு போ. நான் அவர் பைக்கை எடுத்துட்டு பின்னாடியே வரேன்.” என்று சொல்ல, இளைஞர்கள் வந்த பைக் முன்னே புறப்பட்டது. கீழ கிடந்த மாஸ்டரின் பைக்கை எடுத்துக்கொண்டு நண்பனை பின்தொடர்ந்தான் மற்றொரு இளைஞன்.

    வீடு வந்து சேர்ந்ததும், மாஸ்டரின் பாக்கெட்டில் இருந்து வீட்டுச் சாவியை எடுத்து, முதல் மாடியில் இருந்த அவன் வீட்டைத் திறந்து அவனை உள்ளே கொண்டு சென்று படுக்க வைத்தனர். பின் கதவை லேசாக சாத்திவிட்டு, பக்கத்து வீட்டாரிடம் ஒரு வார்த்தை சொன்ன அந்த இளைஞர்கள் அங்கிருந்து கிளம்பினர்.

    இது அடிக்கடி நடக்கும் நிகழ்வு என்பதால், இளைஞர்களுக்கு இது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் வழக்கம் போல, ஆசானை நினைத்து வருத்தமாக இருந்தது.

    “ஏன் தான் இப்படிக் குடிச்சு குடிச்சு உடம்பை கெடுத்துக்கிறாரோ?!” தங்களுக்குள் பேசியபடி சென்றனர்.

    தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல், உலகத்தை மறந்து உறங்கி கொண்டு இருந்தான் அவன்.

கதைச்சுருக்கம் படிக்க

0 comments

Post a Comment

Message

Share your thoughts!

Address

Contact Info

Please share your feedback about the stories to the following email address.

Email:

Facebook