உயிரில் கலந்தவளே - அத்தியாயம் 01
கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே!
உத்திஷ்ட நரஸார்தூல கர்த்தவம் தெய்வ மங்களம்!
உத்திஷ்டோதிஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ!
என்ற பாடலை ஊதுபத்தியின் நறுமணத்துடன், தெய்வீக குரலில் கண்கள் கலங்க பாடிக் கொண்டிருந்தார் தேவகி.
“யப்பா நாராயணா!! உன்கிட்ட என்ன புதுசா கேட்டுட போறேன். தினமும் வைக்கிற வேண்டுதல் தான். இது நாள் வரை கொடுத்த சோதனை எல்லாம் போதும்ப்பா!! இனிமேலாவது என் பொண்ணோட வாழ்க்கை சீரும் சிறப்புமா இருக்கணும். அவ மனசை மாத்திகிட்டு மாப்பிள்ளை, பேத்தியோட சந்தோஷமா நிறைஞ்ச வாழ்க்கை வாழனும் கோவிந்தா!” என்று மனம் உருக வேண்டிக் கொண்டிருந்தார்.
அப்போது, “பாத்திஈஈஈஈ!!!!!” என்று பின்பக்கம் கேட்ட தன் செல்ல பேத்தியின் குரலில் நினைவுக்கு வந்தவர், கண்களை முந்தானையில் துடைத்துக் கொண்டு, சிரித்த முகத்துடன் திரும்பினார்.
அங்கே மூன்று வயது ‘அனன்யா’, அழகிய பிங்க் நிற உடையில், அதற்குப் பொருத்தமான கிளிப், கழுத்து செயின், வளையல் என்று அனைத்தும் பிங்க் நிறத்தில் அணிந்து, தன்னைப் பார்க்கும் அனைவரையும் குழந்தைகளாக மாற்றும் தோற்றத்தில் கன்னங்களில் குழியுடன், அழகிய மழலை சிரிப்பில் குட்டி வானுலகத் தேவதையாக நின்று கொண்டிருந்தாள்.
அவளின் அருகில் வந்த தேவகி, அவளை அப்படியே வாரி அணைத்தவர், அந்தக் குழியில் அழுத்த முத்தம் பதித்து, “என்னடா செல்ல குட்டி! ரெடி ஆகிட்டீங்களா?!” என்று கேட்டார் தன் பேத்தியின் அழகை ரசித்துக் கொண்டே.
அந்த முத்தத்தில் கூச்சம் அடைந்தவள், தன் பாட்டியிடம் இருந்து திமிறி கீழே இறங்கி, தன்னுடைய பாவாடையைப் பிடித்துக் கொண்டு, மாடல் அழகி போலச் சுற்றி காட்டியவள், “எப்பி இக்கேன் பாத்தி?!” என்றாள் கண்களில் ஆவலுடன்.
அவள் முன் மண்டியிட்ட தேவகி, அனன்யாவை மீண்டும் கட்டி அணைத்து, “எங்க அனு குட்டிக்கு என்ன, படு சூப்பரா இருக்கீங்க. அப்படியே பொம்மை மாதிரி!!” என்றார்.
அந்தப் பதிலில் மகிழ்ச்சி அடைந்த அந்தத் தேவதை, “ஏ!!!” என்று கத்திக் கொண்டே ராட்டினம் போலச் சுற்றினாள். அவளைப் பிடித்து நிறுத்திய தேவகி, சற்றே கலைந்திருந்த அவளது பாப்கட் முடியை சரிபடுத்திக் கொண்டே, “இப்படிச் சுத்தக்கூடாதுடா செல்லம், அப்புறம் முடி எல்லாம் கலஞ்சுடும்...!” என்றவர், “இப்போ நாம எங்க போறோம் குட்டிமா?” என்று கேட்டார்.
அந்தக் கேள்வியைக் கேட்டதும் உற்சாகம் அடைந்த அனு, தன் கைகளை விமானம் பறப்பது போலச் சைகை செய்துக் கொண்டே, உற்சாகக் குரலில், “ப்பா வயாங்க. அங்கள கூட்டு வர, நா, ம்மா, பாத்தி, தாத்தா எல்லாம் போம்..!!!” என்றாள் கீழ் உதட்டை பற்களால் கடித்துக் கொண்டு, புருவங்களை மேலே ஏற்றி, பெருமையாக.
அவளின் செய்கையில் மயங்கியே போனார் தேவகி. அனுவை தூக்கிக் கொண்டவர், “எங்கடா அனு உங்க அம்மா? இன்னும் ரெடி ஆகுறாளா?” என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே, எளிமையான காட்டன் புடவையில், காதோர முடியை தூக்கி கிளிப் போடபட்டிருக்க, சிறிதும் ஒப்பனை இல்லாமல், வெறும் கருப்பு ஸ்டிக்கர் பொட்டு மட்டும் நெற்றியில் வீற்றிருக்கப் பார்பவரை நட்பு கொள்ள வைக்கும் முகக் கலையுடன், படுக்கை அறையில் இருந்து வெளியே வந்தாள் இருபத்தி ஆறு வயது சிந்துஜா, அனுவின் தாய்.
சிந்துவை பார்த்துக் கொண்டிருந்த தேவகி மீண்டும் ஆண்டவனிடம் நெஞ்சில் கனத்துடன் வேண்டுதல் ஒன்றை வைத்துக் கொண்டிருக்க, தன் தாய் தன்னையே கண் சிமிட்டாமல் பார்ப்பதை பார்த்த சிந்து, தேவகி அருகில் வந்து, “அம்மா!!” என்று கூப்பிடவும் தான், அவருக்கு நினைவே வந்தது.
அதன் பின் ‘என்ன’ என்பது போலச் சிந்துவை பார்க்க, அவளோ லேசான தயக்கத்துடன், “அம்மா நானும் கட்டாயம் வரனுமா?! நீங்களும் அப்பாவும் மட்டும் போயிட்டு வரீங்களா?!” என்று கேட்க, அதில் சிறிது வருத்தமும் கோபமும் கொண்டவர், தன் கையில் இருந்த பேத்தியை மகளிடம் ஒப்படைத்துவிட்டு, ஒன்றும் சொல்லாமல் அனைவருக்கும் சாப்பாடு எடுத்து வைப்பதற்காகக் கிச்சனுக்குள் சென்று மறைந்தார்.
சிந்துவுக்குத் தெரியும், தான் இப்படிக் கேட்டாள், நிச்சயம் தன் தாய் கோபப் படுவார்கள் என்று. ஆனால் அவளுக்கு ஏர்போர்ட் செல்லவே ஏதோ மாதிரி இருந்தது. தன்னை வலுகட்டாயமாக இழுத்து செல்வது போல ஒரு எண்ணம். விட்டாள் ஒடிவிடுவாள், அப்படி ஒரு சலிப்பு. இருந்தாலும் மீண்டும் ஒரு முறை தாயிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தவள், அனுவை தூக்கி, டைனிங் டேபிள் மீது உட்கார வைத்துவிட்டு, தாயுடன் சேர்ந்து அனைத்து உணவு பாத்திரங்களையும் டேபிளுக்குக் கொண்டு வந்து வைத்தாள்.
அதன் பின் தேவகியின் கணவர் ராஜன் அங்கே வர, அனைவரும் காலை உணவை உண்ண ஆரம்பித்தனர்.
உணவை உண்ணாமல், விரல்களால் அளந்து கொண்டிருந்த சிந்துவை பார்த்த ராஜன், “ஏன்மா சிந்து, சாப்பிடமா என்ன பண்ணிட்டு இருக்க!! சாப்பிடுமா..!” என்று கூறவும், சிந்து தன் தாயை தயக்கமாகப் பார்த்தாள்.
அதைக் கவனித்த ராஜன், பேத்திக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த மனைவியிடம் திரும்பி ‘என்ன விஷயம்’ என்று கேட்க, சிந்து தன்னிடம் சற்று முன்பு கேட்டதைச் சொன்னார். அதைக் கேட்ட ராஜன், சிந்துவை ஒருபார்வை பார்த்துவிட்டு, தன் மனைவி செய்தது சரி என்பத போல, ஒன்றும் சொல்லாமல் உணவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
ஆனால் சிந்து விடுவதாக இல்லை, தன் தந்தையிடம் பேசி சம்மதம் வாங்கிவிடலாம் என்று நினைத்து, “அப்பா, ப்ளீஸ்ப்பா நீங்களாவது நான் சொல்றதை புரிஞ்சுகோங்கப்பா. எனக்கு அங்க வர பிடிக்கலை...” என்று பேசிக் கொண்டே போனவளை தடுத்த தேவகி, “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேச கூடாது. நீ கட்டாயம் வரணும். சீக்கிரம் சாப்ட்டு, அனுவை கூட்டிகிட்டு ரெடியா இரு. இன்னும் கொஞ்ச நேரத்தில சம்மந்தி அம்மா வந்துடுவாங்க. நேரம் ஆகுது..!” என்ற கட்டளை போலச் சொன்னவர், பாத்திரங்களை ஒதுங்க வைக்கச் சென்றார்.
இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்ந்த சிந்து, வேறு வழி இல்லாமல், சாப்பிட்டு முடித்த பின், அனுவை தூக்கிக் கொண்டு சோபாவில் போய் அமர்ந்தாள்.
அவள் மடியில் இருப்புக் கொள்ளாமல், கீழே இறங்கி நின்று கொண்ட அனு, தன் தாயின் தாடையைப் பிடித்துத் தன் பக்கம் திருப்பி, “ம்மா!! ப்பா வயாங்க!! நீ வா....நாம ப்பா பாக்க போம்..!!!” என்று சொன்னவள், மீண்டும் உற்சாகமாக ஆட்டம் போட ஆரம்பித்தாள்.
அவள் ‘அப்பா’ என்று சொன்னதைக் கேட்டதும் சிந்துவிற்கு, ஏதோ நெருடலாகவும், சிறிது அச்சமாகவும் இருந்தது. இனிமேல் நம் வாழ்க்கை அவனுடம் தான். இதில் எந்த மாற்றமும் வர போவதில்லை. வேறு வழி?! அவன் மிகவும் நல்லவன் தான். ஆனால் நான்?! என்னால் முடியுமா?! பழையதை தன்னால் மறக்க முடியுமா?! என்ற கேள்விகள் அவள் மண்டையைப் போட்டு குடைந்து கொண்டிருந்தது. ஆனால் அதற்கான விடை தான் அவளுக்குத் தெரியவில்லை.
சிறிது நேரத்தில் வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டதும், தேவகி மற்றும் ராஜன் இருவரும் வாசலுக்கு விரைந்து சென்று, தங்கள் சம்மந்தியான கல்யாணியை உள்ளே அழைத்து வந்தனர்.
உள்ளே வந்தவரை கண்டதும் சிந்து எழுந்து கொள்ள, அனு அவரிடம் ஓட, குழந்தையை தூக்கி கன்னத்தில் முத்தம் வைத்தவர், சிந்துவின் அருகில் சென்று, “எப்படிமா இருக்க?! உடம்பு ஏன்மா இப்படி இளைச்சு போய் இருக்கு?! நல்லா சாப்பிடுமா...!” என்று கூறியவர் அவளின் தலையைப் பரிவுடன் தடவிக் கொடுத்தார்.
அவரின் செய்கையில் நெகிழ்ந்த சிந்து, ”நல்லா இருக்கேன் ஆண்டி. நீங்க எப்படி இருக்கீங்க?!” என்று கேட்க, அவரோ”அத்தைன்னு கூப்பிடுமா. அதுதான் மனசு நிறைஞ்சு இருக்கு..!” என்று கூறவும், சிந்துவும் சிறு தயக்கத்திற்குப் பின், “சரிங்க அத்தை...!” என்றாள்.
அதன் பின் அனுவிற்குச் சாக்லேட் பார் ஒன்றை கொடுத்தவர், அவளுடன் விளையாடி விட்டு, சில நிமிடங்கள் கழித்து அனைவரையும் அழைத்துக் கொண்டு, வெளிநாட்டில் மருத்துவ மேல் படிப்பை முடித்துக் கொண்டு வரும் தன் மகனை அழைத்து வர ஏர்போர்ட் நோக்கி சென்றார். அவர்கள் செல்வதற்குள் இரு குடும்பங்களைப் பற்றிய சின்ன அறிமுகம்.
ராஜன் – தேவகி தம்பதியரின் ஒரே மகள் சிந்துஜா. பொறியியல் படிப்பை முடித்ததும் திருமணம் செய்து கொண்டாள். கருவுற்ற சமயத்தில் வீட்டில் இருந்தவள், கடந்த ஒரு ஆண்டாகத்தான் ஒரு கட்டுமான கம்பெனியில் ஆர்கிடெக்டா வேலை பார்த்து வருகிறாள். அவளின் மகள் தான் அனன்யா என்கிற அனு.
கல்யாணி – சுதாகர் தம்பதியர் இருவரும் மருத்துவர்கள். சொந்தமாகக் கே.எஸ் என்னும் மருத்துவமனையை நடத்தி வந்தனர். அவர்களின் ஒரே மகன் ப்ரவீன். சில வருடங்கள் முன்புதான் சுதாகர் காலம் ஆனார். அதன் பின் இதய அறுவை சிகிச்சை நிபுணரான ப்ரவீனும் தன் தாயுடன் சேர்ந்து கொண்டு, தங்கள் மருத்துவமனையை நிர்வாகம் செய்து வந்தான். இரண்டு வருடங்கள் முன்பு அதாவது அனு பிறந்த சில மாதங்களில், ப்ரவீனுக்கு அவன் லட்சிய படிப்பிற்கான அழைப்பு வர, மேல் படிப்புக்கு சென்றவன், அதை முடித்துக் கொண்டு இப்போது தான் தாய் நாடு திரும்புகிறான்.
சில மணிநேர பயணத்திற்குப் பிறகு அனைவரும் ஏர்போர்ட் வந்தடைந்தனர். விசிட்டர் பக்கம் நின்று கொண்டு ப்ரவீனின் வருகைக்காகக் காத்திருந்தனர். அனைவரையும் விட அனுவிற்குத் தான் மிகவும் உற்சாகம். இதுவரை புகைப்படத்தில் மட்டுமே பார்த்த தன் தந்தையை, நேரில் பார்க்க போகும் ஆசை அவளுக்கு. கண்களை அங்கும் இங்கும் சுழல விட்டுக் கொண்டு ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் தூரத்தில் வந்து கொண்டிருந்த தன் தந்தையைக் கண்டுகொண்ட அனு, “பாத்தி!!!!! ப்பா!!!!!!!!!!” என்று தூரத்தில் கையைக் காண்பித்தவள், தன் தந்தை அருகில் வரும் வரை கூடக் காத்திருக்க முடியாமல், தன் பாட்டியிடம் இருந்து திமிறி கீழே இறங்கி, துள்ளல் நடையுடன் வேகமாகத் தன் தந்தையை நோக்கி ஓடினாள்.
அதே நேரத்தில் ஆறடிக்கு மேலான உயரத்தில், அதற்கேற்ற உடல் அமைப்புடன், மாநிறத்திற்கு மேலான நிறத்தில், ஸ்டைலாகத் தலை முடியை கோதிக் கொண்டு தன் மகளைத் தேடிக் கொண்டே வந்த 28 வயது ப்ரவீனும், அனு ஓடி வருவதைக் கண்டுகொண்டு வேக நடை போட்டு அவளிடம் வந்தவன், தன் மேல் பாய்ந்த அந்தத் தேவதையைத் தலைக்கு மேல் தூக்கி ஒரு சுற்று சுற்றிவிட்டு, கலகலவெனச் சிரித்த அவளின் பட்டுக் கன்னத்தில் மாறி மாறி முத்தங்களைப் பதித்தான்.
அதன் பின் அவளிடம், “அனு குட்டி, இப்படி வேகமா வரக்கூடாது. கீழ விழுந்துடுவீங்க. அப்பாவை ரொம்பத் தேடுணீங்களா செல்லம்?!” என்று கேட்க, அவளோ ‘ஆம்’ என வேகமாகத் தலையை ஆட்டினாள். அதில் வருந்தியவன், “சாரி டா செல்லம், அப்பா இனிமே உன்னை விட்டு எங்கையும் போக மாட்டேன். கடைசி வரை உன்கூடதான் இருக்கப் போறேன். சரியா!!” என்றான். அதில் மகிழ்ச்சி அடைந்த அனு ப்ரவீனின் கன்னத்தில் முத்தமிட்டு அவனின் கழுத்தை கட்டிக் கொண்டாள். ஆனால் தான் கூறியது பலிக்கப் போவதில்லை என்பதை அவன் அப்போது அறியவில்லை.
ப்ரவீன் பேசி முடிக்கவும், அனைவரும் அவன் அருகில் வரவும் சரியாக இருந்தது. அவனிடம் அனைவரும் நலம் விசாரிக்க, அவர்களுக்குப் பதில் சொல்லி முடித்தவன், இறுதியாகச் சிந்துவை பார்க்க, அவளோ அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
இதை அவன் எதிர்பார்த்திருந்தும், அதில் வருத்தம் அடையாமல் அவளிடம், “சிந்து எப்படி இருக்க?!!” என்று கேட்க, நிமிர்ந்து பார்த்த அவள், “நல்லா இருக்கேன்!” என்று பதில் கூறிவிட்டு கீழே குனிந்து கொண்டாள். ஆனால் அவன் விடுவதாக இல்லை. மீண்டும் அவளிடம், “நான் உன்னைக் கேட்டேனே. அதை மாதிரி நீயும் என்னைக் கேட்க மாட்டியா சிந்து, கிட்டத்தட்ட மூ..........ணு வருஷம் வெளி நாட்டில் இருந்துட்டு இப்பதான் வரேன். என்னை நல்லா இருக்கியான்னு கேட்க இங்க யாருமே இல்லை...!!” என்று போலியாக அலுத்துக் கொண்டவன், அனுவிடம் திரும்பி, “பாரு அனு. உங்க அம்மா என்கிட்டே பேச மாட்டேங்கிறாங்க..!!” என்று சொல்லி, அழுவது போல நடித்தான்.
அதை உண்மை என்று நம்பிய அனு, அவர்கள் பேசுவது தெளிவாகப் புரியாவிட்டாலும், தன் தந்தை அழுவதைக் காண பொறுக்காமல் ப்ரவீன் கன்னத்தில் இல்லாத கண்ணீரை தன் பிஞ்சு விரல்களால் துடைத்துவிட்டு, தன் தாயை கோபமாக முறைத்துக் கொண்டு, “ம்மா!! ப்பாட்ட பேசு!!” என்று கட்டளை இட்டாள். அவளின் பாவனையில் சிரித்து விட்ட சிந்து, “சரிங்க ராணியம்மா..!” என்று சொல்லி சிரித்தாள்.
இதுதான் சிந்துஜா. இயல்பாக அவள் மிகவும் கலகப்பானவள். கல்லூரியில் அவள் தான் கேங் தலைவி. புதிதாக வரும் மாணவ மாணவியர்களை ரேகிங் செய்வது, பேராசியர்களைக் கிண்டல் அடிப்பது இப்படி அவள் செய்யாத கலாட்டாக்களே இல்லை. ஆனால் சில ஆண்டுகள் முன்பு அவள் வாழ்வில் நடந்த சம்பவம், அவளின் மிகபெரிய இழப்பு, அவள் நெஞ்சில் மாறாத வடுவாக விழுந்தது. அதில் இருந்து தன் சுயத்தை இழந்து, அமைதி என்னும் முகமூடியை மாட்டிக் கொண்டாள்.
ஆனால் ப்ரவீன் அவள் வாழ்கையில் நுழைந்த பிறகு, அவள் வட்டத்துக்குள் இருந்து மெல்ல மெல்ல அவளை வெளியே வரவைக்க பல முயற்சிகள் செய்கிறான். அதில் ஒன்றுதான், இப்படி வேடிக்கை பேசி அவளைச் சிரிக்க வைப்பது. சிந்துவும் அவ்வப்போது பழையதை மறந்து சிரித்தாலும், மீண்டும் தன் நினைவுகளில் மூழ்கி விடுவாள். ஆனால் தற்போது ப்ரவீன் அனுவையும் தன் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டான். அதற்குப் பலன் கிடைக்குமா??
தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்த சிந்துவை, ஒரு வித புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ப்ரவீன். கூடிய விரைவில் அவளைப் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை வேரூன்ற ஆரம்பித்தது. அந்த நினைப்பே அவனுக்கு உற்சாகத்தை அளித்தது. அதன் பின் அனைவரும் பெட்டிகளை எடுத்துக் கொண்டு புறப்படத் தயாராக, ப்ரவீனோ அங்கும் இங்கும் திரும்பி யாரையோ தேடிக் கொண்டிருந்தான்.
அவனிடம் வந்த கல்யாணி, “யாரப்பா தேடுற?!” என்று கேட்க, “இல்லமா என் பிரிண்ட ஒருத்தர், யு.எஸ்ல அறிமுகம். அவரும் என்கூடதான் இந்தியா வந்தார். அவரை உங்களுக்கு அறிமுகம் செய்யலாம்னு நினைச்சேன். ஆனா காணோம். அவரைத் தான் தேடிட்டு இருக்கேன்..!” என்று பதில் கூறினான்.
“சரி விடுப்பா. அவருக்கும் குடும்பம் இருப்பாங்க. அவங்க வந்திருப்பாங்க. அவங்களைப் பார்க்க போயிருப்பார். அவரோட போன் நம்பர் வச்சிருக்கல்ல, அப்பறமா போன் பேசிக்கோ.” என்று கல்யாணி பதில் சொல்லவும், தாய் சொல்வது சரி என்று நினைத்தவன், அவர்களுடன் புறப்பட்டான்.
பெரியவர்கள் முன்னே செல்ல, ப்ரவீன் சிந்து மற்றும் அனு பின்னே வந்து கொண்டிருந்தனர். அப்போது அனு கால் தடுக்கி கீழே விழ, அவளைத் தூக்கி நிறுத்திய சிந்து தூசியைத் தட்டிக் கொண்டிருக்கும்போது, யாரோ தன்னைப் பார்ப்பது போல உறுத்தவும் பக்கவாட்டில் திரும்பி பார்க்க, தூரத்தில் தூண் மறைவில் கருப்பு கண்ணாடி அணிந்த முகம் ஒன்று அவள் நிற்கும் திசையைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
ஒரு வேலை தனக்குப் பின்னால் யாரையோ பார்க்கிறார்களோ, என்று நினைத்தவள், மறுபக்கம் பார்க்க, அங்கு யாரும் இல்லை. மீண்டும் அந்தத் தூணைப் பார்க்க, அங்கே இப்பொது அந்த முகம் தென்படவில்லை. குழப்பம் அடைந்தவள் அந்தத் தூணையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அனுவை தூக்கிக் கொண்ட ப்ரவீன், சிந்து எங்கேயோ பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவன், அவளைக் கலைத்து என்னவென்று கேட்க, ஒன்றும் இல்லை என்று மறுத்தவள், அதன் பின் மீண்டும் ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு, ப்ரவீனுடன் அங்கிருந்து சென்றாள்.
ஆனால் சிந்து இரண்டாம் முறை திரும்பி பார்க்கும்போது தூண் மறைவில் ஒளிந்து கொண்ட அந்த உருவம், அவள் சென்றதும் வெளியே வந்து, அவள் போவதையே கண்கள் மின்ன பார்த்துக் கொண்டிருந்தது. அந்தக் கண்களில் தெரிந்தது என்ன?! வருத்தமா?! கோபமா?! நிராசையா?! இல்லை சிந்துவின் அழகை ரசிக்கும் வேட்கையா?!
ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்ததும், பெரியவர்கள் டிரைவருடன் ஒரு காரில் புறப்பட, இளையவர்கள் இருவரும் அனுவுடன், சற்று முன்பு டிரைவர் கொண்டு வந்து விட்டுருந்த, ப்ரவீனின் காரில் வீட்டை நோக்கி சென்றனர்.
போகும் வழி முழுவதும், தனக்குத் தெரிந்த அத்தனை விஷயங்களையும், ஒரே நாளில் சொல்லி முடிக்கும் எண்ணத்துடன் தன் மழலை மொழியில் ப்ரவீனிடம் இடைவெளி விடாமல் சொல்லிக் கொண்டே வந்தாள் அனு. அவளின் மூச்சு விடாத பேச்சை பார்த்த ப்ரவீன், பிரமித்துப் போனான், அதே நேரம் ‘தன் மகள்’ என்று பெருமையும் அடைந்தான். கடந்து போன இரண்டு வருட அனுவின் பிஞ்சு பருவத்தை இழந்து விட்டோமோ, என்ற எண்ணம் உண்டானது.
இதுநாள் வரை இழந்தது போதும். இனியும் எதையும் இழக்க கூடாது என்று உறுதியாக நினைத்தான். அதே நேரம் வேறொரு எண்ணமும் தோன்றியது. அது மட்டும் நடந்திருந்தால், சிந்து இப்படித் தன்னிடம் ஒதுங்கி இருப்பாளா, என்று நினைத்தவன், சரி போனது போகட்டும், இன்னும் நாட்கள் இருக்கிறது. அதற்குள் தான் நினைத்ததை நடத்திக்காட்ட முடியும் என்று மனதை தேற்றிக் கொண்டவன், வர போகும் இனிமையான் நாட்களை அசைப் போட்டுக்கொண்டே உற்சாகத்துடன் காரை வீட்டை நோக்கி செலுத்தினான்.
ஆனால் அவன் நினைத்த எந்த விஷயமும் நிறைவேற போவது இல்லை என்று பாவம் அவனுக்குத் தெரியாது.

0 comments
Post a Comment