உன்னாலே உயிர் வாழ்கிறேன் - அத்தியாயம் 01

 


அழுதழுது வத்திப் போயிருந்தது அவனின் விழிகள். கண்முன் ரத்த சகதியாய் கிடப்பவளைப் பார்க்கப் பார்க்க மீண்டும் மீண்டும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. கைமுஷ்டியை தரையில் குத்தியபடி கதறி அழுதான்.

    “உங்க ஒவ்வொருத்தனையும் குத்திக் கொல்லாம விட மாட்டேன் டா!” அழுகையுடன் கர்ஜித்தான்.

    “டேய்! யாராவது வந்துடப் போறாங்க! சீக்கிரம் இங்க இருந்து கிளம்பனும். தயவு செஞ்சு வா!” அழுது கொண்டிருந்தவனைப் பிடித்து இழுத்தான் அவன் நண்பன்.

    “முடியாது டா! இதுக்குக் காரணமானவன் ஒருத்தனையும் நான் விடப் போறதில்லை. ஜெயிலுக்குப் போனாலும் சரி. அவனுங்களை விட மாட்டேன்.” அழுகையுடன் கத்தினான்.

    “புரியாம பேசாத டா! நீ ஒருத்தன் எத்தனைப் பேரை சமாளிக்க முடியும்? அவனுங்க கையில அருவா, கத்தின்னு வச்சிருப்பானுங்க. சொன்னா புரிஞ்சுக்கோ! நீ மட்டும் அவங்க கையில மாட்டுன, கண்டம் துண்டமா வெட்டிப் போட்டுடுவாங்க.” கெஞ்சினான் நண்பன்.

    “வெட்டட்டும் டா! இனி நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம்!” வாழ்கையே வெறுத்துப் போனது போலப் பேசினான்.

    அப்பொழுது நண்பனின் மொபைல் போன் ஒலிக்க, அவசரமாக எடுத்துக் காதில் வைத்தான். அந்தப்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ, கலவரம் இவன் முகத்தில்.

    “சரி டா மச்சான். இப்போவே நாங்க கிளம்புறோம்.” அவசரமாகச் சொல்லிவிட்டு மொபைலை அணைத்து வைத்தவன், நண்பனைப் பிடித்து இழுத்தான்.

    “டேய்! அவனுங்க வந்துட்டு இருக்கானுங்க டா! சீக்கிரம் இங்க இருந்து கிளம்புவோம். இன்னும் அரை மணிநேரத்தில ட்ரைன் கிளம்பிடும்.”

    அவனோ ஆக்ரோஷமாக நண்பனைப் பிடித்துத் தள்ளி விட்டான்.

    “நான் எங்கயும் வர மாட்டேன். அவனுங்க ஒவ்வொருத்தனையும் கொல்லாம வர மாட்டேன். அவளே போயிட்ட பிறகு, இனி ஓடி உயிர் பிழைச்சு என்னத்த சாதிக்கப் போறேன். விடு டா என்னை!” வெறிகொண்டு கத்தினான்.

    'பளார்' என்று விழுந்தது அவனின் கன்னத்தில்.

    “அடிச்சே கொன்னுடுவேன் டா உன்னை! மரியாதையா என்கூட வந்துடு. இல்ல அவ்ளோதான்!” பதிலுக்குக் கத்திய நண்பன், அவன் சட்டையைக் கொத்தாகப் பற்றி, வரமாட்டேன் என்று அடம் பிடித்தவனை, தரதரவென்று இழுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடினான். இரவு நேரம் என்பதால் பாதை முழுவதும் இருட்டாக இருந்தது. மொபைலில் இருந்த டார்ச் வெளிச்சத்தின் உதவியுடன் இருவரும் ஓடினார்கள்.

    முன்னே சென்று கொண்டிருந்த நண்பன், அவ்வபொழுது திரும்பி யாரேனும் பின் தொடர்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே போனான். சிறுது தூரம் சென்றிருப்பார்கள், தூரத்தில் நான்கைந்து நெருப்புப் பந்தங்கள் புள்ளிகளாய்த் தெரிந்தது.
அக்காட்சியைப் பார்த்ததும் நண்பனைப் பயம் தொற்றிக் கொண்டது. தன் வேகத்தை அதிகப்படுத்தியன், நண்பனை இழுத்துக்கொண்டு மெயின் ரோட்டுக்கு வந்தவன், அங்கு நிறுத்தி வைத்திருந்த தனது பைக்கில் நண்பனை ஏற்றிக் கொண்டு இரயில் நிலையத்தை நோக்கி சீறிப் பாய்ந்தான்.

* * * * * *

    “அஹ்! அஹ்!...”

    மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, காற்றுப்போன பலூனாகக் சுவாசத்துக்கு ஏங்கியது நுரையீரல். உடல் முழுவதும் முத்து முத்தாய் வேர்வைத் துளிகள். முரசொலி போல இதயத் துடிப்பு உடல் முழுவதும் பலத்த சத்தத்துடன் எதிரொலித்தது.

    இப்படி ஒரு நிலையில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தாள் அவள். கண்ணீர் வேறு நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது. கதறி அழ வேண்டும் என்ற எண்ணத்தைத் தற்போதைக்கு ஒதுக்கி வைத்தவள், புறங்கையால் கண்ணீரைத் துடைத்துவிட்டு ஓடினாள்.

    பேய் ஓட்டம் என்பார்களே, அந்த அளவுக்கு வேகம்! இந்த அளவுக்கு வேகத்தைச் சமாளிக்க, அவளின் ஒவ்வொரு செல்லும் உடலின் சத்துக்களை உறிஞ்ச, சரியாகச் சாப்பிடாதது வேறு, கண்களைக் இருட்டிக்கொண்டு வந்தது.

    முஹூம்! நின்று ஆசுவாசப் படுத்திக்கொள்ள எல்லாம் இப்பொழுது நேரம் இல்லை. அவர்கள் வந்து விடுவதற்குள், எப்படியாவது அங்கே சென்று சேர்ந்துவிட வேண்டும். இதுவே அவளின் இப்போதையை முழுக் கவனம்.

    திரும்பிப் பார்த்தாள். தூரத்தில் ஏதோ கார் வருவது போலத் தெரிய, தன் வேகத்தை இன்னும் அதிகப்படுத்திக்கொண்டு, பக்கவாட்டில் தெரிந்த அந்தக் கட்டிடத்தின் வாயிலை நோக்கி ஓடினாள்.

    திடுமென்று கல் ஒன்று அவள் காலைத் தடுக்க, அப்படியே விழப் போனவள், பயத்தில் தன் அடிவயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். நல்ல வேளை முட்டியை ஊன்றி, தாக்குப்பிடித்துக் கொண்டாள். தரையில் கையை ஊன்றி எழுந்தவள் தூரத்தில் தெரிந்த கட்டிடத்தை நோக்கி ஓடினாள்.

    இதோ, பக்கத்தில் வந்துவிட்டது! ‘இன்னும் கொஞ்சம் தூரம் தான்!’, ‘இன்னும் வேகமா போ!’, ‘ம், இதோ!’, என்று தனக்குள் சொல்லிக்கொண்டே, உயிரைப் பிடித்துக்கொண்டு ஓடியவள், அந்தக் கட்டிடத்துக்குள் புயலென நுழைந்தாள்.

    * * * * * *

    புயலென அந்த இரயில் நிலையத்துக்குள் நுழைந்தது அந்தப் பைக். நிறுத்தி ஸ்டான்ட் போடவெல்லாம் இப்பொழுது நேரமில்லை. பைக்கை அப்படியே கீழே சாயித்து விட்டு, நண்பனை இழுத்துக்கொண்டு நிலையத்துக்குள் நுழைந்தான்.

    சுற்றும் முற்றும் பார்த்தான். அதோ! இரண்டாம் நடைமேடை போர்டு தெரிந்தது. அழுதபடி ஏதோ சிந்தனையில் நின்று கொண்டிருந்த நண்பனை கைப் பிடித்து இழுத்துச் சென்றான். இரண்டு படிகளாகத் தாவி, நடைமேடைக்கு வந்து சேர்ந்தனர் இருவரும். அதற்குள் அவர்களை நோக்கி ஓடி வந்த மற்றொரு நண்பன், இரயில் டிக்கெட்டை அவன் கையில் திணித்தான்.

    “நீ கிளம்பு தியாகு! நான் இவனை ஏத்திவிட்டுட்டு வரேன்.” நண்பன் சொல்ல, அவன் கிளம்பிச் சென்றான்.

    அவன் பயணிக்க வேண்டிய இரயில் அமைதியாகப் படுத்து உறங்கும் நாய்குட்டியைப் போல நின்றுகொண்டு இருந்தது.

    நண்பனை இழுத்துக்கொண்டு கடைசியாக இருந்தப் பெட்டியை நோக்கி ஓடினான். ஓட ஓட தூரம் குறையாத மாதிரி ஒரு பிரம்மை. மூச்சை பிடித்துக்கொண்டு ஓடினர் இருவரும். இதோ பெட்டி அருகில் நெருங்கியது. வெகுதூரம் போகும் இரயில் என்பதால், கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தனர் பயணிகள்.

    கிடைத்த இடைவெளியில் நண்பனைப் பெட்டிக்குள் திணித்தவன், தன் பாக்கெட்டில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து அவன் சட்டைப் பையில் திணித்தான்.

    “மச்சான்! தயவு செஞ்சு இந்த ஊர் பக்கம் வந்துடாத! உன்னைக் கெஞ்சி கேட்கிறேன். ஸ்டேஷனுக்கு நம்ம ஃப்ரெண்ட் வந்துடுவான். எல்லாத்தையும் அவன் பார்த்துப்பான்.

    எதையும் கேட்கும் நிலைமையில் அவனில்லை. திக்பிரம்மை பிடித்தவன் போலச் சற்று முன்பு நடந்ததை நினைத்து நினைத்து அழுது கொண்டிருந்தான்.

    மனம் கேளாமல் பெட்டிக்குள் ஏறிய நண்பன், அவனை ஒரு நொடி அணைத்து விடுவித்தான்.

    “ப்ளீஸ் டா! உங்க அம்மா அப்பாவை நினைச்சுப் பாரு. உனக்காக அவங்க அங்க காத்திட்டு இருப்பாங்க டா!” நண்பனின் கைப்பிடித்துச் சொன்னான்.

    அவனோ பதில் சொல்லவில்லை. எங்கோ பார்த்தபடி நின்றிருந்தான்.

    அதற்குள் இரயில் கிளம்புவதற்கான சமிக்சை வர, பிடித்திருந்த கையை விடிவித்த நண்பன், கலங்கிய கண்களுடன் சொன்னான்,  “பத்திரமா போயிட்டு வா டா மச்சான்!”

    முதல்நாள் பள்ளி செல்லும் குழந்தைப் போலக் கேவி கேவி அழுதபடி நின்றிருந்தான் அவன்.

    மெதுவாக நகர்ந்த இரயில் சிறிது நேரத்தில் வேகமெடுத்து சீறிப் பாய்ந்தது. அழுகையுடன் அப்படியே படிகளில் அமர்ந்துவிட்டான் அவன்!

                                                                * * * * * *

    இரயில் நிலையம்!

    நள்ளிரவு நேரம் என்பதால் வழக்கமான மக்கள் கூட்டம் இல்லாமல் ஆங்காங்கே இருந்த ஒன்றிரண்டு இருக்கையில் அமர்ந்திருந்தனர் சிலர்.

    புயலென உள்ளே நுழைந்தாள் அவள்.

    பயத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். சந்தேகப்படும்படி யாரையும் காணவில்லை. அவள் நின்றிருந்த நடைமேடைக்கு எதிர் திசையில் ஒரே ஒரு இரயில் மட்டும் நின்றிருந்தது. பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள். நடைபாதை படிக்கட்டு வெகு தூரத்தில் இருந்தது. அதில் ஏறிச் செல்வதற்குள் இரயில் கிளம்பிவிடும். வேறு வழியில்லை, தண்டவாளத்தில் இறங்கி தான் அந்தப்பக்கம் செல்ல வேண்டும்.

    யோசிக்கவில்லை அவள். அடுத்த நொடி அந்த இருட்டுக்குள் தண்டவாளத்தில் இறங்கச் சென்றாள். வேறு சமயம் என்றால், இருக்கும் அவசரத்திற்குக் குதித்திருப்பாள். ஆனால் தற்பொழுது? அமர்ந்தவாக்கில் மெதுவாகக் கீழே இறங்கினாள்.

    இடவலம் ஒரு முறை பார்த்துவிட்டு வேகவேகமாக இரண்டு தண்டவாளங்களையும் கடந்தவள், நடைபாதையில் ஏற முயன்றாள். முடியவில்லை! உயரமாக இருந்தது. அதற்குள் இரயில் கிளம்புவதற்கான அறிவிக்கை வந்தது. கைகளை ஊன்றப் போனவளை கைகொடுத்துத் தூக்கிவிட்டார் அங்கிருந்தவர்.

    “ரொம்பத் தேங்க்ஸ் அண்ணே!” கைகூப்பித் தன் நன்றியை தெரிவித்துக் கொண்டவள், அவரின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல், நகர ஆரம்பித்திருந்த இரயிலைப் பிடிக்க ஓடினாள்.

    இரயிலின் வேகத்துக்கு அவளால் ஈடு கொடுக்க முடியவில்லை. எங்கே இரயிலை விட்டுவிடுவோமோ என்ற பயத்தில் அழுகை வந்தது. கடவுளை வேண்டிக் கொண்டாள். வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினாள். இதோ இன்னும் இரண்டு பெட்டிகள் தான். மூச்சைப் பிடித்துக்கொண்டு ஓடினாள்.

* * * * * *

    வெகு நேரம் வரை இரயில் பெட்டியின் வாசலில் அமர்ந்திருந்தான் அவன்.

    “தம்பி உள்ள வந்து உட்காருப்பா!” போரப் போக்கில் ஒருவர் சொல்லிவிட்டுப் போக அதன் பின்பே நடப்புக்கு வந்தான். 
    
    கண்களைத் துடைத்துக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். ஏதோ ஒரு இரயில் நிலையத்தில் இருந்து மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது இரயில்.

    ஒரு பெரு மூச்சுடன் எழுந்தவன் உள்ளே போகத் திரும்ப, அப்பொழுது தான் நடைபாதையில் ஒரு இளம்பெண் இரயிலைப் பிடிக்க ஓடி வருவதைப் பார்த்தான்.

    சட்டென்று பரபரப்பானான். பெட்டியின் கடைசிப் படிக்கட்டில் நின்றுகொண்டு அவளை நோக்கி கை நீட்டினான்.

    “சீக்கிரம் ஓடி வாங்க!” குரல் கொடுத்தான்.

    ஏற்றிவிட ஆள் கிடைத்துவிட்ட நிம்மதியில் அவள் இன்னும் வேகமாக ஓடி வந்தாள். ஒன்று...இரண்டு...மூன்று நொடிகள் கடக்க, அருகே வந்துவிட்டாள் அவள்.

    சற்றே எம்பி, அவள் கையை இறுக்கமாகப் பிடித்தவன், கொஞ்சம் பலத்தைக் கொடுத்து அவளை அப்படியே பெட்டிக்குள் இழுத்தான்.

    அப்படியே அவன் நெஞ்சின் மேல் வந்து விழுந்தாள் அவள். கீழே விழாதவாறு அவள் இடையை இறுக்கப் பிடித்துக் கொண்டான். அவள் பாதுகாப்பாக ஏறி விட்டாள் என்பது ஊர்ஜிதமான பிறகே அவள் இடையிலிருந்த தன் கையை எடுத்தான். அவளும் சற்றுத்தள்ளி நின்று கொண்டாள்.

    “ஓகே வா!” அவளைப் பார்த்துக் கேட்டவன், அப்பொழுது தான் கவனித்தான். அவள் கண்கள் அழுதழுது சிவந்து போயிருந்தது. அதற்கு மேல் அவளிடம் எதுவும் கேட்கத் தோன்றவில்லை.

    அவளின் கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தவன் தன் பார்வையைத் திரும்பப் போன நேரம் அவளின் நெஞ்சில் தொங்கிக் கொண்டிருந்த லாக்கெட் செயின் இவன் கண்களில் விழுந்தது.

    அதைப் பார்த்ததும், சற்று முன்பு நடந்த நிகழ்வுகள் மடமடவென மனக் கண்ணில் வர, அழுகை முட்டிக்கொண்டு வந்தது அவனுக்கு. அதற்குள் அவளும் பக்கத்திலிருந்த கழிப்பறைக்குள் புகுந்து கொண்டாள். இவனுக்குமே இப்பொழுது அழ வேண்டும் போல இருக்க, அவள் சென்ற எதிர் கழிப்பறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டான்.

    கைகழுவும் சிங்க் மேல் கையை ஊன்றி கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தைப் பார்த்துச் சத்தமில்லாமல் அழுதவன், ஒரு கட்டத்தில் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல், விட்டத்தை வெறித்தவாறு வாய்விட்டுக் கதறி அழுதான்.

    அங்கே அவளோ, கழிப்பறை சுவற்றில் சாய்ந்து நின்றவாறு தன் புடவை முந்தானையால் வாயை இறுக மூடிக்கொண்டு அழுகையில் வெடித்தாள்.

    கண்ணீரில் கரைந்து கொண்டிருந்த இரு ஜீவன்களையும் தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்லும் விதமாக அப்படியும் இப்படியுமாய் குலுங்கியபடி சீறிப் பாய்ந்தது இரயில்.

கதைச்சுருக்கம் படிக்க

0 comments

Post a Comment

Message

Share your thoughts!

Address

Contact Info

Please share your feedback about the stories to the following email address.

Email:

Facebook