சம்வ்ரிதா - அத்தியாயம் 01
எங்குத் திரும்பினாலும் பச்சை பசேல் எனக் கண்ணனுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் வயல்வெளி. மதிய வேளை. ஆட்களை எரித்துவிடும் வெப்பத்துடன் சூரியன் தன் கதிர்களை வீசிக் கொண்டிருக்க, இவருக்கு உதவியாக வாயு பகவானோ, சூரியனின் வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டு அனல் காற்றை எங்கும் வீசிக் கொண்டிருந்தார்.
அந்த வயல்வெளிக்கு நடுவில், நெற்கதிர்கள் அறுக்கப்பட்டு, செம்மண் தரையாக இருந்த வெற்றிடத்தில், கிராமத்துக்கே உரிய அம்சங்களுடன் அழகாகச் செட் போட்டிருந்தார் அந்தப் படத்தின் கலை இயக்குனர். ஓலைகள் கூரையாக வேவபட்ட குடிசை இருக்க, அதன் பக்கத்தில் தண்ணீர் வாலி கொண்ட கிணறும், மாட்டு கொட்டகையும், அதன் அருகில் மாட்டுவண்டியும் எனக் கிராமத்துக்கே உரிய மண் மனம் வீசும் இடமாக மாறி இருந்தது.
அந்தக் குடிசையின் முன்பு, கிராமத்து உடைகளுடன் ஆண்களும் பெண்களுமாக, கிட்டத்தட்ட நாற்பது நடன கலைஞர்கள், ஆட தயாராக நின்று கொண்டிருக்க, அவர்களுக்கு முன், உதவி நடன இயக்குனர்கள் இருவர் நின்று, அடுத்து ஆடபோகும் நடனத்தைச் செய்து காட்டி கொண்டிருந்தனர்.
இவர்களைச் சுற்றி, லைட் மேனின் கைகளில் லைட்னிங் உபகரணங்கள், செயற்கை ஒளியையும் கூடவே சூரியனின் இயற்கையான வெளிச்சத்தையும் உமிழ்ந்து கொண்டிருக்க, கொஞ்சம் தள்ளி, தன்டாவாளம் போன்ற அமைப்பில், இவர்கள் அனைவரையும் தனக்குள் உள்ளிழுத்துக் கொண்டு படம்பிடிக்கப் போகும் அந்த ஜனரஞ்சக கேமரா வீற்றிருக்க, அதன் ஒருபக்க இருக்கையில் கேமரா மேன் உட்கார்ந்திருக்க, மறுபக்க சேர் காலியாக இருந்தது.
சற்றுத் தள்ளி மரங்கள் நிறைந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்தக் கேரவனில் (நடிகர்கள் உடைமாற்றும் வண்டி) சிரிப்புச் சத்தம் நிறைந்திருந்தது.
“ஹா...ஹா....அப்போ நாளைக்கு ப்ரெஸ் மீட்ல சொல்லப் போறீங்களா சர்?”
“ம்ம், ஆமாம் பிரம்மா.”
அவன் சொன்னதைக் கேட்டதும், தன் இருக்கையில் இருந்து எழுந்து சென்று அவனின் கையைப் பிடித்துக் குலுக்கிய பிரம்மா,
“கங்கராட்ஸ் சர். எப்போ நீங்களும் மேடமும் இப்படிச் சொல்வீங்கன்னு எல்லாரும் எதிர் பார்த்திட்டு இருந்தாங்க. நியுஸை கேட்டா எல்லாரும் கொண்டாடப் போறாங்க. உங்க ரெண்டு பேர் ஜோடி பொருத்தம், சூப்பரா இருக்கும் சர். கல்யாணத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள் சர். கட்டாயம் எனக்குப் பத்திரிக்கை கொடுக்கணும், மறந்துடாதீங்க.”
“அதெல்லாம் உன்னை மறக்க முடியுமா பிரம்மா. எங்களுக்கு ஆள் இன் ஆள் அழகு ராஜாவே நீதான.” என்று பதிலுக்கு அவன் சொல்லவும், அங்கே மீண்டும் ஒரு சிரிப்பலை.
“அப்புறம் சர், கல்யாணத்துக்கு அப்புறம் மேடமை நடிக்க அலோவ் செய்வீங்களா?”
“அது அவங்க இஷ்டம் பிரம்மா. கண்டினியு பண்ணனும்னு இஷ்டபட்டா தாராளமா நடிக்கலாம். நான் எதுவும் அப்ஜெக்ட் பண்ண மாட்டேன்.”
“அப்புறம் என்ன மேடம், சாரே சொல்லிட்டாரு. அப்படியே நமக்கும் படம் பண்ணனும். இப்போ உங்க ஜோடி தான் டாப்ல இருக்கு. நீங்க ரெண்டு பேரும் நடிக்கிற படம் ஸ்யூர் ஹிட். பாக்ஸ் ஆஃபீஸ் ஜோடின்னு உங்களுக்கு அவார்டே கொடுத்து இருக்காங்க. ரீல் பேரா இருக்கும் போதே, ரொமான்ஸ் சூப்பரா இருக்கும். ரியல் பேரா ஆகிட்டீங்கனா, அப்புறம் சீன்ஸ் பிச்சிக்கும்.” என்று அளவுக்கு அதிகமாகவே, அவர்களைப் புகழ்ந்து தள்ளினார் அந்தப் படத்தின் இயக்குனர் பிரம்மா.
அவர் சொன்னதைக் கேட்டு, ஒருவரை ஒருவரை பார்த்து வெட்கத்துடன் சிரித்துக் கொண்டனர் படத்தின் கதாநாயகன் துஷ்யந்த் மற்றும் கதாநாயகி மந்த்ரா. தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகன், கதாநாயகி இவர்கள் தான்.
துஷ்யந்த், நடிகன் மட்டுமில்லை, படத் தாயரிப்பாளரும் கூட. அவன் தயாரிக்கும் படமும் சரி, நடிக்கும் படமும் சரி, நிச்சய வசூலை அள்ளி தருபவை. மந்த்ராவும், துஷ்யந்தும், ஜோடியாக ஐந்து படங்கள் நடித்து இருக்கிறார்கள். அனைத்து படமும் ஹிட். இதற்காகவே, பாக்ஸ் ஆஃபீஸ் கப்புல்ஸ்’ என்ற விருது சமீபமாக இவர்களுக்கு வழங்கப்பட்டது.
துஷ்யந்த், கிட்டதட்ட ஆறு அடி உயரமும், தினமும் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்து, சிக்ஸ் பேக்கோடு, உயரத்துக்கு ஏற்ற எடையுடன் வாட்ட சாட்டமாக, கோதுமை நிறத்தில், பெண்களை வசீகரிக்கும், ஆணழகன் பட்டம் வாங்கியிருக்கும், முப்பத்தைந்து வயது ஆணழகன்.
மந்த்ரா, ஐந்தரை அடிக்கும் மேல், டையட்டின் பலனாக ‘ஜீரோ சைஸ்’ உடலுடன், மைதாமாவு நிறத்தில், கண்காளாலே பார்ப்பவரை சுண்டியிழுக்கும் அழகு தேவதை. ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் என்றால், பார்பி டால். அவளின் சிறப்பு அம்சமே, அவளுடைய கண்ணாடி போன்ற நீல நிற கண்கள் தான்.
ஆரம்பத்தில் படங்களில் மட்டுமே காதலித்தவர்கள், கடந்த ஓர் ஆண்டாக (??) நிஜமாகவே காதலிக்க ஆரம்பித்து விட்டனர். வீட்டில் இவர்கள் காதலுக்குப் பெற்றோர் சம்மதம் சொல்லவே, திருமணம் செய்வது என்று முடிவெடுத்திருக்கும் இருவரும், இதைப் பற்றிய அறிவிப்பை, நாளை மாலை பிரஸ் மீட்டிங்கில், லைவ்வாக மக்களுக்குச் சொல்ல போகிறார்கள். அதைப் பற்றித் தான் இங்கே பேச்சு நடந்து கொண்டிருக்கிறது.
பிரம்மா, வேகமாக வளர்ந்து வரும், தமிழ் திரைப்பட இயக்குனர். ஆரம்பத்தில், அறிமுக நடிகர்களை வைத்துப் படம் இயக்கி கொண்டிருந்தவன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, துஷ்யந்தை வைத்துப் படம் எடுக்க, அது மிகபெரிய ஹிட் ஆகவே, வெற்றியின் படிகளில் வேகமாக ஏற தொடங்கினான். இதோ இப்பொழுது, துஷ்யந்த், மந்த்ராவுடன் தொடர்ந்து மூன்றாவது படம். இவனின் அதிர்ஷ்டமோ, இல்லை அவர்களின் அதிர்ஷ்டமோ, இல்லை கதை நன்றாக இருந்ததோ, எதுவோ ஒன்று, இவர்கள் மூவரின் கூட்டணியில் உருவான, இரண்டு படமும் மிகப் பெரிய வசூலை ஈட்டி தந்தது. அதன் காரணமாகவே இதோ மூன்றாவது படமும் இவர்கள் கூட்டணியில் உருவாகி கொண்டிருக்கிறது. திருநெல்வேலியின், தென்காசி பக்கத்தில் இருந்த இந்த வயல்வெளிக்கு ஒரு பாடல் காட்சியைப் படம் பிடிக்க வந்திருக்கின்றனர்.
காலையில் ஆரம்பித்து. இந்த நடு மதியம் வரையிலும், பாடலின் ஐந்து சதவீதம் தான் எடுத்து முடிக்கபட்டுள்ளது. அதற்குள் பல பிரேக் விடபட்டுவிட்டது. தற்பொழுது, மதிய உணவு இடைவேளையின் பொழுது தான், இவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
“அப்புறம் சர், எப்போ மேரேஜ் டேட் முடிவு செஞ்சு வச்சுருக்கீங்க?”
“எல்லா டீடைல்ஸ்சையும் இப்போவே சொல்லிட்டா எப்படிப் பிரம்மா!! நாளைக்கு ப்ரெஸ் மீட்டிங்ல சொல்றேன் கேட்டுக்கோ. அத்தோட உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. அதையும் நாளைக்குத் தான் சொல்ல போறேன். பார்த்து தெரிஞ்சுக்கோ.”
“ஆஹா!! சர்ப்ரைஸா? என்னவா இருக்கும்? இதுவா? அதுவா? அதுவா? இதுவா?” என்று, பதிலுக்குக் கிண்டல் தோணியில் பிரம்மா சொல்ல, அதற்கு துஷ்யந்தும், மந்த்ராவும் சிரித்துக் கொண்டிருக்க, கேரவன் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
“அசிஸ்டன்ட் ஷாட்டுக்கு கூப்பிடுறான்னு நினைக்கிறேன். நான் கிளம்புறேன் சர். நீங்க மேக்கப் போட்டுட்டு வாங்க.” என்று சொன்ன பிரம்மா கதவை திறந்து பார்க்க, அவன் சொன்னது போலவே, அவனுடைய அசிஸ்டன்ட் கைலாஷ் வாசலில் நின்று கொண்டிருந்தான்.
“சர், ரொம்ப நேரமா எல்லாரும் வெயிட் பண்றாங்க.” என்று தலையைச் சொறிந்தபடி, அவன் தயங்க,
“அதான் வரேனே டா. அப்புறம் என்ன. நீ போ.” என்று அவனை அனுப்பி வைத்த பிரம்மா, மீண்டும் ஒருமுறை இருவரிடமும் சொல்லிக் கொண்டு கதவை மூடிவிட்டு வெளியேறினான்.
அவன் சென்றதும், “சரியான கிறுக்கனா இருப்பான் போல இந்த டைரக்டர்.” என்று சொல்லிவிட்டு மந்த்ரா சிரிக்க, “வெறும் கிறுக்கன் இல்லை பேபி, காரிய கிறுக்கன். இவனை மாதிரி ஆளும் நம்ம பக்கத்தில இருக்கிறது நல்லதுக்குத் தான். அப்போதான் நமக்குத் தேவையான காரியத்தைச் சாதிக்க முடியும்.” என்று எதையோ மனதுக்குள் நினைத்துக் கொண்டு துஷ்யந்த் சொல்ல, அவன் சொன்னதின் உள் அர்த்தம் புரிந்தவளாய் “ம்ம்ம்.” என்றாள் மந்த்ரா.
அடுத்தச் சில நிமிடங்களில், இருவரும் தயாராகி வெளியே வரவும், டச்சப் முடிந்து, நடனங்களை ஒரு முறை ஒத்திகை பார்த்துவிட்டு, ரெடி என்பது போலத் துஸ்வந்தும் மந்த்ராவும், பிரம்மாவை நோக்கி கட்டை விரலை தூக்கி காட்ட,
கேமராவின் ஒரு பக்க சேரில் அமர்ந்திருந்த பிரம்மா, “ரோல்லிங் கேமரா. ஆக்க்ஷன்!” என்று மைக்கில் சொல்ல, இமானின் இசையில், சமீபமாகப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும், அந்தக் குத்து பாடல் ஸ்பீக்கரில் ஒலிக்கவிடப்பட, கேமரா ஆங்கிளில் இருந்து சற்று தள்ளி நின்று கொண்டிருந்த நடன இயக்குனர், “1…2….3….4” என்று சொல்லிக்கொண்டே, கைகளில் ஜதி போட, குறிப்பிட்ட பாடல் வரி வந்ததும், ஆண்கள் குழுவும் பெண்கள் குழுவும் ஸ்டெப்ஸ் போட, அடுத்து இரு குளுவும் நடுவில் பிரிந்து இடம்கொடுக்க, இவர்களின் பின்னால் இருந்து துஷ்யந்த்தும். மந்த்ராவும் தங்களின் ஸ்டெப்சை ஆடிக்கொண்டே முன்னே வந்து நிற்கவும், ‘கட்’ என்று பிரம்மா மைக்கில் கத்தவும் அந்தக் காட்சி அப்படியே படமாக்கபட்டது.
சொன்னது போலவே அடுத்த நாள், மாலை பத்திரிக்கையாளர்கள் சங்க அலுவகத்தில், ப்ரெஸ் மீட்டிங் ஏற்பாடு செய்யபட்டிருக்க, தமிழ்நாட்டின் அனைத்துப் பத்திரிக்கை, தொலைக்காட்சி பத்திரிக்கையாளர்கள் அங்கே குழுமியிருக்க, அவர்களின் முன் புன்னகையுடன் அமர்ந்திருந்தனர் துஷ்யந்த்தும் மந்த்ராவும்.
சலசலப்பு அடங்கியதும், “நாங்க கூப்பிட்டதும் வந்ததுக்கு உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி. ஒரு முக்கியமான அனௌன்ஸ்மென்ட் பண்றதுக்குத் தான் உங்க எல்லாரையும் வர சொன்னேன்.” என்று சொன்ன துஷ்யந்த், ஒரு நொடி திரும்பி மந்த்ராவை பார்க்க, அவளின் முகத்தில் வெட்கத்தின் சாயல்.
பின் பத்திரிக்கையாளர்களின் பக்கம் திரும்பியவன், “அந்த முக்கியமான விஷயம் என்னனா, நானும் மந்த்ராவும் கூடிய சீக்கிரத்தில் கல்யாண பந்தத்தில இணைய முடிவு செஞ்சு இருக்கோம்.” என்று சொல்லி முடிக்கவும் அங்கிருந்தவர்கள் மத்தியில் திடீர் சலசலப்பு.
ஒருசிலர் “கன்ங்ராட்ஸ் சர். கன்ங்ராட்ஸ் மேம்.” என்று தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க, மற்றவர்களோ, அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பிக்க, “சைலென்ஸ் ப்ளீஸ். ஒவ்வொருத்தரா கேளுங்க. ஒரு நிமிஷம் ப்ளீஸ். அமைதியா இருந்தா தான் உங்க கேள்வி எனக்குக் கேட்கும். கேட்டாதான் பதில் சொல்ல முடியும். சொல்றதை கேளுங்க.” என்று துஷ்யந்த், தொண்டை தண்ணீர் வற்ற கத்திய பின்னரே, ஒருவழியாக எல்லோரும் அமைதியாக இருந்தனர்.
அதன் பின், “நிச்சயம் இந்த விஷயம் உங்களுக்கு ஷாக்கா தான் இருக்கும். உங்க எல்லார் கேள்விக்கும் பதில் சொல்றேன். தயவு செஞ்சு ஒவ்வொருத்தரா கேளுங்க. ப்ளீஸ்.” என்று துஷ்யந்த் சொல்லவும், ஒவ்வொருத்தராகத் தங்களது கேள்விகளைக் கேட்க அரம்பித்தனர்.
“சர், ஏன் இந்தத் திடீர் முடிவு?”
“திடீர் முடிவெல்லாம் இல்லை சர். ஒரு வருஷமா நாங்க ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம். எங்க ரெண்டு பேர் வீட்டுலையும் விஷயத்தைச் சொன்னோம். அவங்களுக்கும் சம்மதம். சோ கல்யாணம் பண்ண முடிவு எடுத்துருக்கோம்.”
“சர், அப்போ லவ் மேரேஜ்ஜா?”
“ஹம், ஆமாம்.” என்றான் புன்னகையுடன்.
“சர் அப்போ நீங்க நடிச்சிட்டு இருக்கிற படம்?”
“அந்தக் கமிட்மென்ட்ல எந்தச் சேஞ்சும் இல்லை. வீ வில் கண்டினியு த மூவி.”
“மேடம் கல்யாணத்துக்கு அப்புறம் நடிப்பாங்களா?”
“அவங்களுக்கு விருப்பம்னா நிச்சயம் நடிப்பாங்க. நான் அவங்க முடிவுல தலையிட மாட்டேன். அண்ட் நான் எதுவும் தடை சொல்ல மாட்டேன்.”
“சர் நீங்க தான் பேசிட்டே இருக்கீங்க. மேடம் வந்ததில இருந்து ஒண்ணுமே பேசல. எப்போவும் ப்ரெஸ் மீட்னா மேடம் நிறையப் பேசுவாங்க. இப்போ ரொம்ப அமைதியா இருக்காங்க. நீங்க அவங்களை எதுவும் மிரட்டி வச்சு இருக்கீங்களா?” என்று ஒரு நிருபர் கிண்டலாகக் கேட்க, “ஹா.... ஹா நான் அவங்களை மிரட்டி வச்சுருகேனா! என்ன ப்ரோ நீங்க?!! அவங்க என்னை வீட்டு வேலை செய்யச் சொல்லி மிரட்டாம இருந்தா சரிதான்.” என்று சொல்லிவிட்டு துஷ்யந்த் சிரிக்கவும், அவனின் இடுப்பில் முழங்கையால் இடித்தாள் மந்த்ரா. இதைப் பார்த்து சட்டென்று அங்கே ஒரு சிரிப்பலை. புன்னகையுடன் மந்த்ரா பக்கம் திரும்பிய துஷ்யந்த், ‘பேசு’ என்பது போலக் கண்களால் சைகை செய்ய, அவனை முறைத்துகொண்டே மைக் பக்கம் திரும்பியவள்,
“ஜஸ்ட் அவர் பேசிட்டி இருக்காறேன்னு அமைதியா இருக்கேன். வேற ஒன்னும் இல்லை.” என்று கூறி சமாளிக்க, அதற்கும் அங்கே சிரிப்பு.
“மேடம் உங்க லவ் ஸ்டோரி சொல்லுங்க ப்ளீஸ். ஃபேன்ஸ்காக.” என்று மற்றொருவர் வேண்டுமென்றே கேட்க,
“ஆரம்பத்தில நாங்க நல்ல நண்பர்களா தான் பழகிட்டு இருந்தோம். ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான் நாங்க ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றதை புரிஞ்சுகிட்டோம். ஒன் இயரா, பேசி பழகி, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிகிட்டு, கல்யாணம் செய்யலாம்ன்னு முடிவெடுத்த பிறகு இரண்டு பேர் வீட்டுலையும் பேசினோம். அவங்களும் சம்மதம் சொல்லிட்டாங்க.”
“யாரு மேம் மொதல்ல ப்ரொபோஸ் பண்ணா? நீங்களா? சரா?” என்ற கேள்வி கேட்கப்பட்டதும், மந்த்ரா துஷ்யந்தை பார்க்க, அவனும் இவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். இருவர் பார்வையும் காதலுடன் ஒருவரை ஒருவர் தழுவி சென்றது. அந்தப் பார்வை வீச்சை தாளாமல் காதோர முடியை ஒதுக்குவது போலத் தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள் மந்த்ரா.
“நான் தான் ஃபஸ்ட் ப்ரொபோஸ் பண்ணேன்.” என்று மந்த்ராவிடம் கேட்கப்பட்ட கேள்விக்குத் தானே பதில் சொன்னான் துஷ்யந்த்.
“எப்போ சர் உங்க மேரேஜ்?”
“இப்போ நடிச்சிட்டு இருக்கிற படம் முடிஞ்சதும், டைரக்ட்டர் பிரம்மா ஒரு ஸ்டோரி சொல்லி இருக்காரு. கதை எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சு இருக்கு. அதையும் முடிச்சிட்டு அப்புறம் கல்யாணம் தான்.” என்று கேமரா லென்ஸ் பார்த்து அவன் சொல்லவும்,
இங்கே தன் வீட்டுத் தொலைகாட்சியில் இவர்களின் பேட்டியை லைவ்வாகப் பார்த்துக் கொண்டிருந்த பிரம்மாவிற்கு மகிழ்ச்சி. “தேங் யு சர். தேங் யு சோ மச்!!” என்று உற்சாகத்தில் துள்ளி குதிக்க ஆரம்பித்து விட்டான். அதைப் புரிந்தவனாக இங்கே துஷ்யந்தும், கட்டை விரலை தூக்கிகாட்டி புன்னகைத்தான்.
“சர் நீங்க சொன்ன கதை என்ன மாதிரி சர். பட டைட்டில்?”
“இது ஒரு ஹாரர் சப்ஜெக்ட். டைட்டில் சம்வ்ரிதா.”
“சர் டைட்டில் வித்தாயசமா இருக்கு. என்ன அர்த்தம் சர்?”
“மாயையால கண்ணனுக்குத் தெரியாதவங்கன்னு அர்த்தம்.”
“படம் எப்போ ஸ்டார்ட் பண்ணப் போறீங்க?”
“ஆண்கோயிங் மூவில ஒரு பாட்டு மட்டும் ஷூட் பண்ண வேண்டி இருக்கு. அது முடிஞ்சதும், அடுத்த மூவி ஷூட்டிங் ஸ்டார்ட் செஞ்சுட வேண்டியது தான்.”
அந்த நேரம் துஷ்யந்தின் பி.ஏ ஃபோனில் அழைக்கவும், நேரம் ஆவதை உணர்ந்து, “ஷூட் போகணும் டைம் ஆகுது. Any Last Question?” என்று நிருபர்களைப் பார்த்து அவன் கேட்கவும், ‘நான்’, ‘நீ’ என்று ஆளாளுக்குக் கைகளை உயர்த்த, இரண்டு வரிசை அடுத்து அமர்ந்திருந்த ஒருவரை துஷ்யந்த் சுட்டிக்காட்ட, எழுந்து நின்ற அவரோ,
“சர், நக்க்ஷத்திராவும் நீங்களும் லவ் பண்ணதாகவும், ரெண்டு பேரும் கூடிய சீக்கிரம் கல்யாணம் செய்யப் போறதாகவும், அவங்க ஒரு பேட்டில சொல்லி இருந்தாங்க. நீங்களும் அப்போ அதுக்கு எந்தப் பதிலும் சொல்லல. சோ அவங்க சொன்ன செய்தி உண்மைன்னு ஒரு ரூமர் இருக்கு, அதைப் பத்தி உங்க கருத்து என்ன சர்?” என்று அனைவர் முன்பும் பட்டென்று அவர் கேட்டுவிட,
எந்தப் பெயரை கேட்கக் கூடாது என்று கடந்த ஒரு வருடமாக நினைத்திருந்தானோ, எந்தப் பெயரை கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தானோ, அந்தப் பெயரை கேட்டதும், கடந்தவை எல்லாம் படம் போல அவன் கண் முன் ஓட, கோபத்தில் பற்களைக் கடித்தவனின் கைமுஷ்டி, கேள்வி கேட்டவரை அடித்துவிடும் வெறியில் இறுகியது.
அந்த நிருபர் இப்படி ஒரு கேள்வி கேட்டதுமே துஷ்யந்தின் ரியாக்க்ஷன் இப்படிதான் இருக்கும் என்று யூகித்த மந்த்ரா, அவன் பக்கம் திரும்பாமல், யாரும் அறியாதபடி, அவனின் கைமுஷ்டியை அழுத்தி பிடித்தவள், “கால்ம் டவுன் ஹனி!” என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி கூறி, கையைத் தட்டி கொடுத்தாள்.
இதில் கொஞ்சமே கொஞ்சம் ஆஸ்வாசம் அடைந்தவன், சில நொடிகளில் கழித்து, ஆழ மூச்செடுத்துத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன் முகத்தைச் சாதரணமாக வைத்துக்கொண்டு,
“எங்களுக்குள்ள அப்படி எதுவும் இல்லை. நான் யாரையும் இதுக்கு முன்னாடி லவ் பண்ணதில்லை. மே பீ அவங்க என்னை விரும்பி இருக்கலாம். ஆனா எனக்கு அப்படி எந்த ஒரு எண்ணமும் இருந்ததில்லை. அவங்க கூட ஒரு நண்பனா தான் பழகினேன். எங்களுக்குள்ள வேற எதுவும் இல்லை. அந்த ரூமர்ஸ் எல்லாம், பேஸ்லெஸ். அதுக்கு எந்த ஆதாரமும் இல்லை.” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் இவன் சொல்லி முடித்த அடுத்த நொடி,
அந்த அறையின் கதவு, சூறாவளியில் சிக்கிக் கொண்டது போல ‘டம்’ என்ற பயங்கரச் சத்தத்துடன் மூடிக்கொள்ள, அதே நேரம், டேபிள் மேல் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் க்ளாஸ், பட்டென்று கீழே விழுந்து நொறுங்கியது. துஷ்யந்த், மந்த்ரா உள்ளிட்ட அனைவருமே ஒருநொடி அதிர்ந்து தான் போயினர். அடுத்த நொடி, தன் இருக்கையில் இருந்து எழுந்துகொண்ட துஷ்யந்த், ‘நன்றி’ என்று கைகூப்பிவிட்டு, மந்த்ராவுடன் வெளியேறினான்.
இவை அனைத்தையும், தன் வீட்டின் ஹாலில் இருக்கும் 73 இன்ச் தொலைக்காட்சி திரையில் பார்த்துக் கொண்டிருந்த கிருஷின் முகத்தில், கோபம், சோகம், விரக்தி, போன்ற கலவையான உணர்வுகள் மாறி மாறி வந்தது.
கிருஷும், துஷ்யந்தை போல, தமிழ் சினிமாவில் ஒரு நடிகன் தான். இன்னும் சொல்லப் போனால், சில வருடங்கள் முன்பு, துஷ்யந்தை விட முன்னனியில் இருந்தவன். ஆனால் தன் குறுக்கு புத்தியாலும், எங்கெங்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற தந்திர புத்தியாலும், இவனுக்குக் கிடைக்கவேண்டிய பட வாய்ப்புகளைத் துஷ்யந்த் தட்டிப் பறிக்க, பலன் இன்று அவன் நம்பர் ஒன் நடிகன். இவனோ வளரந்து கொண்டிருக்கும் நடிகன்.
இதோ அடுத்த மாதம் கிருஷ் ஹீரோவாக நடிக்கப் போகும் புதுப் பட ஷூட்டிங் ஆரம்பம் ஆகப் போகிறது. அதில் இவன் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதால், அதற்கேற்ற உடல்கட்டை கொண்டு வர, பயிற்சியில் இருக்கிறான்.
கிருஷ், ஆறு அடியில், கோதுமை நிறத்தில், துஷ்யந்த் போல் வாட்ட சாட்டமாக இல்லாமல், கொஞ்சம் ஒல்லியாக இருப்பான். அதனால் பட இயக்குனர், இவனை உடல் எடை அதிகரித்துப் பயிற்சி செய்யும்படி கூறி இருப்பதால், தினமும், ஜிம் ட்ரைனிங், ரன்னிங், டிரைவிங், குதிரை சவாரி, துப்பாக்கி சுடுதல் எனப் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடுபவன் வீடு வந்து சேர மாலை ஆகிவிடும்.
இன்றும் அப்படிதான் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தவன், முகம், கை கால் கழுவிவிட்டு, ஹால் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியை ஆன் செய்ய, எல்லாச் சேனலிலும் துஷ்யந்த் பேட்டி தான் ஓடி கொண்டிருந்தது. இந்தத் திருமணத்தை முன்பே எதிர்பார்த்தவன் தான். அதனால் இது அவனுக்குப் புதிய செய்தியாகத் தெரியவில்லை. சரி என்று தொலைக்காட்சியை ஆஃப் செய்யப் போகும் பொழுது தான், நக்க்ஷத்திரா சம்பந்தப்பட்ட கேள்வியை அந்த நிருபர் கேட்க, ரிமோட்டை அப்படியே கீழே வைத்துவிட்டு, கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.
அவர் கேட்ட கேள்விக்குத் துஷ்யந்த் என்ன பதில் சொல்ல போகிறான் என்று கூர்மையாகக் கவனிக்க, அவன் பதிலில் அப்பட்டமான அதிர்ச்சியும, ஆத்திரமும் அடைந்தவன், “எப்படி இப்படிலாம் உன்னால பொய் சொல்ல முடியுது டா, ச்சேய்!!!! அவ உன்னை எவ்வளவு நம்புனா, உன்னை எந்த அளவுக்கு லவ் பண்ணா, வெறும் லவ் மட்டுமா டா........எவ்வளவோ சொன்னேன். அவன் உனக்கு வேண்டாம். நல்லவன் மாதிரி தெரியலைன்னு. கேட்டாளா அவ. இப்போ அவளையே, நான் லவ் பண்ணல, எங்களுக்குள்ள ஒன்னும் இல்லைன்னு சொல்றியே டா. ச்சேய்!! உன்னை மாதிரி ஆளுங்களைத் தான் டா, நல்ல பொண்ணுங்க எல்லாம் நம்பி ஏமாந்து போகுது.” என்றவன், கோவத்தில் தன் கையில் இருந்த ரிமோட்டை தூக்கி வீச, அது சுவற்றில் பட்டு, கீழே விழுந்து பல பாகங்களாக நொறுங்கியது.
இன்னும் கோபம் அடங்காமல், “உன் அருமை காதலன் சொல்றது கேக்குதா டி. நல்லா கேளு. அன்னைக்குக் கண்ணே மணியேன்னு உன்னைக் கொஞ்சுனவன், இன்னைக்குச் சொல்றதை நல்லா காது குளிர கேளு.” என்று காற்றில் கைகளை வீசி இவன் இங்கே திட்டிகொண்டிருந்த நேரம்,
அங்கே, ப்ரெஸ் மீட்டிங்கில், கதவு அடைத்தது, தண்ணீர் க்ளாஸ் விழுந்து நொறுங்கியது எல்லாம் நடந்தது. ஆனால் இவன் இருந்த கோவத்திற்கு இதெல்லாம் அவன் கண்களில் தெரியவில்லை. தொலைகாட்சியைத் திரையைக் கூர்ந்து பார்த்திருந்தால், வேறு ஒரு விஷயமும் இவனுக்குத் தெரிந்திருக்குமோ?
சென்னையின் முக்கிய இடத்தில், அபார்ட்மெண்ட்கள் பல ஒன்றாக ஒரே காம்பவுண்ட்டுக்குள் இருக்கும், கேட்டட் கம்யுனிட்டி அது. இரவு உணவை முடித்துக்கொண்டு குடியிருப்பு வாசிகள் சிலர், உள்ளே இருந்த பார்க்கில் நடைபயின்று கொண்டிருந்தனர்.
பார்க்கின் பெஞ்சில் அமர்ந்து, தெரிந்தவரிடம் பேசி கொண்டிருந்தார் 65 வயது மூதாட்டி பத்மினி. ஆனால் பார்பதற்கு ஐம்பது வயது போலத் தான் தெரிவார். அவர் அருகில் அவர் வீட்டின் செல்ல பிராணியான ‘கோல்டன் ரிட்ரீவர்’ நாய் வகையைச் சேர்ந்த, பத்து வயது ‘கோல்டி’. அதன் நீளமான சரும முடிகள் வெயிலில் மின்னுவதால் அதற்கு அந்தப் பெயரை வைத்தாள் பத்மினியின் பேத்தி மாயா.
சிறிது நேரம் பேசிவிட்டு இரண்டாம் தளத்தில் இருந்த தனது வீட்டுக்கு வந்தவருக்கு வீட்டில் நிலவும் இருளை பார்த்ததும், மனம் முழுவதும் ஒரு வெறுமை சூழ்ந்தது. தன் பேத்தி தன்னைக் கேலி செய்து சிரிக்கும் ஒலி அப்பொழுது காதில் விழுந்து, அவர் நெஞ்சில் இருந்த வடுவை கீறிவிட அந்த முதியவரின் கண்கள் கலங்கியது.
அமைதியாக உள்ளே வந்து கதவை அடைத்து பூட்டியவர், கோல்டியின் கழுத்து பட்டையைக் கழட்டி விட்டுவிட்டு, கண்ணீர் வழியும் கண்களைத் துடைத்துக் கொண்டு, கிட்சனுக்குச் சென்றவர், அடுத்த ஐந்து நிமிடத்தில், நாய்க்கு பாலை காய்ச்சி எடுத்து வந்து அதன் கிண்ணத்தில் ஊற்றினார். வழக்கம்போலக் கோல்டியும் அமைதியாக வந்து அந்தப் பாலை குடித்துவிட்டு, இவரின் பேத்தி மாயாவின் அறையில் சென்று தரையில் படுத்துக்கொண்டது. பால்கனி கதவு, ஜன்னல் எல்லாவற்றையும் தாழ் போட்டுவிட்டு தன் அறைக்குப் படுக்கச் சென்றார் பத்மினி.
அறைக்குள் வந்தவரின் கண்களில், சுவற்றில் மாட்டப்பட்ட தன் பேத்தியின் போட்டோ பட, மெல்ல அதன் அருகில் சென்று, அதில் இருந்த உருவத்தை வருடி கொடுத்தவருக்கு, தன் பேத்தியின் இறப்பை இன்றும் ஜீரணிக்க முடியவில்லை.
கண்கள் கலங்க ஃபோட்டோவையே பார்த்தவர், பக்கத்தில் இருந்த மற்றொரு படத்தைப் பார்க்க, அதில் இவரின் மகன், மருமகள் இருவரும் சேரில் அமர்ந்திருக்க, அவர்களுக்குப் பின்னால் காலேஜ் போகும் வயது பெண்ணாக, நின்று கொண்டிருந்தாள் மாயா.
அந்தப் படத்தைப் பார்த்தவருக்கு, துக்கம் தாங்கவில்லை. “வாழவேண்டிய என் புள்ளைங்க எல்லாம் இந்த உலகத்தை விட்டுச் சீக்கிரம் போய்ச் சேர்ந்துட்டாங்க. ஆனா எனக்கு மட்டும் இன்னும் நாள் வரலையே.” என்று அழுகையுடன் கூறியவர், சில நொடிகள் படத்தையே பார்த்து வேதனையில் உழன்றவர், பின் அந்த மன பாரத்திலேயே உறங்கியும் போனார்.
நேரம் நள்ளிரவை நெருங்கி கொண்டிருந்தது. மாயாவின் அறையில் கண்களை மூடி படுத்திருந்த கோல்டியின் நாசியில் திடீரென்று ஏதோ ஒரு வாசம் வரவும், பட்டென்று கண்களைத் திறந்து சுற்றும் முற்றும் பார்த்தது, யாரும் இல்லை. ஆனால் அந்த வாசம், மிகவும் பரிச்சயமான ஒன்று என்பதால் அதால் அமைதியாகப் படுத்திருக்க முடியவில்லை. உள்ளுக்குள் ஏதோ ஒரு உணர்வு தோன்ற, தன் இடத்தை விட்டு எழுந்துகொண்ட கோல்டி, அந்த வாசத்தை நுகர்ந்து கொண்டே ஹாலுக்கு ஓடிவர, அங்கு வந்து சுற்றும் முற்றும் பார்வையைச் சுழலவிட, இறுதியில் ஒரு இடத்தில நிலைகுத்தி நின்றது அதன் கண்கள்.
தூரத்தில் ஹால் ஓரத்தில் தொங்கி கொண்டிருந்த அந்த மர ஊஞ்சலில், மேகம் மிதப்பது போல, வெள்ளையாகக் காற்றில் மிதந்து கொண்டு, மனித கண்களுக்குப் புலப்படாத நட்சிதர ஒளியை போல, அதீத வெளிச்சத்துடன் ஆத்மாகாவாக நின்று கொண்டிருந்தாள் பத்மினியின் பேத்தி ‘மாயா’. கோல்டியை பார்த்த மாயா, தன் கைகளை ‘வா’ என்பது போல அதனை நோக்கி விரிக்க,
தன் முன் நிற்கும் உருவம் யார் என்பதைக் கண்டுகொண்ட அடுத்த நொடி, தனது வாலை வேகமாக ஆட்டியபடி, மூக்கால் அந்த உருவத்தை ஸ்வாசித்துக் கொண்டும் தயங்கி தயங்கி மாயாவை நோக்கி சென்றது கோல்டி. தன் அருகில் நெருங்கியதும் மாயா, நாய் அருகில் மண்டியிட்டு, “நான் யாருன்னு தெரியலையா டா??” என்று கேட்க, அடுத்த நொடி, அது யார் என்று முழுவதும் உணர்ந்துகொண்ட கோல்டி, “அவ்வ்வ்வ்!!!!!” என்று அழுகையுடன், மாயாவின் முகத்தை நக்கி கொண்டே, கிட்டத்தட்ட பாயாத குறையாக, அவளைச் சுற்றி சுற்றி வந்தது. பல மாதங்கள் கழித்துத் தன் தோழியைப் பார்த்த மகிழ்ச்சியில், ஏக்கத்தில், நாயின் கன்னத்திலோ கண்ணீர் கோட்டின் தடம் கருப்பாகத் தெரிந்தது.
“உன்னைப் பார்த்து எத்தனை நாள் ஆச்சு டா!!! எப்படி டா இருக்க?? பாட்டி எப்படி இருக்காங்க?? சாப்பிடலையா டா. ரொம்ப இளைச்சு போயிருக்க.” என்று கலங்கிய குரலில் நாயை அணைத்தவாறு மாயா கேட்க, கோல்டியோ அவள் நெஞ்சில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டது. தன் கையையோ அவளின் தோளில் போட்டுக் கொண்டு, அவளை இனி எங்கும் விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தது. பதிலுக்கு நாயை தன்னோடு இறுக்கி கொண்டாள் மாயா. சில நொடிகள் இருவரும் அப்படியே இருக்க, நாயின் தலையில் சொட்டு சொட்டாக ஈரத்தின் சுவடு பதிய ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்தல்லவா இருவரும் பார்க்கிறார்கள்.
வெகு நேரம் உணர்ச்சியின் பிடியில் இருந்த மாயா, பின் தன்னிடம் இருந்து கோல்டியை பிரித்தவள், பாட்டியை கான அவர் அறைக்குச் சென்றாள்.
அண்ணா நகரில், நடிகர்கள் பல பேர் குடியிருக்கும் அந்தப் பகுதியில் இருந்தது துஷ்யந்தின் வீடு. பழமையும், புதுமையும் கலந்து பணத்தைத் தண்ணீராகச் செலவழித்து, அரண்மனை போல முன்னே தூண்களுடன் கூடிய போட்டிக்கோவும், வீட்டை சுற்றிலும் வெகு தாராளமாக இடம் விட்டு, சுற்றிலும் புல்வெளியும், முன்பக்கம் தோட்டமும் ஊஞ்சலும் வைத்து கட்டி இருந்தான். வெளியில் இருந்து பார்த்தாலே, முக்கியப் புள்ளியின் வீடு என்று தெரியும். அளவுக்கு அதிகமான ஆடம்பரம் ஒவ்வொரு கல்லிலும் தெரிந்தது.
அந்த இரவு நேரத்தில், வெளி பார்ட்டியை முடித்துக்கொண்டு சற்றுமுன்பு தான் வீட்டிற்கு வந்திருந்த துஷ்யந்த், மாடியில் உள்ள பார் வசதி கொண்ட அந்த அறையில், சோபாவில் அமர்ந்து, தன் கையில் இருந்த அந்த வெளிநாட்டு மதுபான பாட்டிலின் மூடியை திறக்க போராடி கொண்டிருந்தான்.
அரைப் போதையில் இருக்கும் தன் எஜமானனின் கையில் இருந்த பாட்டிலை கிட்டத்தட்ட பிடுங்காத குறையாக வாங்க போராடி கொண்டிருந்தான் அந்த வீட்டின் வேலைக்காரன்.
“சர், ஏற்கனவே ஒரு புல் பாட்டில் காலி செஞ்சுட்டீங்க. இதுக்கு மேல வேண்டாம் சர். உடம்புக்கு நல்லதில்லை, போதும் சர். டைம் பாருங்க ஒரு மணி ஆகப் போகுது. தூங்குங்க சர்.” என்று வேலையாள், மீண்டும் மீண்டும் சொல்லிகொண்டிருக்க,
துஷ்யந்தோ, “விடு குமார். எனக்கு இப்போ இது வேணும். என்னால இது இல்லாம தூங்க முடியாது. எல்லாத்தையும் நியாபக படுத்திட்டு போய்ட்டானுங்க. என் நிம்மதியே போய்டுச்சு. என் சந்தோசம் போச்சு. எல்லாம் போச்சு. எங்க போனாலும், நக்க்ஷத்திரா, நக்க்ஷத்திரா, நக்க்ஷத்திரான்னு அவ பேரை சொல்லியே என்னைக் கொல்றானுங்க. **** ****** *****” என்று வாயுக்கு வந்ததை வார்த்தைகளைக் கத்தி கொண்டிருந்தான் துஷ்யந்த்.
எப்படியோ அவனிடம் இருந்து பாட்டிலை வாங்கி ஷெல்பில் வைத்து பூட்டிய குமார், தன் போக்கில் புலம்பிக் கொண்டிருந்த எஜமானனின் ஷூவை கழட்டி, ஆடையைத் தளர்த்திவிட்டு, படுக்கையில் படுக்கவைத்துவிட்டு, லைட்டை ஆஃப் செய்துவிட்டு அறை கதவை அடைக்கப் போகும் நேரம், “டேய்! குமாரு, ஏ.சியை ஆஃப் பண்ணுடா. ரொம்பக் குளிருது.” என்று கத்தினான் துஷ்யந்த்.
சரி என்று லைட்டை மீண்டும் போட்டுவிட்டு, ஏ.சி ரிமோட்டை தேடி எடுத்த குமார் அப்பொழுது தான் கவனித்தான், ஏ.சி ஏற்கனவே ஆஃபில் இருப்பதை. குழப்பத்துடன், “சர், ஆஃப்ல தான் இருக்கு.” என்று பதிலுக்குக் குரல் கொடுக்க,
துஷ்யந்தோ, “டேய்! பொய் சொல்லாத. ஆஃ பண்ணு. குளிரு தாங்கலடா.” என்று மீண்டும் குரலை உயர்த்த, அவன் அருகில் சென்ற குமார், அவனின் உடம்பை தொட்டுப் பார்க்க, சூடாகத் தான் இருந்தது. பின்பு எப்படி? என்று குழம்பியவனுக்கு, ‘ஒருவேளை ஃபாரீன் சரக்கை அடிச்சா குளிருமோ!!’ என்ற கேள்வி மனதுக்குள் எழுந்தது. இருந்தும், நாளை வேலைக்கு நேரமாவதை உணர்ந்து, “ஆஃப் செஞ்சுட்டேன் சர்.” என்று துஷ்யந்திடம் பொய் சொல்லிவிட்டு, கதவை அடைத்துவிட்டு கீழே சென்றான்.
வெளியே காற்றுப் பலமாக வீசி கொண்டிருக்க, மரங்களின் கிளைகள் யாவும், நாளா பக்கமும் ஆபத்தான முறையில் சாய்ந்து ஆடி கொண்டிருக்க, திடீரென்று மின்சாரம் தடைபட, எங்கும் கும்மிருட்டுச் சூழ்ந்தது. அந்த நேரம், துஷ்யந்த் படுத்திருக்கும் அறை ஜன்னலில், நிலவொளியின் வெளிச்சத்தில், மர கிளைகள் அசைந்தாடுவது தெரிய, அவைகளுக்கு இடையில், சிவப்பு நிறத்தில் நெருப்பை உமிழ்ந்து கொண்டிருக்கும் இரு கண்கள் பிரகாசமாகத் தெரிந்தது. அந்தக் கண்களில் தெரிந்த தீ ஜுவாலையில், அதன் கோபத்தின் அளவு தெரிய, கட்டிலில் படுத்திருக்கும் துஷ்யந்தையே பார்த்துக் கொண்டிருந்தது அந்தக் கண்கள். அடுத்த நொடி தாழ் போடபட்டிருந்த ஜன்னல் கதவு பட்டென்று திறந்துகொண்டது.

0 comments
Post a Comment